குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல் |
|
அதிகாரம்
5
|
திருக்கோவிலுக்கான பொருள்கள் ..............தொடர்ச்சி 1 இவ்வாறு சாலமோன் செய்து வந்த ஆண்டவரின் இல்லப்பணி முடிவுற்றபோது, அவர்தம் தந்தை தாவீது கடவுளுக்கு அர்ப்பிணத்தவற்றை எல்லாம் கொண்டுவந்து, பொன் வெள்ளியையும் எல்லாவிதக் கலன்களையும் கடவுள் இல்லத்தின் கருவூலங்களில் வைத்தார்.
உடன்படிக்கைப் பேழையைக் கோவிலுக்குக் கொணர்தல் (1 அர 8:1-9) 2 பின்பு, சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சீயோன் என்ற தாவீதின் நகரிலிருந்து கொண்டு வருவதற்காக இஸ்ரயேலின் பெரியோர், எல்லாக் குலத் தலைவர்கள், இஸ்ரயேல் மக்களின் குடும்பத் தலைவர்கள் ஆகியோரை எருசலேமில் ஒன்று கூட்டினார்.3 அவ்வாறே இஸ்ரயேலின் எல்லா ஆள்களும் ஏழாம் மாதத் திருவிழாவின்போது அரசர்முன் கூடினர்.4 இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தபின் பேழையை எடுத்து,5 அதையும் சந்திப்புக்கூடாரத்தையும் அங்கிருந்த புனிதக் கலன்களையும் கொண்டுவந்தனர். லேவியக் குருக்களே அவற்றைக் கொண்டு வந்தனர்.6 சாலமோன் அரசரும் பேழைக்கு முன்பாகக் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் எண்ணற்ற, கணக்கற்ற கிடாய்களையும் காளைகளையும் பலியிட்டனர்.7 அவ்வாறே குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவிலின் கருவறையாகிய திருத்தூயகத்திற்குக் கொண்டு வந்து, அதற்குரிய இடமாகிய கெருபுகளின் இறக்கைகளுக்குக் கீழே வைத்தனர்.8 கெருபுகள், பேழை வைக்கப்பட்ட இடத்தின்மேல் தங்கள் இறக்கைகளை விரித்து, பேழையையும் அதன் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.9 பேழையின் தண்டுகள் நீளமாய் இருந்ததால் அவற்றின் முனைகள் கருவறையில் பேழைக்குமுன் தெரிந்தன: ஆனால் வெளியிலிருந்து காண இயலாது. பேழை இன்றுவரை அவ்விடத்திலேயே இருக்கிறது.10 இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, ஆண்டவர் ஓரேபில் அவர்களோடு உடன்படிக்கை செய்கையில், மோசே இவர்களுக்குக் கொடுத்திருந்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அப்பேழைக்குள் இருக்கவில்லை.11 குருக்கள் தூயகத்திலிருந்து வெளியே வந்தபோது அவர்களது பிரிவின் முறைகளைக் கணிக்காமல் அனைவரும் தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டனர்.12 லேவியப் பாடகர், அதாவது, ஆசாப், ஏமான், எதுத்தூன் என்போரின் புதல்வரும் உறவினரும் மென்துகில் அணிந்து கைத்தாளங்களையும், தம்புருகளையும், யாழ்களையும் இசைத்துப் பலிபீடத்தின் கீழ்த்திசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு நூற்றிருபது ஆசாரியர் எக்காளங்களை ஊதிக் கொண்டிருந்தனர்.13 எக்காளம் ஊதுவோரும் பாடகரும் இணைந்து ஒரே குரலில் ஆண்டவருக்கு மாட்சியும் நன்றியும் செலுத்தினர். அவர்கள் எக்காளம் ஊதி, கைத்தாளம் கொட்டி, இசைக்கருவிகள் மீட்டி, ஆண்டவர் நல்லவர் என்றுமுளது அவர்தம்
இரக்கம் என்று ஒரே குரலில் ஆண்டவருக்குப் புகழிசைத்தனர். மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிர14 மேகத்தை முன்னிட்டு குருக்கள் அங்கு நின்று திருப்பணி புரிய இயலவில்லை: ஏனெனில் ஆண்டவரின் மாட்சி கடவுளின் இல்லத்தை நிரப்பிற்று. |