எரேமியா |
|
அதிகாரம்
16
|
எரேமியாவின் வாழ்வு ஓர் அடையாளம் 1 ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு.2 நீதி திருமணம் செய்யாதே: இந்த இடத்தில் உனக்குப் புதல்வரோ புதல்வியரோ இருக்கவேண்டாம்.3 இந்த இடத்தில் பிறந்துள்ள புதல்வர், புதல்வியரைப் பற்றியும் அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே:4 அவர்கள் கொடும் நோய்களால் மடிவார்கள். அவர்களுக்காக யாரும் அழமாட்டார்கள்: அவர்களை அடக்கம் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சாணம்போல் தரையில் கிடப்பார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அழிந்து போவார்கள். அவர்களின் பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும்.5 ஆண்டவர் கூறுவது இதுவே: நீ இழவு வீட்டுக்குப் போக வேண்டாம்: அவர்களுக்காக அழுவதற்கோ துக்கம் கொண்டாடுவதற்கோ நீ செல்ல வேண்டாம்: ஏனெனில் நான் என் அமைதியையும் பேரன்பையும் இரக்கத்தையும் இந்த மக்களிடமிருந்து எடுத்துவிட்டேன்.6 இந்நாட்டிலுள்ள பெரியோரும் சிறியோரும் இறந்து போவர். அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்: அவர்களுக்காக அழவும் மாட்டார்கள். அவர்களை முன்னிட்டு யாரும் தங்களைக் காயப்படுத்திக்கொள்ளவோ மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள்.7 இறந்தோரை எண்ணித் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதல் அளிக்க, அப்பம் தருவார் யாருமிரார். தாய் அல்லது தந்தைக்காகத் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதலின் கிண்ணத்தில் பருகக் கொடுக்கவும் யாருமிரார்.8 விருந்து நடக்கும் வீடுகளுக்குச் செல்லாதே: உண்டு குடிப்பதற்காக அங்கு அமராதே,9 ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இடத்தில் மகிழ்ச்சி ஒலியும், உவகைக் குரலும், திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். இவை உங்கள் வாழ்நாளில் உங்கள் கண்முன்னே நிகழும்.10 நீ இம்மக்களுக்கு இச்சொற்களை எல்லாம் அறிவிக்கும்போது அவர்கள் உன்னை நோக்கி, எங்களுக்கு எதிராக இப்பெருந்தீங்கு அனைத்தையும் ஆண்டவர் அறிவிக்கக் காரணம் என்ன? எங்கள் குற்றம் என்ன? எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன? என்று கேட்பார்கள்.11 நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது: ஆண்டவர் கூறுவது: உங்கள் மூதாதையர் என்னைப் புறக்கணித்தனர். வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினர். அவற்றுக்கு ஊழியம் செய்து அவற்றையே வழிபட்டனர். என்னையோ புறக்கணித்தனர். என் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.12 நீங்களோ உங்கள் மூதாதையரைவிடப் பெருந்தீமைகள் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் தீய இதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கின்றீர்கள்: என் சொல்லுக்கோ செவிகொடுப்பதில்லை.13 ஆகையால் இந்த நாட்டிலிருந்து, உங்களுக்கோ உங்கள் மூதாதையருக்கோ முன்பின் தெரியாத ஒரு நாட்டுக்கு, உங்களைத் தூக்கி எறிவேன். அங்கு நீங்கள் அல்லும் பகலும் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்: அங்கு என் ஆதரவு உங்களுக்கு இராது.
அடிமைத்தனத்தினின்று திரும்புதல் 14 ஆதலால் ஆண்டவர் கூறுவது: இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வாழும் ஆண்டவர் மேல் ஆணை என்று யாரும் சொல்லமாட்டார்கள்.15 மாறாக, வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் விரட்டப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை என்று கூறுவாhகள். ஏனெனில் நான் அவர்களின் மூதாதையருக்குக் கொடுத்திருந்த நாட்டிற்கே அவர்களை மீண்டும் அழைத்து வருவேன்.
வரவிருக்கும் தண்டனை 16 ஆண்டவர் கூறுவது: இதோ, மீனவர் பலரை அனுப்புகிறேன். அவர்கள் அவர்களைப் பிடிப்பர். அதன்பின் வேடர் பலரையும் அனுப்புவேன். அவர்கள் அனைத்து மலைகளிலும் குன்றுகளிலும் பாறையிடுக்குகளிலும் உள்ளோரை வேட்டையாடுவர்.17 அவர்கள் வழிகளெல்லாம் என் கண்முன்னே உள்ளன. அவை எனக்கு மறைவாய் இருப்பதில்லை. அவர்களின் குற்றங்கள் என் பார்வைக்குத் தப்புவதில்லை.18 முதற்கண், அவர்களின் குற்றத்திற்காகவும், பாவத்திற்காகவும் அவர்களுக்கு இரட்டிப்பான தண்டனை கொடுப்பேன். ஏனெனில், பிணம் ஒத்த சிலைகளால் அவர்கள் என் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்: அருவருப்பானவற்றால் என் உரிமைச் சொத்தை நிரப்பினார்கள்.
எரேமியாவின் நம்பிக்கை 19 ஆண்டவரே! என் வலிமையே! என் அரணே! துன்பக் காலத்தில் என் புகலிடமே! உலகின் எல்லைகளிலிருந்து வேற்றினத்தார் உம்மிடம் வந்து, எங்கள் மூதாதையர் பொய்ம்மையை மரபுரிமையாகப் பெற்றனர்: எதற்கும் பயனற்ற சிலைகளையே பெற்றனர்.20 மனிதர் தமக்குத் தாமே தெங்வங்களைச் செய்ய முடியுமா? அவை தெய்வங்கள் அல்லவே! என்று கூறுவார்கள்.21 எனவே இதோ அவர்கள் அறியும்படி செய்வேன்: என் ஆற்றலையும் என் வலிமையையும் அறியும்படி செய்வேன். என் பெயர் ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். |