சாமுவேல் - முதல் நூல் |
|
அதிகாரம்
2
|
அன்னாவின் வேண்டுதல் 1 அப்பொழுது அன்னா மன்றாடிக்
கூறியது: ஆண்டவரை முன்னிட்டு என்
இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில்
என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய்
என் எதிரிகளைப் பழிக்கின்றது!
ஏனெனில் நான் நீர் அளிக்கும்
மீட்பில் களிப்படைகிறேன். 2 ஆண்டவரைப் போன்ற தூயவர்
வேறு எவரும் இலர்! உம்மையன்றி வேறு
எவரும் இலர்! நம் கடவுளைப் போன்ற
வேறு பாறை இல்லை. 3 இறுமாப்புடன் இனிப்பேச
வேண்டாம்! உங்கள் வாயில் வீம்பு
வெளிப்பட வேண்டாம்! ஏனெனில்,
ஆண்டவர் அறிவின் இறைவன்!
செயல்களின் அளவை எடை போடுபவர்
அவரே! 4 வலியோரின் வில்கள்
உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை
பெறுகின்றனர்! 5 நிறைவுடன் வாழ்ந்தோர்
கூலிக்கு உணவு பெறுகின்றனர்.
பசியுடன் இருந்தோர் பசி
தீர்ந்தோர் ஆகியுள்ளனர்! மலடி
எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல
புதல்வரைப் பெற்றவளோ தனியள்
ஆகின்றாள்! 6 ஆண்டவர் கொல்கிறார்:
உயிரும் தருகின்றார்: பாதாளத்தில்
தள்ளுகிறார்: உயர்த்துகின்றார்: 7 ஆண்டவர் ஏழையாக்குகிறார்:
செல்வராக்குகின்றார்:
தாழ்த்துகின்றார்:
மேன்மைப்படுத்துகின்றார்: 8 புழுதியினின்று அவர்
ஏழைகளை உயர்த்துகின்றார்:
குப்பையினின்று வறியவரைத்
தூக்கிவிடுகின்றார்:
உயர்குடியினரோடு அவர்களை
அமர்த்துகின்றார்! மாண்புறு
அரியணையை அவர்களுக்கு
உரிமையாக்குகின்றார்! உலகின்
அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை!
அவற்றின் மேல் அவர் உலகை
நிறுவினார்! 9 தம்மில் பற்றுக்கொண்டோர்
காலடிகளை அவர் காப்பார்! தீயோர்,
இருளுக்கு இரையாவார்! ஏனெனில்
ஆற்றலால் எவரும் வலியவர்
ஆவதில்லை! 10 ஆண்டவரை எதிர்ப்போர்
நொறுக்கப்படுவர்! அவர்
அவர்களுக்கு எதிராக வானில்
இடிமுழங்கச் செய்வார்! ஆண்டவர்
உலகின் எல்லை வரை தீர்ப்பிடுவார்! 11 எல்கானா இராமாவிலுள்ள தம்
வீட்டிற்குச் சென்றார். சிறுவனோ
குரு ஏலியின் முன்பாக ஆண்டவருக்கு
ஊழியம் செய்து வந்தான்.
ஏலியின் மக்கள் 12 அப்போது ஏலியின்
புதல்வர்கள் கீழ்த்தரமானவராக
இருந்தனர். அவர்கள் ஆண்டவர் மீது
அக்கறை கொள்ளவில்லை. 13 அந்தக் குருக்களின்
மக்களிடம் பின் வருமாறு நடந்து
கொண்டனர். யாராவது பலி
செலுத்தினால், இறைச்சி வேகும்போதே
கையில் மூன்று பல் கொக்கியுடன்
குருவின் பணியாள் வருவான். 14 அவன் அதைக் கொப்பறையிலோ,
அண்டாவிலோ, சட்டியிலோ, பானையிலோ
விடுவான். கொக்கியில் அகப்படுவதை
எல்லாம் குருவுக்கென்று
எடுத்துக்கொள்வான். சீலோவுக்கு
வந்த இஸ்ரயேல் மக்கள்
அனைவருக்கும் அவர்கள் இவ்வாறு
செய்தனர். 15 அதோடு கொழுப்பு எரிவதற்கு
முன்பே குருவின் பணியாள் பலி
செலுத்துபவரிடம் வந்து,
குருவுக்குச் சமைக்க இறைச்சி
கொடும். வெந்த இறைச்சியன்று,
பச்சையானதே அவர் உம்மிடமிருந்து
பெறுவார் என்பான். 16 யாராவது அவனிடம் தற்போது
கொழுப்பு எரியட்டும்: பிறகு நீ
விரும்பியதை எடுத்துக்கொள் என்று
சொன்னால் அதற்கு அவன், இல்லை. நீர்
இப்பொழுதே கொடும், இல்லையேல், நான்
வலிந்து எடுத்துக் கொள்வேன்
என்று சொல்வான். 17 ஆகவே அந்த இளைஞரின் பாவம்
ஆண்டவரின் திருமுன் மிகப்
பெரியதாகவே இருந்தது. ஏனெனில்
அவர்கள் ஆண்டவருக்குச்
செலுத்தப்பட்ட படையல்களைத்
துச்சமாகக் கருதினார்கள்.
சீலோவில் சாமுவேல் 18 ஆண்டவர்முன் ஊழியம் செய்த
சிறுவன் சாமுவேல் நார்ப்பட்டாலான
ஏபோது அணிந்திருந்தான். 19 சாமுவேலின் தாய் அவனுக்காக
ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை தைத்து
தம் கணவரோடு ஆண்டுப்பலி செலுத்தச்
சென்றபோது அவனிடம் கொடுப்பார். 20 எல்கானாவுக்கும் அவர்
மனைவிக்கும் ஏலி ஆசி வழங்கி
எல்கானாவை நோக்கி, ஆண்டவர் இப்
பெண் வழியாக, இவள் அவருக்கு
நேர்ந்தளித்தவனுக்குப் பதிலாக,
உனக்கு வழிமரபை அருள்வாராக என்று
கூறுவார். பிறகு அவர்கள் தங்கள்
ஊருக்குத் திரும்பிச் செல்வர். 21 ஆண்டவர் அன்னாவைக்
கடைக்கண் நோக்கினார். அவர்
கருவுற்று மூன்று ஆண்களையும்
இரண்டு பெண்களையும்
பெற்றெடுத்தார். சிறுவன் சாமுவேலோ
ஆண்டவர் திருமுன் வளரலானான்.
ஏலியும் அவர்தம் புதல்வர்களும் 22 ஏலி முதிர்ந்த வயதடைந்தார்.
தம் பிள்ளைகள் இஸ்ரயேலருக்கு
எதிராகச் செய்த அனைத்தையும்,
சந்திப்புக் கூடார வாயிலில்
ஊழியம் செய்து வந்த பெண்களோடு
தகாத உறவு கொண்டிருந்ததையும்
கேட்டறிந்தார். 23 அவர் அவர்களை நோக்கிக்
கூறியது: நீங்கள் ஏன் இவ்வாறு
செய்கிறீர்கள்? இவ்வனைத்து
மக்களிடமிருந்தும் உங்கள் தீய
நடவடிக்கைகளைப்பற்றிக்
கேள்விப்படுகிறேனே! 24 வேண்டாம் பிள்ளைகளே!
ஆண்டவரின் மக்களிடையே பரவி
இருப்பதாக நான் கேள்விப்படும்
இச்செய்தி நல்லதல்ல. 25 ஒருவர் மனிதருக்கு
எதிராகப் பாவம் செய்தால்
வேறெவராவது கடவுளிடம்
அவருக்காகப் பரிந்து பேசலாம்.
ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு
எதிராகப் பாவம் செய்தால்
அவருக்காகப் பரிந்து பேசுவோர்
யார்? இருப்பினும் அவர்கள் தங்கள்
தந்தையின் குரலுக்குச்
செவிகொடுக்கவில்லை. ஏனெனில்
அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது.26 சிறுவன் சாமுவேல் வளர்ந்து
ஆண்டவருக்கும் மனிதருக்கும்
உகந்தவனாய் இருந்து வந்தான்.
ஏலியின் குடும்பத்திற்கு எதிரான இறைவாக்கு 27 அப்போது இறையடியார் ஒருவர்
ஏலியிடம் வந்து கூறியது: ஆண்டவர்,
இவ்வாறு கூறுகிறார்: எகிப்து
நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு
உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக
இருந்தபோது அவர்களுக்கு நான்
என்னையே வெளிப்படுத்தினேன். 28 என் பீடத்தில் திருப்பணி
புரியவும், தூபம் காட்டவும்,
என்முன் ஏபோது அணியவும், அவர்களை
நான் இஸ்ரயேலின் அனைத்துக்
குலங்களினின்றும்
தேர்ந்தெடுத்தேன். இஸ்ரயேல்
மக்கள் எனக்குச் செலுத்திய
நெருப்புப் பலிகள் அனைத்தையும்
நான் உன் மூதாதை வீட்டாருக்கே
கொடுத்தேன். 29 பின் நானே கட்டளையிட்ட
பலிகளையும், படையல்களையும்
துச்சமாய் மதிப்பது ஏன்? உன்
புதல்வர்களை எனக்கு மேலாக
உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல்
செலுத்தும் ஒவ்வொரு படையலிலும்
சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு
உங்களையே கொழுக்க வைப்பதேன்? 30 இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவர் கூறுவது: உன் வீடும் உன்
மூதாதை வீடும் என்முன்பாக
என்றென்றும் ஊழியம் புரிவீர் என
வாக்களித்திருந்தேன். ஆனால்
தற்போது ஆண்டவர் கூறுவது:
இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக!
ஏனெனில், என்னை மதிப்போரை நான்
மதிப்பேன்: என்னை இகழ்வோர்
இகழ்ச்சி அடைவர். 31 இதோ! நாள்கள்
நெருங்குகின்றன. அப்பொழுது, உன்
ஆற்றலையும் உன் மூதாதை வீட்டாரின்
ஆற்றலையும் நான் அழிப்பேன். உன்
வீட்டில் ஒரு முதியவர் கூட
இருக்கமாட்டார். 32 அப்போது ஏனைய
இஸ்ரயேலருக்கு அருளப்படும்
அனைத்து நலனையும் நீ பொறாமையோடு
மனம் வெதும்பிப் பார்ப்பாய். உனது
வீட்டிலோ என்றென்றும் ஒரு
முதியவர் கூட இருக்கமாட்டார். 33 என் பீடப்பணியினின்று
விலக்கி விடாமல் நான் வைத்துக்
கொள்ளவிருக்கும் உங்களுள் ஒருவன்
கண்கள் மங்கி, மனம்
தளர்வடையுமட்டும் இருப்பான்.
ஆனால் உன் வீட்டில் வளரும்
தலைமுறையினர் இளம் வயதில் சாவர். 34 உன் இரு புதல்வரான
ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்பட
விருப்பது உனக்கு ஓர் அடையாளமாக
இருக்கட்டும். ஒரே நாளில் அவர்கள்
இருவரும் மடிவர். 35 என் திட்டத்திற்கும்
விருப்பத்திற்கும் ஏற்பச்
செயல்படும் நம்பிக்கைக்குரிய ஒரு
குருவை நான் எழுப்புவேன்.
அவனுக்கு ஒரு நிலையான வீட்டைக்
கட்டி எழுப்புவேன். அவன்
எந்நாளும் என்னிடம் திருப்பொழிவு
பெறுபவனுக்குப் பணி செய்வான். 36 எஞ்சியுள்ள உன் வீட்டார்
அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ
ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து
கையேந்தி நின்று தயைகூர்ந்து
எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு
குருத்துவ ஊழியத்தில் என்னைச்
சேர்த்தருளும் என்பார்கள். |