திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) |
|
அதிகாரம்
101
|
அரசரின் வாக்குறுதி (தாவீதின் புகழ்ப்பா) 1 இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன். 2 மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன். 3 இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது. 4 வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன். 5 தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்; 6 நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன்; நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்; 7 வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை. பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை. 8 நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும் நாள்தோறும் அழிப்பேன்; ஆண்டவரின் நகரினின்று தீங்கிழைப்போரை ஒழிப்பேன். |