அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல் |
|
அதிகாரம்
13
|
இஸ்ரயேல் அரசன் யோவகாசு 1 யூதா அரசன் அகசியாவின் மகன் யோவாசு ஆட்சியேற்ற இருபத்து மூன்றாம் ஆண்டில் ஏகூவின் மகன் யோவாசு சமாரியாவில் இருந்து கொண்டு இஸ்ரயேல் நாட்டைப் பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.2 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து வந்தான். இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரோபவாமின் பாவ வழியிலேயே அவனும் நடந்து வந்தான்.3 எனவே ஆண்டவருக்கு இஸ்ரயேல்மீது சினம்மூள அவர்களைச் சிரியா மன்னன் அசாவேலின் கையிலும் அசாவேலின் மகன் பெனதாதின் கையிலும் நீண்டநாள் விட்டுவிட்டார்.4 ஆனால் யோவகாசு ஆண்டவரின் கருணைப் பார்வையை நாட, ஆண்டவரும் அவனுக்குச் செவிசாய்த்தார். ஏனெனில் சிரியா மன்னன் பிடியில் இஸ்ரயேல் நசுக்குண்டு கிடப்பதை அவர் கண்டார்.5 இஸ்ரயேலுக்கு ஆண்டவர் ஒரு மீட்பரைத் தரவே, இஸ்ரயேலர் சிரியரின் பிடியினின்று விடுதலை அடைந்தனர். இஸ்ரயேல் மக்கள் முன்னைய நாள்களில் இருந்தது போல் தங்கள் சொந்த வீட்டில் குடியிருந்தனர்.6 ஆயினும் இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய எரொபவாம் வீட்டாரின் பாவ வழியை விட்டு விலகாது வாழ்ந்தனர். மேலும் அசேராக் கம்பம் சமாரியாவில் இன்னும் நின்று கொண்டிருந்தது.7 யோவாசுக்கு அவன் குடிகளுள் ஐம்பது குதிரை வீரரும் பத்துப் தேர்களும் பதினாயிரம் காலாள் படையினரமே எஞ்சியிருந்தனர். ஏனெனில் சிரியா மன்னன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்துத் தூசிபோல் ஆக்கியிருந்தான்.8 யோவகாசின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், அவன் பேராற்றலும், 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?9 யோவகாசு தன் மூதாதையருடன் துயில்கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் யோவாசு அரசனானான்.
இஸ்ரயேல் அரசன் யோவாசு 10 யூதா அரசன் யோவாசு ஆட்சியேற்ற முப்பத்தேழாம் ஆண்டில், யோவகாசின் மகன் யோவாசு, இஸ்ரயேல் நாட்டின் அரசனாகி, சமாரியாவில், இருந்துகொண்டு பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.11 அவன் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்: இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கிய நெபாற்றின் மகன் எரொபவாமின் பாவ வழியிலேயே நடந்து வந்தான்.12 யோவாசின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசன் அமட்சியாவுடன் போரிட்டபொழுது காட்டிய பேராற்றலும் 'இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?13 யோவாசு தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், எரொபவாம் அரியணை ஏறினான். யோவாசு சமாரியாவில் இஸ்ரயேலின் அரசர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்.
எலிசாவின் இறப்பு 14 எலிசா நோயினால் வாதைப்பட்டுச் சாகக் கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு அவரிடம் சென்று, என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே! என்று அவருக்கு முன்பாகக் கதறி அழுதான்.15 எலிசா அவனை நோக்கி, வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொள் என்றார். அவ்வாறே அவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டான்.16 அப்பொழுது அவர் இஸ்ரயேலின் அரசனை நோக்கி, வில்லை உன் கையால் வளை என்றார்.17 எலிசா தம் கைகளை அரசனின் கைகளின்மேல் வைத்து அவனை நோக்கி. கீழ்ப்பக்கமுள்ள பலகணியைத் திற என்றார். அவன் அதைத் திறந்தவுடன் எலிசா, ஓர் அம்பை எய் என்றார். அவனும் அவ்வாறே எய்தான். அவர்,
அது ஆண்டவரது மீட்பின் அம்பு: சிரியர் மீது கொள்ளவிருக்கும் வெற்றியின் அம்பு: நீ அ18 அவர் மீண்டும் அம்புகளைக் கையில் எடு என்றார். அவற்றை அவன் எடுக்கவே அவர் இஸ்ரயேல் அரசனைத் தரையில் அம்பு எய் என்றார். அவன் மூன்று முறை எய்துவிட்டு நிறுத்தினான்.19 எனவே ஆண்டவரின் அடியவர் அவன்மேல் சினம் கொண்டு, நீ ஐந்து அல்லது ஆறுமுறை எய்திருந்தால், சிரியரை முற்றிலும் கொன்றழித்திருப்பாய்! ஆனால் இப்பொழுதோ அவர்களை மூன்று முறை மட்டுமே முறியடிப்பாய் என்றார்.20 இதன்பின் எலிசா இறந்தார். அவரை அடக்கம் செய்தனர். ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் மோவாபியக் கொள்ளைக் கூட்டத்தினர் வந்து நாட்டைத் தாக்குவது வழக்கம்.21 மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்: எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.
இஸ்ரயேலுக்கும் சிரியாவுக்கும் இடையே போர் 22 யோவகாசின் வாழ்நாள் முழுவதும் சிரியாவின் மன்னன் அசாவேல் இஸ்ரயேலைத் துன்புறுத்தி வந்தான்.23 ஆனால் ஆண்டவர் அவர்களுக்குக் கருணையும் இரக்கமும் காட்டி அவர்களைப் பரிவுடன் பாதுகாத்தார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவரோடு தாம் செய்திருந்த உடன்படிக்கையின் பொருட்டு அவர்களை அழிக்கவோ, தம் திருமுன்னின்று தள்ளிவிடவோ இன்றுவரை அவர் மனம் ஒப்பவில்லை.24 சிரியாவின் மன்னன் அசாவேல் இறந்தவுடன், அவன் மகன் பெனதாது அவனக்குப் பின் மன்னன் ஆனான்.25 யோவகாசின் மகன் யோவாசு தன் தந்தையின் கையிலிருந்து அசாவேலின் மகன் பெனதாது கைப்பற்றியிருந்த நகர்களை மீண்டும் கைப்பற்றினான். யோவாசு மூன்றுமுறை அவனை முறியடித்து இஸ்ரயேலின் நகர்களை மீட்டுக் கொண்டான். |