Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 108

பகைவரிடமிருந்து விடுவிக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பாடல்) (திப 57:7-11; 60:5-12)
1 என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; நான் பாடுவேன். உம்மைப் புகழ்ந்து பாடுவேன். என் நெஞ்சே! விழித்தெழு; 2 வீணையே! யாழே! விழித்தெழுங்கள்; வைகறையை விழித்தெழச் செய்வேன். 3 ஆண்டவரே, மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 4 ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு! முகில்களைத் தொடுகின்றது உமது உண்மை! 5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! 6 உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்! என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்! 7 கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்; "வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்; சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்! 8 கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே; எப்ராயிம் என் தலைச்சீரா, யூதா என் செங்கோல்! 9 மோவாபு! எனது பாதங்கழுவும் பாத்திரம்; ஏதோமின்மீது எனது மிதியடியை எறிவேன்; பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!" 10 அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம்வரைக்கும் என்னைக் கூட்டிச் செல்பவர் யார்? 11 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ? கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ? 12 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்.13 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்துவிடுவார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!