செலூக்கியர் ஆட்சியின் போது கிரேக்க மொழி, பண்பாடு, வழிபாட்டு முறை முதலியன யூதர்கள் மீது திணிக்கப்பட்டன. யூதர் பலரும் இவற்றை விரும்பி ஏற்கத் தொடங்கினர். இக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180) சீராக்கின் மகனும் எருசலேமில் வாழ்ந்த மறை நூலறிஞருமான ஏசு, தம்மவரை யூத மறையில் உறுதிப்படுத்தி ஊக்குவிக்க எண்ணினார். உண்மையான ஞானம் இஸ்ரயேலில் தான் உள்ளது; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் தான் அது அடங்கும் என்பதை வலியுறுத்தி இந்நூலை எழுதினார். எனவே இந்நூல் எபிரேயத்தில் 'சீராவின் மகனான ஏசுவின் ஞானம்' அல்லது 'பென் சீரா' என வழங்குகிறது. எபிரேய மொழியில் எழுதப் பெற்ற இந்நூலை, பாலஸ்தீனத்துக்கு வெளியே கிரேக்கச் சூழலில் வாழ்ந்த யூதர்களின் நலன் கருதி, ஏசுவின் பேரன் (ஏறத்தாழ கி.மு. 132) கிரேக்கத்தில் மொழி பெயர்த்து, அதற்கு ஒரு முன்னுரையும் வரைந்தார். தொடக்கத் திருச்சபையில் 'திருப்பாடல்கள்' நூலுக்கு அடுத்தபடி இந்நூல் திருவழிபாட்டிலும் மறைக்கல்வியிலும் மிகுதியாகப் பயன்பட்ட காரணத்தால், இது 'சபை நூல்' என்றும் பெயர் பெற்றது. இந்நூலின் எபிரேய பாடம் முழுதும் தொலைந்து விட, இதன் மொழி பெயர்ப்பான கிரேக்க பாடமே நமக்கு மூலபாடமாகப் பயனபட்டு. வருகிறது. எனினும் எபிரேய பாடத்தின் பெரும் பகுதி தொல்லியல் ஆராய்ச்சியின் பயனாக இன்று நமக்குக் கிடைத்துள்ளதால், கிரேக்க பாடத்தை நன்கு புரிந்து கொள்ள இது பெரிதும் துணை புரிகிறது. ஞானம்பற்றிய கருத்துக் குவியலைக் கொண்ட முதல் பகுதி, அன்றாட வாழ்வில் ஞானத்தைக் கடைப்பிடிக்கும் முறைபற்றிப் பேசுகிறது. இரண்டாவது பகுதி இஸ்ரயேலின் மீட்பு வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களைப் புகழ்வதோடு, அவர்களைப் பின்பற்ற அழைப்பு விடுக்கிறது. நூலின் பிரிவுகள் - முகவுரை வரிகள் 1 - 35
- ஞானம் வழங்கும் நன்னெறி 1:1 - 43:33
- மூதாதையர் புகழ்ச்சி 44:1 - 50:29
- பிற்சேர்க்கை 51:1 - 30
முகவுரை1-14 திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், அவற்றைத் தொடர்ந்து வரும் ஏடுகள் வழியாகப் பல சிறந்த படிப்பினைகள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை காட்டும் நற்பயிற்சிக்காகவும் ஞானத்துக்காகவும் இஸ்ரயேலைப் புகழ்வது நமது கடமையாகும். அந்நூல்களைப் படிப்போர் அவற்றைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது; கல்வியில் நாட்டம் கொண்டோர் என்னும் முறையில் தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் வேண்டும். எனவே, என் பாட்டனாராகிய ஏசு திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், நம் மூதாதையர் எழுதிய மற்ற ஏடுகள் ஆகியவற்றை ஆழ்ந்து கற்பதில் ஆர்வம் காட்டினார்; அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றபின் நற்பயிற்சி, ஞானம்பனற்றி அவரே எழுதலானார். இவ்வாறு அவர் எழுதியவற்றின் துணைகொண்டு, கல்வியில் நாட்டம் கொண்டோர் திருச்சட்டத்திற்கு ஏற்ப வாழ்வதில் பெரும் முன்னேற்றம் காண்பர். 15-26 எனவே, நீங்கள் இந்நூலை நன்மனத்தோடும், கவனத்தோடும் படிக்குமாறு வேண்டுகிறேன். நான் மிகுந்த கருத்துடன் இந்த மொழி பெயர்ப்பைச் செய்திருந்தாலும், சில சொற்றொடர்களைச் சற்றுப் பிழைபட மொழிபெயர்த்திருக்கக்கூடும். அதற்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் மூலமொழியாகிய எபிரேயத்தில் சொல்லப்பட்டதைப் பிறிதொரு மொழியில் பெயர்த்து எழுதுகின்றபொழுது, அது முதல் நூல் பொருளை உணர்த்துவதில்லை. இந்த நூலுக்கு மட்டுமன்று; திருச்சட்டம், இறைவாக்கு நூல்கள், மற்ற ஏடுகள் ஆகிய எல்லாவற்றுக்குமே இது பொருந்தும். இவற்றின் பொருள் மூலமொழியில் பெரும் அளவில் மாறுபடுகிறது. 27-35 மன்னர் யூர்கெத்தின் ('யூர்கெத்து' என்னும் இக் கிரேக்கச் சொல்லுக்குப் புரவலர், வள்ளல் என்பது பொருள். இச்சிறப்புப் பெயர் பல மன்னர்களுக்கு வழங்கியது. இங்கு மன்னர் தாலமி VII (கி.மு. 170-117) - ஐக் குறிக்கிறது.) ஆட்சியின் முப்பத்தெட்டாம் ஆண்டில், நான் எகிப்துக்குச் சென்று அங்குச் சிறிது காலம் தங்கியிருந்தேன். அப்பொழுது மிகுதியாகக் கற்றுக்கொள்வதற்கு உகந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எனவே நானே பெரும் முயற்சி எடுத்து உழைத்து, இந்த நூலைமொழிபெயர்ப்பது முதன்மையான தேவை என்று உணர்ந்தேன். அப்போது மிகுந்த கருத்தோடும் திறமையோடும் செயல்புரிந்து அப்பணியை முடித்தேன். இவ்வாறு, வெளிநாடுகளில் வாழ்ந்துவருபவருள் படிப்பினைமீது, நாட்டம் கொள்வோரும் திருச்சட்டத்தின்படி வாழ்வதற்கான நற்பயிற்சியில் பயன்அடையும்பொருட்டு அதை வெளியிட்டுள்ளேன். |