யோபு |
|
அதிகாரம்
36
|
யோபினுடைய துன்பங்களின் உட்பொருள் 1 எலிகூ தொடர்ந்து பேசலானான்:2 சற்றுப் பொறும்: காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய் நான் கூற வேண்டியவற்றை.3 தொலையிலிருந்து என் அறிவைக் கொணர்வேன்: எனை உண்டாக்கியவர்க்கு நேர்மையை உரித்தாக்குவேன்.4 ஏனெனில், மெய்யாகவே பொய்யன்று என் சொற்கள்: அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.5 இதோ! இறைவன் வல்லவர்: எவரையும் புறக்கணியார்: அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.6 கொடியவரை அவர் வாழவிடார்: ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்:7 நேர்மையாளர்மீது கொண்ட பார்வையை அகற்றார்: அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்: என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.8 ஆனால் அவர்கள் சங்கிலியால் கட்டுண்டாரெனில், வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,9 அவர்கள் செய்ததையும் மீறியதையும், இறுமாப்புடன் நடந்ததையும் எடுத்து இயம்புவார்.10 அறிவுரைகளுக்கு அவர்கள் செவியைத் திறப்பார்: தீச்செயலிலிருந்து திரும்புமாறு ஆணையிடுவார்.11 அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால், வளமாய்த் தங்கள் நாள்களையும் இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.12 செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர். அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.13 தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்: அவர்களை அவர் கட்டிப்போடுகையில் உதவிக்காகக் கதறமாட்டார்.14 அவர்கள் இளமையில் மடிவர்: காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.15 துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்: வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.16 இடுக்கண் வாயினின்று உங்களை இழுத்துக் காத்தார்: ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார். உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.17 பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது: தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.18 வளமையால் வழிபிறழாமல் பார்த்துக்கொள்ளும்: நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.19 உம் நிறைந்த செல்வமும் வல்லமையின் முழு ஆற்றலும் இன்னலில் உமக்கு உதவுமா?20 இருந்த இடத்திலேயே மக்கள் மடியும் இரவுக்காக ஏங்காதீர்.21 துன்பத்தைவிட தீச்செயலையே நீர் தேர்ந்துகொண்டீர்: எனவே அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.
கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல் 22 இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்: அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?23 அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்? அவர்க்கு 'நீர் வழிதவறினிர்″ எனச் சொல்ல வல்லவர் யார்?24 அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும். மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.25 மனித இனம் முழுவதும் அதைக் கண்டது: மனிதன் தொலையிலிருந்தே அதை நோக்குவான்.26 இதோ! இறைவன் பெருமை மிக்கவர்: நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்: அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை: கணக்கிட முடியாதவை.27 நீர்த்துளிகளை அவர் ஆவியாக இழுக்கின்றார்: அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.28 முகில்கள் அவற்றைப் பொழிகின்றன: மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.29 பரவும் முகில்களையும் அவர்தம் மணிப்பந்தலின் ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?30 இதோ! தம்மைச் சுற்றி மின்னல் ஒளிரச் செய்கின்றார். கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.31 இவற்றால், மக்களினங்கள்மீது தீர்ப்பளிக்கின்றார்: அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.32 மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்: இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.33 இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்: புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும். |