Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருவெளிப்பாடு

அதிகாரம் 16

7. ஏழு கிண்ணங்கள்
1 கோவிலிருந்து ஒலித்த ஒரு பெரும் குரலைக் கேட்டேன். புறப்பட்டுச் செல்லுங்கள்: ஏழு கிண்ணங்களிலும் இருந்த கடவுளின் சீற்றத்தை மண்ணுலகின் மீது ஊற்றுங்கள் என்று அந்த ஏழு வானதூதர்களுக்கும் அது சொன்னது.2 உடனே முதலாம் வானதூதர் சென்று, தம் கிண்ணத்தில் இருந்ததை மண்ணுலகின்மீது ஊற்றினார். விலங்குக்குரிய குறியை இட்டுக்கொண்டு அதன் சிலையை வணங்கி வந்த மனிதர்மீது கொடிய துன்பம் தரக்கூடிய புண்கள் உண்டாயின.3 பின் இரண்டாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் ஊற்றினார். அப்பொழுது அது இறந்தோரின் இரத்தம் போன்று மாறியது. உடனே கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் மடிந்தன.4 மூன்றாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை ஆறுகள்மீதும் நீரூற்றுகள்மீதும் ஊற்றினார். உடனே அவையும் இரத்தம்போல மாறின.5 நீர்நிலைகள் மீது அதிகாரம் கொண்டிருந்த வானதூதர் பின்வருமாறு சொல்லக் கேட்டேன்: இருக்கின்றவரும் இருந்தவருமான தூயவரே, இத்தீர்ப்புகளை வழங்கும் நீர் நீதியுள்ளவர்.6 இறைமக்களுடையவும் இறைவாக்கினர்களுடையவும் இரத்தத்தைச் சிந்திய மானிடருக்கு நீர் இரத்தத்தையே குடிக்கக் கொடுத்தீர். இது அவர்களுக்குத் தகுந்த தண்டனையே.7 அப்பொழுது பலிபீடத்திலிருந்து நான் கேட்ட குரல், ஆம், கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் தீர்ப்புகள் உண்மையுள்ளவை, நீதியானவை என்றது.8 நான்காம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் கதிரவன்மீது ஊற்றினார். அதனால் மனிதரை நெருப்பாய் எரிக்கும் வன்மையை அது பெற்றது.9 உடனே மனிதர் கடும் வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். இந்த வாதைகள் மீது அதிகாரம் கொண்டிருந்த கடவுளின் பெயரை அவர்கள் பழித்தார்களே தவிர, மனம் மாறி அவரைப் போற்றிப் புகழவில்லை.10 ஐந்தாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை விலங்கு வீற்றிருந்த அரியணைமீது ஊற்றினார். உடனே அதன் அரசை இருள் கவ்விக்கொண்டது. துன்பம் தாங்க முடியாதவர்களாய் மனிதர் தங்கள் நாவைக் கடித்துக் கொண்டனர்.11 தங்கள் துன்பத்தையும் புண்களையும் முன்னிட்டு விண்ணகக் கடவுளைப் பழித்தார்களே தவிர, தங்கள் செயல்களைவிட்டு மனம் மாறவில்லை.12 ஆறாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை யூப்பிரத்தீசு பேராற்றில் ஊற்றினார். உடனே அதன் தண்ணீர் வற்றிப்போனது. அதனால் கீழை நாட்டு மன்னர்கள் பயன்படுத்த பாதை உண்டாயிற்று.13 அரக்கப் பாம்பின் வாயினின்றும் போலி இறைவாக்கினர்களின் வாயினின்றும் தவளை போன்ற மூன்று தீய ஆவிகள் வெளிவரக் கண்டேன்.14 அவை அரும் அடையாளங்கள் புரியும் பேய்களின் ஆவிகள்: எல்லாம் வல்ல கடவுளின் பெரும் நாளில் போர் புரிந்திட உலகு அனைத்தின் அரசர்களை ஒன்று கூட்ட அவை புறப்பட்டுச் சென்றன.15 இதோ! நான் திருடனைப் போல வருகிறேன். தாங்கள் ஆடை இன்றி நடப்பதையும் பிறந்த மேனியாய் இருப்பதையும் பிறர் பார்த்திடாதவாறு தங்களின் ஆடைகளை ஆயத்தமாக வைத்திருப்போரும் விழிப்பாய் இருப்போரும் பேறுபெற்றோர்.16 எபிரேய மொழியில் அருமகதோன் எனப்படும் இடத்தில் அந்த ஆவிகள் அரசர்களை ஒன்று கூட்டின.17 ஏழாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை வான்வெளியில் ஊற்றினார். அப்பொழுது கோவிலின் அரியணையிலிருந்து, எல்லாம் நிறைவேற்றப்பட்டாயிற்று என்று ஒரு பெரும் குரல் ஒலித்தது.18 உடனே மின்னலும் இரைச்சலும் இடிமுழக்கமும் உண்டாயின. பெரியதொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. மனிதர் மண்ணில் தோன்றிய நாள்முதல் இத்துணை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லை.19 அந்த மாநகர் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. மற்ற நாடுகளின் நகர்களும் வீழ்ந்தன. கடவுள் பாபிலோன் மாநகரை நினைவில் கொண்டு தம் கடும் சீற்றம் என்ற மது நிரம்பிய கிண்ணத்தை அதற்குக் குடிக்கக் கொடுத்தார்.20 தீவுகளெல்லாம் மறைந்துபோயின: மலைகளும் காணப்படவில்லை.21 கல்மழை பெருங்கற்களாக விண்ணிலிருந்து மக்கள்மீது பெய்தது. கல்மழையால் ஏற்பட்ட இவ்வாதை மிகக் கொடியதாய் இருந்ததால், மக்கள் கடவுளைப் பழித்துரைத்தார்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!