Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 46

உலகத்திற்கும் பாபிலோனின் சிலைகளுக்கும் ஆண்டவர் ..............தொடர்ச்சி
1 பேல் கூனிக் குறுகுகின்றது: நெபோ குப்புற வீழ்கின்றது: அவற்றின் சிலைகள் காட்டு விலங்குகள் மீதும் கால்நடைகள் மீதும் சுமத்தப்படுகின்றன: நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின: களைத்துப்போன விலங்குகளுக்குச் சுமையாயின.2 அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன: கூனிக் குறுகுகின்றன: தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் விடுவிக்க இயலவில்லை: அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.3 யாக்கோபு வீட்டாரே, இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே, செவிகொடுங்கள்: உதரத்திலிருந்தே உங்களைத் தாங்குபவர் நான், கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான்.4 உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்: நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்: உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்: நானே உங்களைச் சுமப்பேன்: நானே விடுவிப்பேன்.5 யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்? யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்? யாருக்கு நிகராக என்னை ஒப்பிடுவீர்கள்?6 மக்கள் தம் பையைத் திறந்து பொன்னைக் கொட்டுகிறார்கள்: தராசில் வெள்ளியை நிறுத்துப் பார்க்கிறார்கள்: பொற்கொல்லனைக் கூலிக்கு அமர்த்துகிறார்கள்: அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்: பின் அதன்முன் வீழ்ந்து வழிபடுகிறார்கள்.7 அதைத் தூக்கித் தோள்மேல் சுமந்து போகின்றனர்: அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்: அது அங்கேயே நிற்கிறது: தன் இடத்திலிருந்து அது பெயராது: எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது: அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை.8 கலகம் செய்வோரே, இதை நினைவில் கொள்ளுங்கள்: கவனத்தில் வையுங்கள்.9 தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள்: நானே இறைவன்: என்னையன்றி வேறு கடவுள் இல்லை: என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.10 பின் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே நான் அறிவித்தேன்: இனி நடப்பனவற்றை பண்டைக் காலத்திலேயே முன்னுரைத்தேன்: என் திட்டம் நிலைத்திருக்கும்: என் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்றுரைத்தேன்.11 இரைமேல் பாயும் பறவையைக் கிழக்கிலிருந்து அழைக்கிறேன்: என் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒருவனைத் தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்: சொல்லியவன் நான்: நானே அதை நிறைவேற்றுவேன்: திட்டமிட்டவன் நான்: நானே அதைச் செயல்படுத்துவேன்.12 கடின மனத்தோரே, வெற்றிக்கு வெகு தொலைவில் இருப்போரே, செவி கொடுங்கள்.13 என் வெற்றியை அருகில் வரவழைத்துள்ளேன்: அது தொலையில் இல்லை, என் விடுதலை காலம் தாழ்த்தாது: சீயோனுக்கு நான் விடுதலை வழங்குகின்றேன்: இஸ்ரயேலில் என் மாட்சி நிலைக்கச் செய்வேன்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!