Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)

அதிகாரம் 18

கடவுளின் பெருமை
1 என்றும் வாழும் ஆண்டவரே அண்டம் முழுவதையும் படைத்தார்.2 ஆண்டவர் ஒருவரே நீதியுள்ளவர். [அவரைத்தவிர வேறு எவரும் இலர். 3 அவர் தம் கையின் அசைவினால் உலகை நெறிப்படுத்துகிறார். எல்லாம் அவருடைய திருவுளத்திற்கு அடிபணிகின்றன. அவர் எல்லாவற்றிற்கும் மன்னர்: தம் ஆற்றலால் தூயவற்றைத் தூய்மை அல்லாதவற்றினின்று பிரித்துவைக்கிறார்.] [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது 4 அவர் தம் செயல்களை அறிவிக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை: அவருடைய அரும்பெரும் செயல்களைக் கண்டுபிடிப்பவர் யார்?5 அவரது பேராற்றலை எவரால் அளவிட்டுக் கூற முடியும்? அவரது இரக்கத்தை எவரால் முழுவதும் விரித்துரைக்க இயலும்?6 ஆண்டவரின் வியத்தகு செயல்களைக் குறைக்கவோ கூட்டவோ எவராலும் முடியாது: அவற்றை ஆழ்ந்தறிய எவராலும் இயலாது.7 மனிதர் அவற்றைக் கண்டுணர்ந்து விட்டதாக எண்ணும்போதுதான் கண்டுணரவே தொடங்குகின்றனர்: அவற்றைக் கண்டுணர்ந்து முடிக்கும்போது மேலும் குழப்பம் அடைகின்றனர்.

மனிதரின் சிறுமை
8 மனிதர் என்போர் யார்? அவர்களால் ஏற்படும் நன்மைகள் என்ன? அவர்களிடம் இருக்கும் நன்மைகள் யாவை? தீமைகள் யாவை?9 மனிதருடைய வாழ்நாள்களின் எண்ணிக்கை கூடிப்போனால் நூறு ஆண்டுகள்.10 நித்தியத்தோடு ஒப்பிடும்போது அந்தச் சில ஆண்டுகள் கடல்நீரில் ஒருதுளி போன்றவை. கடல் மணலில் ஒரு துகள் போன்றவை.11 இதனால்தான் ஆண்டவர் அவர்கள்மீது பொறுமையுடன் இருக்கிறார்: தம் இரக்கத்தை அவர்கள்மீது பொழிக்கிறார்.12 அவர்களின் அழிவு இரங்கத்தக்கது என அவர் கண்டறிகிறார்: அளவுக்கு மிகுதியாகவே அவர்களை மன்னிக்கிறார்.13 மனிதர் அடுத்திருப்பவருக்கே இரக்கம் காட்டுகின்றனர்: ஆண்டவர் எல்லா உயிருக்கும் இரக்கம் காட்டுகிறார்: அவற்றைக் கண்டிக்கிறார்: பயிற்றுவிக்கிறார்: அவற்றுக்குக் கற்றுக் கொடுக்கிறார்: இடையர்கள் தங்கள் மந்தையைத் தங்களிடம் மீண்டும் அழைத்துக்கொள்வதுபோல் அவரும் செய்கிறார்.14 தாம் அளிக்கும் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வோர்மீதும் தம் தீர்ப்புகளை ஆர்வத்துடன் தேடுவோர்மீதும் இரக்கம் காட்டுகிறார்.

ஈகையின் சிறப்பு
15 குழந்தாய், நீ நன்மை செய்யும்போது கடிந்துகொள்ளாதே: கொடைகள் வழங்கும்போது புண்படுத்தும் சொற்களைக் கூறாதே.16 கடும் வெப்பத்தைப் பனி தணிக்கும் அன்றோ? உனது சொல் கொடையைவிடச் சிறந்தது.17 ஒரு சொல் நல்ல கொடையைவிட மேலானது அன்றோ? கனிவுள்ள மனிதரிடம் இவ்விரண்டுமே காணப்படும்.18 அறிவிலிகள் கடுஞ்சொல் கூறுவார்கள். மனம் ஒப்பாது கொடுக்கும் ஈகை, அதனைப் பெறுவோருக்கு எரிச்சலையே கொடுக்கும்.

சிந்தனையும் முன்மதியும்
19 கற்றபின் பேசு: நோய் வருமுன் உடல்நலம் பேணு.20 ஆண்டவரின் தீர்ப்பு வருமுன் உன்னையே ஆராய்ந்து பார்: கடவுள் சந்திக்க வரும் நாளில் நீ மன்னிப்பு பெறுவாய்.21 நோய்வாய்ப்படுமுன் உன்னையே தாழ்த்திடு: பாவம் செய்தபின் மனந்திரும்பு.22 நேர்ச்சையைத் தகுந்த நேரத்தில் செலுத்த எதுவும் தடையாய் இருக்க வேண்டாம்: அதை நிறைவேற்ற இறக்கும்வரையில் நீ காத்திருக்கவேண்டாம்.23 நேர்ச்சை செய்யுமுன் அதைக் கடைப்பிடிக்க ஆயத்தம் செய்துகொள்: இதில் ஆண்டவரைச் சோதிப்பவனாய் இருந்துவிடாதே.24 இறுதி நாளில் வரவிருக்கும் அவரது சீற்றத்தை நினைவில் கொள்: அவர் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு பழிவாங்கும் நேரத்தையும் எண்ணிப்பார்.25 நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது, பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்: உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை, தேவையின் காலத்தை எண்ணிப்பார்.26 காலை தொடங்கி மாலைக்குள் காலங்கள் மாறுகின்றன: ஆண்டவர் திருமுன் அனைத்தும் விரைகின்றன.27 ஞானிகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்கின்றார்கள்: பாவம் பெருகும்பொழுது தீச்செயல்களினின்று தம்மைக் காத்துக் கொள்கின்றார்கள்.28 அறிவுக்கூர்மை படைத்தோர் அனைவரும் ஞானத்தை அறிவர்: அதை அடைந்தோரைப் போற்றுவர்.29 நாவன்மை படைத்தோர் ஞானியர் ஆகின்றனர்: பொருத்தமான நீதிமொழிகளைப் பொழிகின்றனர்.

தன்னடக்கம்
30 கீழான உணர்வுகளின்படி நடவாதே: சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்து.31 கீழான உணர்வுகளில் இன்பம் காண உன் உள்ளத்தை அனுமதிக்கும்போது உன் பகைவரின் நகைப்புக்கு அவை உன்னை உள்ளாக்கும்.32 அளவு மீறி உண்டு குடிப்பதில் களிகூராதே: அதனால் ஏற்படும் செலவு உன்னை ஏழையாக மாற்றிவிடும்.33 உன் பணப்பையில் ஒன்றும் இல்லாதபோது கடன் வாங்கி விருந்துண்டு ஏழையாகாதே.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!