யோபு |
|
அதிகாரம்
6
|
துன்புறுவோரே தம் துயர் அறிவார் 1 யோபு கூறிய பதிலுரையாவது:2 ஓ! என் வேதனைகள் உண்மையாகவே நிறுக்கப்பட்டு, என் இன்னல்கள் அனைத்தும் சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!3 கடற்கரை மணலிலும் இப்போது அவை கனமானவை: பதற்றமான என் சொற்களுக்குக் காரணமும் அதுவே:4 எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னில் தைத்துள்ளன: அவற்றின் நஞ்சு என் உயிரைக் குடிக்கின்றது: கடவுளின் அச்சுறுத்தல்கள் எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.5 காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க, அது கனைக்குமா? காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?6 சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா? துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?7 அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது: அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!8 ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்? நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா?9 அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா? தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?10 அதுவே எனக்கு ஆறுதலாகும்: அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்: தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்: ஏனெனில் தூயவரின் சொற்களை மறுத்தேனில்லை.11 நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது? என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?12 என் வலிமை கல்லின் வலிமையோ? என் சதை வெண்கலத்தாலானதோ?13 இதோ! என்னில் உதவி ஏதுமில்லை: என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.14 அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர் எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.15 காய்ந்துவிடும் காட்டாற்றுக் கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும் வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.16 அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்: அவற்றின் மேற்பகுதியை உறைபனி மூடி நிற்கும்.17 வெப்பக் காலத்திலோ அவை உருகி மறைந்துபோம்: வெயில் காலத்திலோ அவை இடந்தெரியாது ஒழியும்.18 வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது: பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.19 தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்: நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.20 அவர்கள் நமிபியிருந்தனர்: ஆனால், ஏமாற்றமடைகின்றனர்: அங்கு வந்தடைந்தனர்: ஆனால் திகைத்துப் போகின்றனர்.21 இப்போது நீங்களும் எனக்கு அவ்வாறே ஆனீர்கள்: என் அவலம் கண்டீர்கள்: அஞ்சி நடுங்குகின்றீர்கள்.22 எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ, உம் செல்வத்திலிருந்து என் பொருட்டுக் கையூட்டுக் கொடும் என்றோ சொன்னதுண்டா?23 எதிரியின் கையினின்று என்னைக் காப்பாற்றும் என்றோ, கொடியவர் பிடியினின்று என்னை மீட்டருளும் என்றோ நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?24 அறிவு புகட்டுக! அமைதியடைவேன்: என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!25 நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?26 என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா? புலம்புவோரின் சொற்கள் காற்றுக்கு நிகராமா?27 திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்: நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.28 பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்: உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன்,29 போதும் நிறுத்துங்கள்: அநீதி செய்ய வேண்டாம்! பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே:30 என் நாவில் அநீதி உள்ளதா? என் அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா? |