திருவெளிப்பாடு |
|
அதிகாரம்
11
|
இரு சாட்சிகள் 1 பின்பு குச்சிபோன்ற ஓர் அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. எழுந்து, கடவுளின் கோவிலையும் பலிபீடத்தையும் அளவிடு: அங்கு வழிபடுவோரைக் கணக்கிடு.2 ஆனால் கோவிலுக்கு வெளியே உள்ள முற்றத்தை அளக்காமல் விட்டுவிடு: ஏனெனில் அது வேற்றினத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. திருநகரை அவர்கள் நாற்பத்திரண்டு மாதம் மிதித்துச் சீரழிப்பார்கள்.3 நான் என் சாட்சிகளுள் இருவரை அனுப்புவேன். அவர்கள் சாக்கு உடை உடுத்தி, ஆயிரத்து இருநூற்று அறுபது நாளும் இறைவாக்குரைப்பார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது.4 மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள்.5 யாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால் அவர்களது வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச் சுட்டெரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர் இவ்வாறு கொல்லப்படுவது உறுதி.6 தாங்கள் இறைவாக்குரைக்கும் காலத்தில் மழை பொழியாதவாறு வானத்தை அடைத்து விட அவர்களுக்கு அதிகாரம் உண்டு: தாங்கள் விரும்பும்பொழுதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், மண்ணுலகை எல்லாவகை வாதைகளாலும் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.7 அவர்கள் சான்று பகர்ந்து முடித்தபின் படுகுழியிலிருந்து வெளியே வரும் விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, அவர்களை வென்று கொன்றுவிடும்.8 சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாக அழைக்கப்படும் அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும். அங்கேதான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார்.9 பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்: அவற்றை அடக்கம் செய்யவிடமாட்டார்கள்.10 மண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து திளைப்பர்: ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்: ஏனெனில் இந்த இரண்டு இறைவாக்கினரும் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்திருந்தனர்.11 அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.12 அப்பொழுது விண்ணத்திலிருந்து எழுந்த ஓர் உரத்தகுரல், இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள் என்று தங்களுக்குச் சொன்னதை அந்த இறைவாக்கினர்கள் இருவரும் கேட்டார்கள். அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் மேகத்தின்மீது விண்ணகத்துக்குச் சென்றார்கள்.13 அந்நேரத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரின் பத்தில் ஒரு பகுதி வீழ்ந்தது. அதனால் ஏழாயிரம் பேர் இறந்தனர். எஞ்சினோர், அச்சம் மேலிட்டவர்களாய் விண்ணகக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.14 இவ்வாறு இரண்டாவது கேடு கடந்து விட்டது: இதோ, மூன்றாவது கேடு விரைவில் வரவிருக்கிறது.
ஏழாவது எக்காளம் 15 பின்னர் ஏழாவது வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே விண்ணகத்தில் உரத்த குரல் ஒன்று எழுந்தது: உலகின் ஆட்சி உரிமை நம் ஆண்டவருக்கும் அவருடைய மெசியாவுக்கும் உரியதாயிற்று. அவரே என்றென்றும் ஆட்சி புரிவார் என்று முழக்கம் கேட்டது.16 கடவுள் திருமுன் தங்கள் அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.17 கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, இருக்கின்றவரும் இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்: ஏனெனில் நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்தலானீர்.18 வேற்றினத்தார் சினந்தெழுந்தனர். உமது சினமும் வெளிப்பட்டது. இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும் உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள், இறைமக்கள், உமக்கு அஞ்சும் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும் உலகை அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்து விட்டது என்று பாடினார்கள்19 அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின. |