நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) |
|
அதிகாரம்
5
|
கற்பு நெறி தவறாமை 1 பிள்ளாய்! என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து: என் அறிவுரைக்குச் செவிகொடு.2 அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்: அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.3 விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்: அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.4 ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்: இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும் 5 அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்: அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும். 6 வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை: அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்: அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை. 7 ஆகையால், பிள்ளாய்! எனக்குச் செவிகொடு: நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே. 'பிள்ளைகளே' என்பது எபிரேய பாடம் 8 அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்: அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே. 9 இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்: கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய். 10 அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்: நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும். 11 நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்: உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய். 12 ஐயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே! கண்டிக்கப்படுவதைப் புறக்கணித்தேனே! 13 கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே! போதித்தவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேனே! 14 இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே என்று அலறுவாய்.
பிறன் மனைவியை நயவாமை 15 உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி: உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு 16 உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா? 17 அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்: அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே. 18 உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு. 19 அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்: அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக! 20 மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? புரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?21 மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை: அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.22 பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்: தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.23 கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்: தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர். |