Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எபிரேயருக்கு எழுதிய திருமுகம்

அதிகாரம் 5

துன்புற்ற தலைமைக் குரு
1 தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.2 அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார்.3 அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.4 மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும்.5 அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. நீர் என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார்.6 இவ்வாறே மற்றோரிடத்தில், மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே என்றும் கூறப்பட்டுள்ளது.7 அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார்.8 அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.9 அவர் நிறைவுள்ளவராகி, தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.10 மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.

கிறிஸ்தவ வாழ்வில் உறுதி
11 இதைப்பற்றிப் பேசுவதற்கு நிறைய உள்ளது: ஆனால் விளக்கம் கூறுவது அரிது. ஏனெனில் உங்கள் அறிவு மழுங்கிப் போய்விட்டது.12 இவ்வளவு காலத்திற்குள் ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டிய நீங்கள் இன்னும் கடவுளுடைய வாய்மொழிகளின் அரிச்சுவடியையே கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது பால்தான்: கெட்டியான உணவு அல்ல.13 பால் குடிக்கும் நிலையில் உள்ளவர் எவரும் குழந்தையே. நீதிநெறிபற்றிய படிப்பினையில் அவர் தேர்ச்சி அற்றவர்.14 முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு. அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!