எபேசியர் திருமுகம் மிகவும் சிறந்த கருத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது; திருச்சபை பற்றிய அழகான உருவகங்களை நமக்குத் தருகிறது. கடவுளின் திட்டம் என்பது மனித குலத்தை மட்டுமல்ல, படைப்பு அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் கடவுளுடன் ஒப்புரவாக்குது என்னும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துரைக்கிறது; குடும்பவாழ்வு பற்றிச் சிறந்த அறிவுரைகளையும் வழங்குகிறது. இது கொலேசையர் திருமுகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பலர் இதனைக் கொலேசையர் திருமுகத்தின் விளக்கமாகக் கருதுகின்றனர். ஆசிரியர்இத்திருமுகத்தைப் பவுல் எழுதினார் என்பது மரபு நம்பிக்கையாக இருந்தாலும், அண்மைக் காலத்தில் சில மாற்றுக் கருத்துக்களும் தோன்றியுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு மேல் எபேசில் தங்கிப் பணிபுரிந்த ஆசிரியர் (திப 18:23-19:4) எபேசு மக்களுடன் கொண்டிருந்த உறவைத் திருமுகம் காட்டவில்லை (1:15: 3:2); வழக்கமான வாழ்த்துக்களும் இதில் இல்லை. இதன் கருத்தோட்டமும் நடையும் சொற்களும் கூட பவுல் எழுதிய கடிதங்களினின்று மாறியிருக்கின்றன. திருச்சபையைக் கிறிஸ்துவின் மறையுடலாகச் சித்திரிக்கும் ஆழமான இறையியல் கருத்துக்கள் பிற்காலத்தவை. இத்தகைய பல காரணங்களின் அடிப்படையில் இது கி.பி. 80-க்குப் பின் வேறொருவரால் எழுதப்பட்ட மடல் எனப்பலர் கூறுவர். இது லவோதோக்கியருக்கு எழுதப்பட்ட மடல் என்பர் வேறு சிலர். எனினும் இதனை ஒரு மடல் என்பதை விட ஆழமான இறையியல் கட்டுரை எனக் கொள்வதே சிறப்பு. பல சபைகளுக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் எபேசு நகரப் பிரதி இது எனக் கருதலாம். எனவே தனிப்பட்ட செய்திகள் இதில் இடம் பெறவில்லை. இதனைப் பவுலின் சீடர்ஒருவர் பவுலினது கண்ணோட்டத்தில், அவரது பெயரில் எழுதியிருக்க வேண்டும். இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையாகக் கருதப்பட்டது. உள்ளடக்கம்இத்திருமுகத்தின் முதற்பகுதியில் ஒற்றுமை பற்றிய மையக் கருத்தை ஆசிரியர் விளக்குகின்றார்; தந்தையாம் கடவுள் தம் மக்களை எப்படி அழைத்துள்ளார் என்றும், அவர்கள் எவ்வாறு தம் மகன் இயேசு கிறிஸ்துவினால் மன்னிக்கப் பெற்று, பாவத்திலிருந்து விடுதலை பெற்றார்கள் என்றும், கடவுளின் தூய ஆவியால் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகின்றார்கள் என்றும் கூறுகிறார் (1-3). இரண்டாம் பகுதியில் வாசகர்கள் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள உறவைத் தங்கள் வாழ்வில் காட்ட வேண்டும். என்கிறார் ஆசிரியர். பொதுவான சமூக அன்பு வாழ்வும், குடும்ப அன்பு வாழ்வும் இந்த ஒற்றுமையை எடுத்துக் காட்ட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றார். இத்திருமுகத்தில் பல உருவகங்கள் இடம் பெறுகின்றன. திருச்சபை உடலாகவும் கட்டடமாகவும் மணமகளாவும், கிறிஸ்து தலையாகவும் மூலைக்கல்லாகவும் மணமகனாவும் உருவகிக்கப்படுவதைக் காண்கிறோம். கிறிஸ்துவுடன் இணைந்து வாழ்தல் பற்றிப் பலமுறை சொல்லப்படுகிறது; கடவுளின் அருள் வலியுறுத்தப்படுகின்றது அனைத்தும் கிறிஸ்துவின் அன்பு, தியாகம், மன்னிப்பு, அருள், தூய்மை என்னும் அடிப்படையில் பார்க்கப்படுகின்றன. அமைப்பு- முன்னுரையும் வாழ்த்தும் 1:1 - 2
- கிறிஸ்துவும் திருச்சபையும் 1:3 - 3:21
- கிறிஸ்தவப் புது வாழ்வு 4:1 - 6:20
- இறுதி வாழ்த்தும் முடிவுரையும் 6:21 - 24
|