எசேக்கியேல் |
|
அதிகாரம்
13
|
போலி இறைவாக்குரைத்த ஆடவருக்கு எதிரான இறைவாக்கு 1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:2 மானிடா! தங்கள் விருப்பப்படி வாக்குரைக்கும் இஸ்ரயேலின் போலி இறைவாக்கினருக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து, ஆண்டவரது வாக்கைக் கேளுங்கள் என்று அவர்களுக்குச் சொல்.3 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மதிகெட்ட இறைவாக்கினருக்கு ஐயோ கேடு! அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் நடக்கின்றனர். அவர்கள் ஒரு காட்சியும் காண்பதில்லை.4 இஸ்ரயேலே! உன் இறைவாக்கினர் பாலைநில நரிகளுக்கு ஒப்பானவர்.5 ஆண்டவரது நாளில் நிகழவிருக்கும் போரில் இஸ்ரயேல் வீட்டார் நிலைத்து நிற்பதற்காக, நீங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மதிலின் உடைப்புகளுக்குள் ஏறிச் சென்றதும் இல்லை: அவற்றைப் பழுது பார்த்ததும் இல்லை.6 அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து இது ஆண்டவரின் வாக்கு என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.7 நீங்கள் கண்டது பொய்க்காட்சி தானே? நீங்கள் தந்தது ஏமாற்றுக் குறிதானே? நான் ஒன்றும் உரைக்காதிருந்தும் இது ஆண்டவரின் அருள் வாக்கு என நீங்கள் சொல்லலாமா?8 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் புனைந்து பேசியுள்ளீர்கள்: பொய்க்காட்சிகள் கண்டுள்ளீர்கள். எனவே நான் உங்களுக்கு எதிராக இருப்பேன் : என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.9 பொய்க்காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தரும் போலி இறைவாக்கினருக்கு எதிராக என் கை இருக்கும். என் மக்களின் அவையில் அவர்கள் இரார். இஸ்ரயேல் வீட்டாரின் பதிவேட்டிலும் அவர்கள் பெயர்கள் எழுதப்பட்டிரா. இஸ்ரயேலின் மண்ணலில் அவர்கள் கால் வைக்க மாட்டார்கள். அப்போது நானே தலைவராகிய ஆண்டவர்10 ஏனெனில், இவர்கள் நல்வாழ்வு இல்லாதிருந்தும் நல்வாழ்வு உளது எனச் சொல்லி என் மக்களை வழி தவறச் செய்தார்கள். மக்கள் எல்லைச் சுவர் எழுப்பியபோது இவர்கள் அதற்குச் சுண்ணாம்பு பூசினார்கள். 11 சுண்ணாம்பு பூசுகிறவர்களிடம் சொல்: அது விழுந்துவிடும்: அடைமழை பெய்யும்: ஆலங்கட்டிகள் விழும்: புயற்காற்று சீறியெழும். 12 சுவர் விழும்போது, நீங்கள் பூசிய சுண்ணாம்பு எங்கே? என்று உங்களைக் கேட்கமாட்டார்களா? 13 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் சீற்றமுற, புயற்காற்று சீறியெழும்: நான் சினமுற, அடைமழை பெய்யும்: நான் கோபமுற, ஆலங்கட்டிகள் விழும்: சுவரும் அழிந்துவிடும். 14 நீங்கள் சுண்ணாம்பு பூசிய சுவரை நான் இடித்துத் தரைமட்டமாக்குவேன். அதன் அடித்தளம் பெயர்க்கப்படும். அது விழும்போது, அதனடியில் நீங்கள் அழிந்து போவீர்கள். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். 15 இப்படிச் சுவர் மீதும், அதில் சுண்ணாம்பு பூசியவர்கள் மீதும் என் சினத்தைத் தீர்த்துக் கொண்டு, சுவரையும் காணோம்: அதற்குச் சுண்ணாம்பு பூசியோரையும் காணோம் என்று உங்களுக்கு உரைப்பேன். 16 நல்வாழ்வு இல்லாதிருந்தும் நல்வாழ்வு உளது என்னும் காட்சி கண்டு எருசலேமுக்காக இறைவாக்குரைக்கும் இஸ்ரயேலின் இறைவாக்கினரும் அவ்வாறே அழிவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
போலி இறைவாக்குரைத்த மகளிருக்கு எதிரான இறைவாக்கு 17 மானிடா! தங்கள் விருப்பப்படி இறைவாக்குரைக்கும் உன் இனத்துப் புதல்வியருக்கு நேராக உன் முகத்தை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராக இறைவாக்குரை.18 நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயிர்களை வேட்டையாடுவதற்காக, அனைவரின் கைகளிலும் மணிக்கட்டைச் சுற்றிக் காப்புக் கயிறுகள் பின்னி, ஒவ்வொருவர் உயரத்திற்கும் ஏற்ப தலைக்கு முக்காடு செய்வோர்க்கு ஐயோ கேடு! நீங்கள் என் மக்களின் உயிர்களை வேட்டையாடி உங்கள் உயிர்களை மட்டும் கா19 கைப்பிடி அளவு வாற்கோதுமைக்காகவும், சில அப்பத்துண்டுகளுக்காகவும் என் மக்களிடையே எனக்குக் களங்கம் விளைவிக்கிறீர்கள். பொய்களுக்குச் செவிசாய்க்கும் என் மக்களிடம் பொய் சொல்லி, சாகாமல் இருக்க வேண்டியோரைச் சாகடித்து, உயிரோடு இருக்கக் கூடாதாரை உயிரோடு காத்துள்ளீர்கள்.20 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பறவைகளுக்கு வைப்பது போல் உயிர்களுக்குக் கண்ணிவைக்க நீங்கள் பயன்படுத்தும் காப்புக் கயிறுகளை நான் வெறுக்கிறேன், அவற்றை உங்கள் கைகளிலிருந்து அறுத்தெறிவேன். பறவைகளைப்போல் நீங்கள் கண்ணிவைத்துப் பிடிக்கும் உயிர்களை நான் விடுவிப்பேன்.21 உங்கள் முக்காடுகளையும் கிழித்தெறிந்து, என் மக்களை உங்கள் கைகளினின்று விடுவிப்பேன். இனி அவர்கள் உங்கள் கைகளில் சிக்கமாட்டார்கள். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.22 நான் தளரச்செய்யாத நேர்மையாளனின் இதயத்தை நீங்கள் வஞ்சகமாய்த் தளரச் செய்தீர்கள். தீயவர் தம் தீய வழியினின்று விலகித் தம் உயிரைக் காத்துக் கொள்ளாதவாறு, வலுப்படுத்தினீர்கள்.23 ஆதலால் பொய்க் காட்சியை இனிக் காணமாட்டீர்கள்: குறி சொல்லவும் மாட்டீர்கள். உங்கள் கைகளினின்று என் மக்களை விடுவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என நீங்கள் அறிந்து கொள்வீர்கள். |