Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 16

முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர்
1 இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது.2 தலைவர் அவரைக் கூப்பிட்டு, ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம் கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர், ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.4 வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் ' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.5 பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்? ' என்று கேட்டார்.6 அதற்கு அவர், ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார்.7 பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.'நூறு கோரோசு' என்பது கிரேக்க பாடம். 8 நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.9 ' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.11 நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?12 பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?13 ' எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது. '

திருச்சட்டமும் இறையாட்சியும்
(மத் 11:12 - 13)
14 பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.15 அவர் அவர்களிடம் கூறியது: ' நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.16 திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்.17 திருச்சட்டத்திலுள்ள ஓர் எழுத்தின் கொம்பு அழிவதைவிட விண்ணும் மண்ணும் ஒழிவது எளிதாகும்.18 ' தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.

செல்வரும் இலாசரும்
19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28 எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29 அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். '


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!