கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் |
|
அதிகாரம்
9
|
திருத்துதரின் உரிமைகளும் கடமைகளும் 1 எனக்குத் தன்னுரிமை
இல்லையா? நானும் ஒரு திருத்தூதன்
அல்லவா? நம் ஆண்டவர் இயேசுவை நான்
காணவில்லையா? நான் ஆண்டவருக்காகச்
செய்த வேலையின் விளைவாகத்தானே
நீங்கள் இந்நிலையில்
இருக்கிறீர்கள்?2 நான் திருத்தூதன் என
மற்றவர்கள்
ஏற்றுக்கொள்ளாவிடினும்
உங்களுக்கு நான் திருத்தூதன்
தானே! நீங்கள் ஆண்டவரோடு
கொண்டுள்ள உறவே என்
திருத்தூதுப்பணிக்கு அடையாளச்
சின்னமாய் அமைகிறது.3 இது குறித்து என்னிடம்
கேள்வி கேட்போருக்கு எனது
விளக்கம் இதுவே:4 உண்பதற்கும்
குடிப்பதற்கும் உரியவற்றைப்
பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை
இல்லையா?5 மற்றத் திருத்தூதரும்
ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும்
செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள
மனைவியரை எங்களோடு அழைத்துச்
செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?6 பிழைப்புக்காக
உழைக்காமலிருக்க எனக்கும்
பர்னபாவுக்கும் மட்டுந்தான்
உரிமை இல்லையா?7 யாராவது எப்போதாவது
ஊதியமின்றிப் படைவீரராகப்
பணியாற்றுவாரா? திராட்சைத்
தோட்டம் போட்ட யாராவது அதன்
பழங்களை உண்ணாதிருப்பாரா? மந்தையை
மேய்க்கும் ஆயர் அதன் பாலை
அருந்தாதிருப்பாரா?8 மனித வழக்கத்தை மட்டும்
வைத்து நான் இதைச் சொல்லவில்லை.
திருச்சட்டமும் இதையே
சொல்லவில்லையா?9 மோசேயின் சட்டத்தில், போர்
அடிக்கும் மாட்டின் வாயைக்
கட்டாதே என்று எழுதியுள்ளதே!
மாடுகளைப் பற்றிய கவலையினால்
கடவுள் இதைச் சொல்கிறாரா?10 அல்லது எங்கள் பொருட்டு
இதைச் சொல்கிறாரா? ஆம், இது எங்கள்
பொருட்டே எழுதப்பட்டுள்ளது.
ஏனெனில், தமக்குப் பங்கு
கிடைக்கும் என்னும்
எதிர்நோக்குடன் உழுகிறவர்
உழவேண்டும்: போரடிக்கிறவரும் அதே
எதிர்நோக்குடன் போரடிக்க
வேண்டும்.11 நாங்கள் ஆவிக்குரியவற்றை
உங்களிடையே விதைத்திருப்பதால்,
எங்கள் உடலுக்குரிய தேவைகளை
உங்களிடமிருந்து அறுவடையாகப்
பெற்றுக் கொள்வது மிகையாகாது
அல்லவா?12 உங்களிடம் பங்கு பெற
மற்றவர்களுக்கு உரிமை இருந்தால்,
எங்களுக்கு அதைவிட அதிக
உரிமையில்லையா?
அப்படியிருந்தும்கூட, நாங்கள்
இந்த உரிமையைப் பயன்படுத்திக்
கொள்ளவில்லை. கிறிஸ்துவைப்பற்றிய
நற்செய்திக்கு எத்தடையும்
வராதவாறு எல்லாவற்றையும்
பொறுத்துக் கொள்கிறோம்.13 கோவிலில் வேலைசெய்வோர்
கோவில் வருமானத்திலிருந்தே
உணவுபெறுவர்: பீடத்தில்
பணிபுரிவோர் பலிப்பொருட்களில்
பங்கு பெறுவர். இது உங்களுக்குத்
தெரியாதா?14 அவ்வாறே, நற்செய்தியை
அறிவிக்கிறவர்கள்
அந்நற்செய்தியின் மூலமாகவே
பிழைப்புக்குரியவற்றைப்
பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம்
ஆண்டவர் பணித்திருக்கிறார்.15 ஆனால் இவ்வுரிமைகளில்
எதையும் நான் பயன்படுத்திக்
கொள்ளவில்லை. நான் அவற்றைப்
பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும்
எண்ணத்துடன் எழுதவுமில்லை.
அவ்வாறு பெற்றுக்கொள்வதைவிட நான்
சாவதே நல்லது. எனக்குரிய பெருமையை
எவரும் அழித்துவிட முடியாது.16 நான் நற்செய்தியை
அறிவிக்கிறேன் என்றாலும் அதில்
நான் பெருமைப்பட ஒன்றுமில்லை.
இதைச் செய்ய வேண்டிய கட்டாயம்
எனக்கு உள்ளது. நற்செய்தியை
அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக்
கேடு!17 இதை நானாக விரும்பிச்
செய்தால் எனக்குக் கைம்மாறு
உண்டு. நானாக விரும்பாவிட்டாலும்
இது என்னிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக
இருக்கிறது.18 அப்படியானால், எனக்குக்
கைம்மாறு என்ன? உங்களுக்கு
எச்செலவுமின்றி நற்செய்தியை
அறிவிப்பதிலுள்ள மனநிறைவே
அக்கைம்மாறு: நான் நற்செய்தி
அறிவிப்போருக்குரிய உரிமையைக்
கொஞ்சம் கூடப்
பயன்படுத்திக்கொள்ளவில்லை.19 நான் யாருக்கும் அடிமையாய்
இல்லாதிருந்தும் பலரைக்
கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை
எல்லாருக்கும் அடிமையாக்கிக்
கொண்டேன்.20 யூதரைக் கிறிஸ்துவிடம்
கொண்டுவர யூதருக்கு யூதரைப்
போலானேன். நான்
திருச்சட்டத்திற்கு
உட்படாதவனாயிருந்தும்,
திருச்சட்டத்திற்கு
உட்பட்டவர்களைக் கிறிஸ்துவிடம்
கொண்டுவர அச்சட்டத்திற்கு
உட்பட்டவர் போலானேன்.21 திருச்சட்டத்திற்கு
உட்படாதவர்களைக் கிறிஸ்துவிடம்
கொண்டுவர திருச்சட்டத்திற்கு
உட்படாதவர் போலவும் ஆனேன். ஆனால்
நானோ கடவுளின் சட்டத்திற்கு
உட்படாதவனல்ல: ஏனெனில் நான்
கிறிஸ்துவின் சட்டத்திற்கு
உட்பட்டவன்.22 வலுவற்றவர்களைக்
கிறிஸ்துவிடம் கொண்டுவர
வலுவற்றவர்களுக்கு
வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு
சிலரையேனும் மீட்கும்படி நான்
எல்லாருக்கும் எல்லாமானேன்.23 நற்செய்தியால் வரும்
ஆசியில் பங்கு பெறவேண்டி
நற்செய்திக்காக எல்லாவற்றையும்
செய்கிறேன்.24 பந்தயத்திடலில் ஓட
வந்திருப்போர் பலர் ஓடினாலும்
பரிசு பெறுபவர் ஒருவரே. இது
உங்களுக்குத் தெரியாதா? எனவே,
பரிசு பெறுவதற்காகவே நீங்களும்
ஓடுங்கள்.25 பந்தயத்தில்
போட்டியிடுவோர் யாவரும்
அழிவுறும் வெற்றி வாகை
சூடுவதற்காகத் தன்னடக்கப்
பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ
அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக
இப்படிச் செய்கிறோம்.26 நான் குறிக்கோள் இன்றி
ஓடுபவரைப்போல ஓடமாட்டேன்.
காற்றைக் குத்துபவரைப்போலக்
குத்துச் சண்டை இடமாட்டேன்.27 பிறருக்கு நற்செய்தியை
அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக
மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக்
கட்டுப்படுத்துகிறேன். |