நாகூம் |
|
அதிகாரம்
2
|
நினிவேயின் வீழ்ச்சி 1 உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்; கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து; வழிகளில் காவலர்களை அமர்த்து; உம் இடையே வரிந்து கட்டிக்கொள்; உன் படை வலிமையை மிகுதிப்படுத்து. 2 இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்; கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்யையடித்தனர்; அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப்போட்டனர். 3 எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை; அவனுடைய போர்வீரர் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்; போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கின்றது; குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன. 4 வெறிபிடித்தவனைப்போல் தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன; திறந்த வெளியில் அவை அங்குமிங்குமாய் விரைகின்றன; தீப்பந்தங்களைப்போலச் சுடர்விடுகின்றன; மின்னலைப்போலப் பாய்கின்றன. 5 படைத்தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்; அவர்கள் செல்லும்போது இடறுகின்றார்கள்; கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றார்கள்; காப்புக் கருவி அமைத்தாயிற்று. 6 ஆறுகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டன. அரண்மனை இடிந்து கரைந்தது. 7 அரசி அணிகள் களையப்பெற்று நாடு கடத்தப்படுகின்றாள்; அவளுடைய பணிப்பெண்கள் புறாக்களைப்போலப் பெருமூச்செறிந்து, மாரடித்துப் புலம்பகின்றார்கள். 8 உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்; 'நில்லுங்கள், நில்லுங்கள்!' என அவர்கள் அலறுகிறார்கள்; ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை. 9 வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்; பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்; கருவூலங்கள் மிகப்பெரியவை; அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களுக்கு அளவே இல்லை. 10 வெறுமை! பாழ்! அழிவு! உள்ளம் சோர்ந்துவிட்டது; கால்கள் தள்ளாடுகின்றன; திகில் அனைவரையும் முற்றிலும் ஆட்கொள்கிறது; முகங்ளெல்லாம் வெளிறிப் போகின்றன. 11 சிங்கங்களின் குகை எங்கே? சிங்கக் குட்டிகள் உலாவும் உறைவிடம் எங்கே? அச்சமின்றி இருந்த தன் குட்டிகளுக்கு அது இரை தேடிக்கொணர்ந்து போட்ட இடம் இதுவன்றோ? 12 சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும் தேவையான அளவு இரையைப் பீறிக் கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் நிரப்பிற்று. 13 இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கு எதிராக நான் எழும்புவேன்; உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்; உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்; நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்; உன் தூதர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள். |