கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் |
|
அதிகாரம்
5
|
நம்பிக்கையோடு வாழ்தல் ..............தொடர்ச்சி 1 நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!2 இக்கூடாரத்தில் குடியிருக்கும் நாம் விண்ணுலகு சார்ந்த நம் வீட்டைப் பெற்றுக் கொள்ள ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம்.3 அதைப் பெற்றுக்கொண்டால் நாம் உறைவிடமற்றவர்களாய் இருக்கமாட்டோம்:4 இவ்வுலகக் கூடாரத்தில் குடியிருக்கும் நாம் இந்நிலையைத் தாங்க இயலாமல் பெருமூச்சு விடுகிறோம். இக்கூடாரத்தை விட்டு விலக வேண்டும் என்பதல்ல: மாறாக விண்ணக வீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நம் விருப்பம். வாழ்வுக்குரியது சாவுக்குரியதைத் தனக்குட்படுத்தும்.5 இந்நிலையடைவதற்கென்றே கடவுள் நம்மைத் தயாரித்து மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாக அவருடைய தூய ஆவியை நமக்கு வழங்கினார்.6 ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.7 நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்.8 நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம்.9 எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்.10 ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.
ஒப்புரவுத் திருப்பணி 11 ஆண்டவருக்கு அஞ்சி உழைக்கும் நாங்கள் மக்களை ஈர்க்கப் பார்க்கிறோம். எங்கள் செயல்கள் கடவுளுக்கு வெளிப்படை. அவை உங்கள் மனச்சான்றுக்கும் வெளிப்படையாயிருக்கும் என எதிர்பார்க்கிறேன்.12 மீண்டும் நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று கூறவில்லை: மாறாக எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். அப்போது உள்ளத்தைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்துப் பெருமை பாராட்டுவோருக்கு நீங்கள் மறுப்புக் கூற இயலும்.13 நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோம் என்றால் அது கடவுளுக்காகவே: அறிவுத் தெளிவோடு இருக்கிறோம் என்றால் அது உங்களுக்காகவே.14 கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும்.15 வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.16 ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை: முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை.17 எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!18 இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்: ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.19 உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.20 எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.21 நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். |