Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 79

நாட்டின் விடுதலைக்காக மன்றாடல்
(ஆசாபின் புகழ்ப்பா)
1 கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்; எருசலேமைப் பாழடையச் செய்தனர். 2 அர 25:8-10;
2 குறி 36:17-19;
எரே 52:12-14
2 உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள்;3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்; அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை. 4 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்; எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம். 5 ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா? உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? 6 உம்மை அறியாத வேற்று நாட்டினர்மீது, உமது பெயரைத் தொழாத அரசர்கள் மீது உம் சினத்தைக் கொட்டியருளும். 7 ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்; அவரது உறைவிடத்தைப் பாழாக்கி விட்டார்கள். 8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். 9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். 10 'அவர்களின் கடவுள் எங்கே?' என்று அண்டை நாட்டினர் ஏன் சொல்லவேண்டும்? உம்முடைய ஊழியரின் இரத்தத்தைச் சிந்தியதற்காக நீர் அவர்களை, எம் கண்ணெதிரே, பழிதீர்த்தருளும். 11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. 12 ஆண்டவரே, எம் அண்டை நாட்டார் உம்மைப் பழித்துரைத்த இழிச்சொல்லுக்காக, ஏழு மடங்கு தண்டனை அவர்கள் மடியில் விழச்செய்யும். 13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!