மக்கபேயர் - இரண்டாம் நூல் | ||
அதிகாரம் 5 |
||
எகிப்தின் மீது படையெடுப்பு 1 அதே வேளையில் அந்தியோக்கு எகிப்தின்மீது இரண்டாம் முறையாகப் படையெடுத்தான்.2 எருசலேமெங்கும் ஏறத்தாழ நாற்பது நாள் நடுவானில் காட்சிகள் தோன்றின: பொன்னாடை அணிந்த குதிரைவீரர்கள் ஈட்டியை ஏந்தினவர்களாய் உருவிய வாளுடன் கூட்டமாக உலவிக் கொண்டிருந்தார்கள்.3 குதிரைப்படை அணிவகுத்து நின்றது: அப்பக்கமும் இப்பக்கமுமாகத் தாக்குதல்களும் எதிர்த் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன: கேடயங்கள் சுழன்றன: ஈட்டிகள் குவிந்தன: அம்புகள் பாய்ந்தோடின: குதிரைகளுக்குரிய பொன்அணிகளும் எல்லாவகைப் படைக்கலங்களும் மின்னின.4 ஆகவே இக்காட்சி ஒரு நல்ல அறிகுறியாக இருக்கவேண்டும் என்று எல்லாரும் மன்றாடினர்.யாசோன் எருசலேமை முற்றுகையிடல் 5 அந்தியோக்கு இறந்துவிட்டதாக ஒரு புரளி பரவியது. உடனே யாசோன் ஆயிரத்திற்கும் குறையாத ஆள்களைக் கூட்டிக்கொண்டுபோய்த் திடீரென எருசலேமைத் தாக்கினான். நகர மதில்மேல் இருந்த படையினர் துரத்தியடிக்கப்பட்டனர். இறுதியாக நகர் பிடிபடும் நிலையில் இருந்தபோது மெனலா கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தான்.6 ஆனால் யாசோன் தன் சொந்த நகரத்தாரையே இரக்கமின்றிக் கொன்று குவித்தான்: தன் இனத்தார்மீதே கொள்ளும் வெற்றி மாபெரும் தோல்வி என்பதை அவன் உணரவில்லை: தன் சொந்த மக்கள்மீது அல்ல, தன் எதிரிகள்மீதே வெற்றி கொள்வதாக எண்ணிக்கொண்டான். 7 ஆயினும் ஆட்சிப் பொறுப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. இறுதியில் தன் சூழ்ச்சியின்பொருட்டு இழிவுற்றவனாய் அம்மோனியர் நாட்டில் மீண்டும் அடைக்கலம் புகுந்தான். 8 இறுதியில் அவன் இரங்கத்தக்க முடிவை அடைந்தான்: ஏனெனில் அரேபியருடைய மன்னனான அரேத்தா முன்பு குற்றம்சாட்டப்பட்டான்; நகர் விட்டு நகர் ஓடினான்: அனைவராலும் துரத்தியடிக்கப்பட்டான்: சட்டங்களை எதிர்ப்பவன் என்று வெறுக்கப்பட்டான்: தன் சொந்த நாட்டையும் மக்களையும் கொல்பவன் என்று அருவருக்கப்பட்டான்; இறுதியில் எகிப்த்துக்கு விரட்டப்பட்டான்; ![]() என்பது கிரேக்க பாடம். 9 இலசதேமோனியரோடு யூதர்கள் கொண்டிருந்த உறவின்பொருட்டு அவர்களிடமிருந்து பாதுகாப்புப்பெறலாம் என்னும் நம்பிக்கையுடன் கடல் கடந்து சென்றான்: பலரையும் தங்கள் சொந்த நாட்டினின்று அகதிகளாகக் கடத்தியவனே இறுதியில் அகதியாக மாண்டான்.10 அடக்கம் செய்யாமல் பலரையும் வெளியே வீசியெறிந்த அவனுக்காகத் துயரம் கொண்டாடுவார் யாருமில்லை. அவனுக்கு எவ்வகை அடக்கச் சடங்கும் நிகழவில்லை: அவனுடைய மூதாதையரின் கல்லறையில் இடமும் கிடைக்கவில்லை. அந்தியோக்கு எருசலேமைத் தாக்குதல் 11 நடந்தவைபற்றிய செய்தி அந்தியோக்கு மன்னனுக்கு எட்டியபோது யூதேயா நாடு கிளர்ச்சியில் இறங்கியுள்ளது என்று அவன் எண்ணினான்: ஆகவே சீறியெழுந்து எகிப்தினின்று புறப்பட்டு எருசலேமை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.12 எதிர்ப்பட்ட எவரையும் இரக்கமின்றி வெட்டி வீழ்த்தவும், வீடுகளில் தஞ்சம் புகுந்தோரைக் கொல்லவும் தன் படைவீரர்களுக்கு ஆணையிட்டான்.13 இளைஞரும் முதியோரும் படுகொலை செய்யப்பட்டார்கள்: பெண்களும் சிறுவர்களும் அழிக்கப்பட்டார்கள்: கன்னிப்பெண்களும் குழந்தைகளும் கொலையுண்டார்கள்.14 மூன்று நாளுக்குள் எண்பதாயிரம் பேர் மறைந்துவிட்டனர்: நாற்பதாயிரம் பேர் போரில் கொல்லப்பட்டனர்: எஞ்சிய நாற்பதாயிரம் பேர் அடிமைகளாக நிற்கப்பட்டனர்.15 இத்தோடு மனநிறைவு அடையாத அந்தியோக்கு, திருச்சட்டத்துக்கும் தன் நாட்டுக்கும் துரோகியான மெனலா காட்டிய வழியில் உலகெங்கும் மிகக் தூயது என்று கருதப்பட்ட கோவிலிலும் புகத் துணிந்தான்:16 தீட்டுப்பட்ட தன் கைகளால் தூய கலன்களைக் கைப்பற்றினான்: தூய இடத்தின் மாட்சியும் பெருமையும் ஓங்க, வேற்று நாட்டு மன்னர்கள் அளித்திருந்த நேர்ச்சைப் படையல்களைத் தன் மாசுபடிந்த கைகளால் கவர்ந்து சென்றான்.17 இறுமாப்புக் கொண்டவனாய் அந்தியோக்கு, அந்நகரில் வாழ்ந்தவர்களின் பாவங்களைமுன்னிட்டே சிறிது காலத்திற்கு ஆண்டவர் அவர்கள்மீது சினங்கொண்டுள்ளார் என்பதை உணராதவனாய்த் தூய இடத்திற்குக் களங்கம் வருவித்தான். 18 அந்நகர மக்கள் பற்பல பாவச் செயல்களில் ஈடுபடாதிருந்ததால், கருவூலத்தைப் பார்வையிடச் செலூக்கு மன்னனால் அனுப்பப் பெற்ற எலியதோரைப்போல், இம்மனிதனும் அங்கு வந்தவுடனேயே கசையடிபட்டிருப்பான்: தன் விவேக மற்ற செயலை விட்டுவிட்டுப் பின்வாங்கியிருப்பான். 19 ஆண்டவர் தூய இடத்திற்காக மக்களைத் தேர்ந்து கொள்ளவில்லை: மக்களுக்காகவே அந்த இடத்தைத் தேர்ந்துகொண்டார். 20 ஆதலால் மக்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களில் அந்த இடத்திற்கும் பங்கு கிடைத்தது. பின்னர் அவர்கள் அடைந்த நன்மைகளிலும் அது பங்கு கொண்டது. எல்லாம் வல்லவருடைய சினத்தால் கைவிடப்பட்ட அந்த இடம், மாபெரும் ஆண்டவரோடு மக்கள் ஒப்புரவானபின், தன் முன்னைய மாட்சியை மீண்டும் பெற்றது. 21 எனவே கோவிலிருந்து எழுபத்து இரண்டு டன் வெள்ளியை எடுத்துக்கொண்டு அந்தியோக்கி நகருக்கு அந்தியோக்கு மன்னன் சென்றான்: அவனது மனம் செருக்குற்றிருந்ததால் தன்னால் தரையில் கப்பலைச் செலுத்தவும் கடலில் நடந்து செல்லவும் முடியும் என்று இறுமாப்போடு எண்ணினான்: ![]() என்பது கிரேக்க பாடம். 22 மக்களை வதைக்கக் கண்காணிப்பாளர்களை ஏற்படுத்தினான்: பிரிகிய இனத்தினனும் தன்னை அமர்த்தியவரைவிடக் கொடிய பண்பினனுமான பிலிப்பை எருசலேமில் கண்காணிப்பாளனாக அமர்த்தினான்:23 அந்திரோனிக்கைக் கெரிசிமில் கண்காணிப்பாளனாக ஏற்படுத்தினான்: இவர்கள் நீங்கலாக, மற்றவர்களைவிடக் கொடுமையாகத் தன் சொந்த மக்களையே அடக்கியாண்ட மெனலாவையும் அமர்த்தினான்: யூதர்கள்மீது கொண்டிருந்த பகைமை காரணமாக,24 மீசியர்களின் படைத்தலைவனாகிய அப்பொல்லோனை இருபத்திரண்டாயிரம் படைவீரர்களோடு அந்தியோக்கி நகருக்கு அனுப்பி வைத்தான்: வயதுவந்த ஆண்கள் அனைவரையும் கொல்லவும், பெண்களையும் இளைஞர்களையும் அடிமைகளாக விற்கவும் ஆணையிட்டான்:25 அப்பொல்லோன் வந்தபோது, நட்பு நாடி வந்தவன்போல நடித்து, தூய ஓய்வுநாள்வரை காத்திருந்தான்: அப்போது யூதர்கள் வேலை செய்யாமல் இருந்ததைக் கண்டு, படைக்கலங்கள் தாங்கி அணிவகுக்குமாறு தன் வீரர்களைப் பணித்தான்.26 வேடிக்கை பார்க்க வெளியில் வந்த அத்தனை பேரையும் வாளுக்கு இரையாக்கினான்: பின்பு படைக்கலங்கள் தாங்கிய வீரர்களோடு நகருக்குள் பாய்ந்து பெரும்திரளான மக்களை வெட்டி வீழ்த்தினான்.27 ஆனால் மக்கபே என்று அழைக்கப்பெற்ற யூதா ஏறத்தாழ ஒன்பது பேருடன் பாலைநிலத்திற்கு ஓடிச்சென்றார். காட்டு விலங்குகளைப் போன்று அவரும் அவருடைய தோழர்களும் மலைகளில் வாழ்ந்தார்கள்: தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதவாறு காட்டுக் கீரைகளை உண்டு காலம் கழித்தார்கள். |
|