மன்னன் ஓகின்மீது இஸ்ரயேல் வெற்றிகொள்ளல் (எண் 21:31-35) 1 பின்பு நாம் திரும்பி பாசானுக்குப் போகும் வழியில் சென்றோம். பாசானின் மன்னன் ஓகு, தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு எதிரேயியில் போரிடப் புறப்பட்டு வந்தான்.2 அப்பொழுது ஆண்டவர், என்னை நோக்கிக் கூறியது, அவனுக்கு நீ அஞ்சாதே, ஏனெனில், அவனையும், அவன் மக்கள் அனைவரையும், அவன் நாட்டையும் உன்னிடம் ஒப்படைத்துள்ளேன். எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனுக்கு நீ செய்தது போலவே, அவனுக்கும் செய் என்றார்.3 அவ்வாறே, நம் கடவுளாகிய ஆண்டவர் பாசானின் மன்னனாகிய ஓகையும் அவன் மக்கள் அனைவரையும் நம்மிடம் ஒப்படைத்தார். அவனுக்குச் சொந்தமான எவனும் எஞ்சியிராதபடி அவர்களைத்தாக்கினோம்.4 அச்சமயம் அவன் நகர்கள் அனைத்தையும் கைப்பற்றினோம். அப்பகுதியில் நாம் கைப்பற்றாத நகர் எதுவுமே இல்லை. அர்கோபின் எல்லா பகுதிகளிலும், பாசானிலிருந்த ஓகின் நாட்டிலும் மொத்தம் அறுபது நகர்களைக் கைப்பற்றினோம்.5 அந்த நகர்களெல்லாம் மிக உயர்ந்த மதில்களாலும், இரட்டைக் கதவுகளாலும், தாழ்ப்பாள்களாலும் அரண் செய்யப்பட்டிருந்தன. அவை தவிர மதில்கள் இல்லாத நகர்களும் எண்ணிறந்தவை.6 அவற்றை அழித்தொழித்தோம். எஸ்போனின் அரசன் சீகோனுக்குச் செய்ததுபோலவே எல்லா நகர்களையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அழித்தொழித்தோம்.7 எல்லாக் கால்நடைகளையும் நகர்களின் கொள்ளைப் பொருள்களையும் நமக்கெனச் சூறையாடினோம்.8 அவ்வேளையில் எமோரியரின் இரண்டு மன்னர்களிடமிருந்ததும், யோர்தானுக்கு இக்கரையிலிருக்கும் அர்னோன் ஓடை தொடங்கி எர்மோன் மலை வரையிலும் உள்ள நாட்டைக் கைப்பற்றினோம்.9 சீதோனியர் அந்த எர்மோனை சிரியோன் என்றழைக்கின்றனர். எமோரியரோ அதைச் செனீர் என்றழைக்கின்றனர்10 சமவெளியில் உள்ள எல்லா நகர்களையும், கிலயாது முழுவதையும், பாசான் முழுவதையும், சல்கா, எதிரேயிவரை உள்ள, பாசானிலிருந்த ஓகின் அரச நகர்களையும் கைப்பற்றினோம்.11 அரக்கர்களில் பாசானின் மன்னனாகிய ஓகு மட்டுமே எஞ்சியிருந்தான். அவனது கட்டில் இரும்பினால் ஆனது. அதுமனிதரின் கைமுழத்தின்படி, ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் கொண்டது. அது அம்மோனியரின் இரப்பா நகரில் உள்ளதன்றோ!
யோர்தானுக்குக் கிழக்கே குடியேறிய குலங்கள் (எண் 32:1-42) 12 அக்காலத்தில் நாம் உடைமையாக்கிக் கொண்ட இந்த நாட்டில், அர்னோன் ஓடைக் கரையிலுள்ள அரோயேர் முதல் கிலயாது மலை நாட்டின் ஒரு பகுதியையும், அதன் நகர்களையும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் நான் கொடுத்தேன்.13 கிலயாதின் மறு பகுதியையும், ஓகின் ஆட்சிக்குட்பட்ட பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் குலத்திற்குக் கொடுத்தேன். மேலும், அரக்கர்களின் நாடு எனப்பட்ட பாசானைச் சார்ந்த அர்கோபுப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.14 மனாசேயின் மகன் யாயிர் அர்கோபுப் பகுதி முழுவதையும், கெசூரியர், மாகாத்தியர் என்பவர்களது எல்லை வரை உடைமையாக்கிக் கொண்டு, பாசான் என்னும் அப்பகுதி யைத் தனது பெயராலேயே, 'அவ்வோத்து யாயீர்' என்றழைத்தான். அது இன்றுவரை வழக்கில் உள்ளது. எபிரேயத்தில் 'யாயீரின் குடியிருப்பு' என்பது பொருள். 15 மாக்கிருக்குக் கிலயாதைக் கொடுத்தேன்.16 அர்னோன் ஓடைவரை உள்ள கிலயாதின் பகுதியையும், அர்னோன் நடு ஓடையும் அதன் எல்லைப்புற நாடும் தொடங்கி, அம்மோனியரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுவரைக்கும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்திற்கும் கொடுத்தேன்.17 மற்றும், கினரேத்து முதல் பிஸ்காவுக்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அராபாவின் உப்புக் கடல் வரை, யோர்தானை எல்லையாகக் கொண்ட சமவெளியையும் அவர்களுக்குக் கொடுத்தேன்.18 அப்பொழுது நான் உங்களை நோக்கிக் கட்டளையிட்டது: உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இந்த நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு தந்துள்ளார், உங்களுள் போர்வீரர் அனைவரும், போர்க்கலன் தாங்கியவராய் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் மக்களுக்கு முன்னே செல்லுங்கள்.19 உங்கள் மனைவியரும், பிள்ளைகளும், மந்தைகளும் மட்டும் உங்களுக்குத் திரளான மந்தைகள் உண்டென்று நான் அறிவேன். நான் உங்களுக்குத் தந்துள்ள நகர்களில் தங்கட்டும்.20 ஆண்டவர் உங்களுக்கு அமைதி அளித்ததுபோல், உங்கள் சகோதரருக்கும் அமைதி அளிப்பர். உங்கள் கடவுளாகிய ஆண்டவர், யோர்தானுக்கு மேற்கே அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரையிலும் நீங்கள் இருங்கள். பின்னர் நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள உரிமைப் பகுதிக்குத் திரும்பலாம்.' 21 மேலும் நான் யோசுவாவுக்குக் கட்டளையிட்டது: உன் கடவுளாகிய ஆண்டவர்: அந்த இரண்டு அரசர்களுக்கும் செய்தவைகளை நீ கண்ணால் கண்டாயே! நீ செல்கின்ற எல்லா நாடுகளுக்கும் ஆண்டவர் அதுபோலவே செய்வார். 22 நீ அவர்களுக்கு அஞ்சாதே. ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவார்.
கானான் நாட்டிற்குள் நுழைய மோசேக்குத் தடை 23 அந்நாளில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடிச் சொன்னது: 24 என் தலைவராகிய ஆண்டவரே, நீர் உம் ஊழியனுக்கு உமது கைவன்மையையும் மாண்பையும் காட்டியுள்ளீர். உம் ஆற்றல்மிகு செயல்களுக்கு ஒப்பானவற்றைச் செய்யக்கூடிய கடவுள் எவராவது விண்ணிலோ மண்ணிலோ உண்டா? 25 நான் கடந்து சென்று, யோர்தானுக்கு மேற்கிலுள்ள நல்ல நாட்டையும், அழகிய மலைப்பகுதியையும், லெபனோனையும் கண்டிட எனக்கு அனுமதி அளியும்.26 ஆண்டவரோ, உங்கள் பொருட்டு என்மேல் சினம் கொண்டவராய், எனக்குச் செவி கொடுக்கவில்லை. அவர் என்னை நோக்கிக் கூறியது: போதும், இது குறித்து இனி நீ என்னிடம் எதுவும் பேச வேண்டாம்.27 பிஸ்கா மலை முகட்டுக்கு ஏறிப்போ: மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் உன் பார்வையைச் செலுத்து. கண்குளிரப் பார்த்துக்கொள். ஏனெனில் நீ இந்த யோர்தானைக் கடந்து செல்லமாட்டாய்.28 நீ யோசுவாவுக்குப் பொறுப்பளித்து, அவனைத் திடப்படுத்தி, உறுதிப்படுத்து. ஏனெனில், அவனே இந்த மக்கள் முன்னால் செல்வான்: நீ காணும் நாட்டை அவர்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்வான்.29 பின்னர், நாங்கள் பெத்பகோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம். |