திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) |
|
அதிகாரம்
9
|
நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல் (பாடகர் தலைவர்க்கு; 'மகனுக்காக உயிரைக்கொடு' என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா) 1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களி கூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.4 நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்; என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர்.6 எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.7 அவர்களின் நகர்களை நீர் தரைமட்டம் ஆக்கினீர்; அவர்களைப்பற்றிய நினைவு அற்றுப் போயிற்று. ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மன்னளினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.9 ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.10 உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கைகொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை.11 சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;12 ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர் எளியோரை நினைவில் கொள்கின்றார்; அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார்.13 ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்; என்னைப் பகைப்போரால் எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்; சாவின் வாயினின்று என்னை விடுவியும்.14 அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில் உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்; நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன்.15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.16 ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்; பொல்லார் செய்த செயலில் அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை, இசை; சேலா)17 பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்; கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.18 மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.19 ஆண்டவரே, எழுந்தருளும்; மனிதரின் கை ஓங்க விடாதேயும்; வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக!20 ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்; தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக! |