Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

விடுதலைப்பயணம் (யாத்திராகமம்)

அதிகாரம் 5

பார்வோன் முன் மோசேயும் ஆரோனும்
1 பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, ″ ″ பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்″ ″ என்று அறிவித்தனர்.2 அதற்குப் பார்வோன், ″ ″ யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன்: இஸ்ரயேலரை நான் போகவிடவும் மாட்டேன்″ ″ என்று கூறினான்.3 அதற்கு அவர்கள், ″ ″ எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார். பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும். இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ அவர் எங்களைத் தாக்கிவிடுவார்″ ″ என்று கூறினர்.4 எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, ″ ″ மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்″ ″ என்று கூறினான்.5 மேலும், பார்வோன், ″ ″ பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள்″ ″ என்றான்.6 அதே நாளில், பார்வோன் மக்களிடம் அடிமைவேலை வாங்கும் அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளருக்கும் ஆணைவிடுத்து,7 ″ ″ செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்! அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.8 ஆயினும் இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை. அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது. ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள். இதனால்தான், நாங்கள் போகவேண்டும்: எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும் என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.9 அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள். வெற்றுப் பேச்சுகளை நம்பாமல் அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்″ ″ என்றான்.10 எனவே வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் சென்று அவர்களை நோக்கி, ″ ″ பார்வோன் கூறுவது இதுவே: நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.11 நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக் கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்″ ″ என்று அறிவித்தனர்.12 எனவே வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.13 ″ ″ வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்″ ″ என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.14 ″ ″ முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச் செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும் ஏன் செய்துமுடிக்கவில்லை?″ ″ என்று கேட்டு, பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள் தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக நியமித்திருந்தவர்கள் அடித்தனர்.15 இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, ″ ″ ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?16 உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே செங்கல் அறுங்கள் என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்″ ″ என்று கதறினர்.17 அதற்கு அவன், ″ ″ சாம்பேறிகள்: நீங்கள் சோம்பேறிகள்: அதனால்தான் நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.18 எனவே இப்போதே வேலைக்குச் செல்லுங்கள். வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது. எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்″ ″ என்று கூறினான்.19 அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது என்று சொல்லக் கேட்டபோது, தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.20 பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது, தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து அவர்களை நோக்கி,21 ″ ″ ஆண்டவர் உங்களைக் கவனித்துக் கொள்ளட்டும்! உங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்! ஏனெனில், பார்வோன் முன்னிலையிலும் அவனுடைய அலுவலர் முன்னிலையிலும் நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்! நம்மைக் கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்துவிட்டீர்கள்″ ″ என்றனர்.

மோசேயின் முறையீடு
22 அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, ″ ″ என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?23 உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை″ ″ என்று கூறினார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!