Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசேக்கியேல்

அதிகாரம் 22

எருசலேமின் குற்றங்கள்
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:2 மானிடா! அவளுக்குத் தீர்ப்பிட மாட்டாயா? குருதியைச் சிந்திய இந்நகருக்கு நீ தீர்ப்பிட மாட்டாயா? அவ்வாறெனில், அவளின் எல்லா அருவருப்புகளையும் எடுத்துக்கூறு.3 நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தனக்குத் தண்டனை நாள் வரும்படித் தன் நடுவில் குருதியைச் சிந்தித் தனக்கெனச் சிலைகளைச் செய்து தீட்டுப்படுத்திக் கொண்ட நகர் இதுவே!4 நீ சிந்திய குருதியினால் குற்றப்பழிக்கு ஆளானாய். நீ வடித்த தெய்வச் சிலைகளால் தீட்டுப்பட்டவளானாய். நீ உன் நாள்களை முடித்து விட்டாய். உன் ஆண்டுகளை முடிவுக்குக் கொணர்ந்து விட்டாய். ஆகவே உன்னை வேற்றினத்தாருக்கு இழி பொருளாகவும், எல்லா நாட்டினருக்கும் ஏளனப் பொருளாகவும் ஆக்குவேன்.5 உன் அருகில் உள்ளோரும் தொலைவில் உள்ளோரும் உன்னைப் பேர்கெட்ட நகர் எனவும் அமளி நிறைந்தவள் எனவும் இகழ்வர்.6 உன்னிடத்திலுள்ள இஸ்ரயேலின் தலைவர்கள் தங்கள் வலிமையால் குருதி சிந்துகிறார்கள்:7 உன்னிடையே தாய் தந்தையரை அவமதித்தார்கள்: அன்னியரைத் துன்புறுத்தித் தந்தையற்றோதரையும் கைம்பெண்களையும் இழிவாய் நடத்தினார்கள்.8 நீயோ எனக்குரிய தூய்மையானவற்றை அவமதித்து, ஓய்வுநாள்களைத் தீட்டுப்படுத்தினாய்.9 புறங்கூறிக் கொலை செய்வோர் உன்னிடம் உள்ளனர். அவர்கள் மலைகளின்மேல் படைக்கப்பட்டதை உண்கின்றனர். உன்னிடையே முறைகேடானதைச் செய்கின்றனர்.10 தங்கள் தந்தையின் திறந்த மேனியை வெளிப்படுத்துகிறவர்களும் தீட்டான காலத்தில் பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னிடையே உள்ளனர்.11 ஒருவன் அடுத்திருப்பவன் மனைவியுடன் முறைதவறி நடக்கிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளைக் கெடுக்கிறான். வேறொருவன் தன் தந்தைக்குப் பிறந்த தன் சகோதரியையே பலவந்தப்படுத்துகிறான்.12 உன்னிடையே பலர் குருதி சிந்தக் கையூட்டுப் பெறுகின்றனர். நீ வட்டி வாங்குகிறாய், கொடுத்ததற்கு மேலாய்ப் பிடுங்கி, அடுத்திருப்பவனை ஒடுக்குகிறாய். நீ என்னை மறந்துவிட்டாய், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.13 உன் நீதியற்ற வருமானத்தை முன்னிட்டும் நீ உன்னிடையே சிந்திய இரத்தத்தை முன்னிட்டும் நான் என் கைகளைத் தட்டுவேன்.14 நான் உன்னைத் தண்டிக்கும் நாளில் உன் மனவுறுதி நிலைத்திருக்குமா? அல்லது உன் கைகள் வலிமையுடன் விளங்கிடுமா? ஆண்டவராகிய நானே இதைச் சொல்கிறேன். நான் இதைச் செய்தே தீர்வேன்.15 உன்னை வேற்றினத்தாரிடையே சிதறடிப்பேன்: நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன்: உன் அருவருப்புக்கு ஒரு முடிவு கட்டுவேன்.16 வேற்றினத்தாரிடையே தீட்டுப்பட்டவளாய் நீ நிற்கையில், நானே ஆண்டவர் என அறிந்து கொள்வாய்.

கடவுளின் புடமிடும் சூளை
17 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:18 மானிடா! இஸ்ரயேல் வீட்டார் எனக்குக் களிம்பாகிவிட்டனர். அவர்கள் எல்லாரும் எரி நெருப்பில் கிடக்கும் வெள்ளி, வெண்கலம், வெள்ளீயம், இரும்பு, ஈயம் ஆகியன போலாயினர்: அவர்கள் களிம்பாகி விட்டார்கள் .19 ஆகவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீங்கள் யாவரும் களிம்பாகி விட்டதால் உங்கள் எல்லாரையும் எருசலேமில் ஒன்று சேர்ப்பேன்.20 வெள்ளி, வெண்கலம், இரும்பு, ஈயம் ஆகியவற்றை நெருப்பிலிட்டு உருக்குவது போல், நானும் என் சினத்திலும் சீற்றத்திலும் நகரின் நடுவில் இட்டு உருக்குவேன்.21 நான் உங்களை ஒன்றாய்ச் சேர்த்து, உங்கள் மீது என் சினத்தின் கனலை ஊதுவேன். நீங்களும் நகரின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.22 வெள்ளி சூளையில் உருக்கப்படுவது போல் நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள். அதன் மூலம் ஆண்டவராகிய நான் என் சினத்தை உங்கள் மீது கொட்டியுள்ளேன் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

இஸ்ரயேல் தலைவர்களின் பாவங்கள்
23 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:24 மானிடா! அந்த நாட்டுக்குச் சொல்: நீ தூய்மைப்படுத்தப் பெறாத நாடு. ஏனெனில் என் சினத்தின் நாள்களில் உன்னில் மழை பெய்யவில்லை.25 அவளின் போலி இறைவாக்கினர் சதித்திட்டம் தீட்டி இரையைக் கிழிக்கும் கர்ச்சிக்கின்ற சிங்கம் போல் மக்களை விழுங்குகிறார்கள். அவர்கள் விலையுயர்ந்த கருவூலத்தையும் பொருள்களையும் எடுத்துச் செல்கின்றனர். கைம்பெண்களை நகரிடையே மிகுதியாக்குகின்றனர். 26 அவளின் குருக்கள் என் திருச்சட்டத்தை மீறுகின்றனர். எனக்குரிய தூய்மையானவற்றைத் தீட்டுப்படுத்துகின்றனர். தூய்மையானவற்றிற்கும் பொதுவானவற்றிற்கும் வேற்றுமைபாராமலும், தீட்டானவற்றையும் தீட்டற்றவற்றையும் பிரித்துணராமலும் இருக்கின்றனர். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது பற்றிக் கவலையற்றிருந்தன27 அவளின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள்போல் உள்ளனர். அநீதியாய்ச் செல்வம் ஈட்ட மக்களைக் கொலை செய்து குருதி சிந்துகின்றனர்.28 அவளின் போலி இறைவாக்கினர் இச்செயல்களைப் பொய்க்காட்சிகள் மூலமும், பொய்க்குறிகள் மூலமும் வெள்ளையடித்து மூடி மறைக்கிறார்கள். ஆண்டவர் சொல்லாதபோதே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே என்கிறார்கள்.29 நாட்டின் பொதுமக்கள் பிறர்பொருளைப் பறிக்கின்றனர்: கொள்ளையடிக்கின்றனர். ஏழைகளையும் எளியவர்களையும் துன்புறுத்தி, அன்னியரை இழிவாய் நடத்தி, நீதி வழங்க மறுக்கின்றனர்.30 எனக்கும் இந்நாட்டு மக்களுக்குமிடையே ஒரு சுவரை எழுப்பி, அதன் மூலம் நான் இந்த நாட்டு மக்களை அழிக்காதபடி தடுப்பவன் ஒருவனை அவர்களிடையே தேடினேன். ஆயினும் யாரும் கிட்டவில்லை.31 எனவே நான் அவர்கள்மேல் என் சினத்தைக் கொட்டி என் எரிசினத்தால் அவர்களை விழுங்குவேன். அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர்கள் தலைமீதே சுமத்துவேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!