Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)

அதிகாரம் 10

3. மீட்ப்பு வரலாற்றில் ஞானம்
ஆதாமிலிருந்து மோசேவரை
1 உலகின் முதல் தந்தை தனிமையாகப் படைக்கப்பட்டபொழுது ஞானம் அவரைப் பேணிக் காத்தது: அவருடைய குற்றங்களிலிருந்து அவரை விடுவித்தது.2 அனைத்தையும் ஆளும் ஆற்றலை அவருக்கு அளித்தது.3 நீதியற்றவன் ஒருவன் தன் சினத்தினால் ஞானத்தைவிட்டு அகன்றான்: சீற்றத்தினால் தன் உடன்பிறப்பைக் கொன்றதால் அவனும் அழியலானான்.4 அவன்பொருட்டு மண்ணுலகைப் பெரும் வெள்ளம் மூழ்கடித்த பொழுது, ஞானம் மீண்டும் அதைக் காப்பாற்றியது: நீதிமானை ஒரு சிறிய மரத்துண்டால் வழி நடத்தியது.5 மக்களினங்கள் தீமையுடன் கூட்டுச் சேர்ந்து குழப்பத்திற்கு உள்ளானபோது ஞானம் நீதிமானைக் கண்டு கொண்டது: அவரைக் கடவுள் திருமுன் மாசற்றவராகக் காத்தது: தம் பிள்ளைபால் கொண்டிருந்த பற்றை மேற்கொள்ள அவருக்குத் துணிவை அளித்தது.6 இறைப்பற்றில்லாதவர்கள் அழிந்தபோது ஞானம் நீதிமானைக் காப்பாற்றியது. ஐந்து நகர்கள்மீது இறங்கி வந்த நெருப்பிலிருந்து அவரும் உயிர் தப்பினார்.7 அவர்களது தீயொழுக்கத்துக்குச் சான்றாக அந்த நகரங்கள் புகை உமிழும் பாழ்வெளியாக மாற்றப்பட்டன: அங்குச் செடிகள் என்றுமே கனியாத காய்களைக் கொடுக்கின்றன: பற்றுறதியில்லா ஆன்மாவின் நினைவுச்சின்னமான உப்புத்தூணும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது.8 அவர்கள் ஞானத்தை ஒரு பொருட்டாகக் கருதாததால், நன்மையைக் கண்டுணர இயலாமற்போனார்கள்: மேலும், தங்கள் அறிவின்மையின் அடையாளத்தை மனித இனத்திற்கு விட்டுச் சென்றார்கள். அதனால் அவர்கள் செய்த தவறுகள் புலப்படாமற் போகா.9 ஆனால் தனக்குப் பணிபுரிந்தவர்களை ஞானம் துன்ப துயரங்களிலிருந்து விடுவித்தது.10 தம் சகோதரனின் சினத்துக்குத் தப்பியோடிய நீதிமான் ஒருவரை ஞானம் நேர்மையான வழியில் நடத்திச் சென்றது; இறையரசை அவருக்குக் காட்டியது; வானதூதர்பற்றிய அறிவை அவருக்குக் கொடுத்தது; உழைப்பில் அவர் வளமையுறச் செய்தது; அவரது உழைப்பின் பயனைப் பெருக்கியது. 'தூயவை' (காண். தொநூ 28:10-15) என்றும்
'திருவிடம்' (காண். தொநூ 31:13) என்றும்
பொருள் கொள்ளலாம்.
11 அவரை ஒடுக்கியோர் பேரவாக் கொண்டபோது அது அவருக்குத் துணை நின்று, அவரைச் செல்வராக்கியது.12 பகைவரிடமிருந்து அது அவரைப் பாதுகாத்தது: தாக்கப் பதுங்கியிருந்தோரிடமிருந்து அவரைக் காப்பாற்றியது: கடும் போராட்டத்தில் அவருக்கு வெற்றி தந்தது. இவ்வாறு இறைப்பற்று எல்லாவற்றையும்விட வலிமை மிக்கது என்று அவர் உணரச் செய்தது.13 நீதிமான் ஒருவர் விலைக்கு விற்கப்பட்டபொழுது ஞானம் அவரைக் கைவிடவில்லை: பாவத்திலிருந்து அவரை விடுவித்தது.14 இருட்டறைக்குள் அவரோடு அது இறங்கிச் சென்றது: அரச செங்கோலையும், அவரை ஒடுக்கியோர்மீது அதிகாரத்தையும் அவருக்கு அளிக்கும்வரை விலங்கிடப்பட்டிருந்த அவரை விட்டு அது விலகவில்லை. அவர்மேல் குற்றம் சுமத்தியோர் பொய்யர் என்பதை மெய்ப்பித்தது: அவருக்கோ முடிவில்லா மாட்சியை அளித்தது.

விடுதலைப் பயணம்
15 ஒடுக்கிய மக்களினத்தாரிடமிருந்து தூய மக்களையும் மாசற்ற வழி மரபினரையும் ஞானம் விடுவித்தது.16 அது ஆண்டவருடைய ஊழியர் ஒருவரின் ஆன்மாவில் நுழைந்தது. கொடிய மன்னர்களை வியத்தகு செயல்களாலும் அடையாளங்களாலும் எதிர்த்து நின்றது.17 தூயவர்களின் உழைப்புக்கு அது கைம்மாறு கொடுத்தது: வியப்புக்குரிய வழியில் அவர்களை நடத்திச் சென்றது: பகலில் அவர்களுக்கு நிழலாகவும் இரவில் விண்மீன் சுடராகவும் இருந்தது.18 செங்கடல்மீது அது அவர்களை அழைத்துச்சென்றது: ஆழ்கடல் வழியாக அவர்களை நடத்திச் சென்றது.19 அவர்களின் பகைவர்களை அது நீரினுள் அமிழ்த்தியது: பின், ஆழ்கடலிலிருந்து அவர்களை வெளியே உமிழ்ந்தது.20 ஆகையால் நீதிமான்கள் இறைப்பற்றில்லாதவர்களைக் கொள்ளையடித்தார்கள்: ஆண்டவரே, உமது திருப்பெயரைப் பாடிப் புகழ்ந்தார்கள்: வெற்றி அளிக்கும் உமது கைவன்மையை ஒருமிக்கப் போற்றினார்கள்.21 ஏனெனில் பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!