Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

புலம்பல்

அதிகாரம் 4

வீழ்ச்சியுற்ற எருசலேம்
1 ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே! பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து போயிற்றே! திருத்தலக் கற்கள் தெருமுறை எங்கும் சிதறிக் கிடக்கின்றனவே!2 பசும்பொன்னுக்கு இணையான சீயோனின் அருமை மைந்தர் இன்று குயவனின் கைவினையாம் மண்பாண்டம் ஆயினரே!3 குள்ளநரிகளும் பாலூட்டித் தம் குட்டிகளைப் பேணிக்காக்கும்! பாலைநிலத் தீக்கோழியென என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினளே!4 பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்! பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!5 சுவையுணவு அருந்தினோர் நடுத்தெருவில் நலிகின்றனர்! பட்டுடுத்தி வளர்ந்தோர் குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!6 ஒருவரும் கை வைக்காமல் நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற சோதோமின் பாவத்தைவிட, என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!7 அவள் இளவரசர் பனியினும் தூயவராய்ப் பாலினும் வெண்மையராய்ப் பவளத்தினும் சிவந்த மேனியராய் நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!8 இப்பொழுதோ, அவர்கள் தோற்றம் கரியினும் கருமை ஆனது: அவர்களைத் தெருக்களில் அடையாளம் காண இயலவில்லை! அவர்கள் தோல் எலும்போடு ஒட்டியிருந்தது. காய்ந்த மரம்போல் அது உலர்ந்து போனது!9 பசியினால் மாண்டவர்களினும் வாளினால் மாண்டோர் நற்பேறு பெற்றோர்! ஏனெனில், முன்னையோர் வயல் தரும் விளைச்சலின்றிக் குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!10 இரங்கும் பெண்டிரின் கைகள் தம் குழந்தைகளை வேகவைத்தன! என் மக்களாகிய மகள் அழிவுற்றபோது பிள்ளைகளே அன்னையர்க்கு உணவாயினர்!11 ஆண்டவர் தம் சீற்றத்தைத் தீர்த்துக் கொண்டார்: தம் கோபக் கனலைக் கொட்டினார்: சீயோனில் நெருப்பை மூட்டினார்: அது அதன் அடித்தளங்களை விழுங்கிற்று.12 பகைவரும் எதிரிகளும் எருசலேம் வாயில்களில் நுழைவர் என்று மண்ணுலகின் மன்னரோ பூவுலகில் வாழ்வோரோ நம்பவில்லை. 13 நகரின் நடுவே நீதிமானின் இரத்தம் சிந்திய இறைவாக்கினரின் பாவமும் குருக்களின் குற்றமுமே இதற்குக் காரணமாம்!14 அவர்கள் குருடரெனத் தெருக்களில் தடுமாறினர்: அவர்கள்மீது இரத்தக் கறை எவ்வளவு படிந்திருந்ததெனில், அவர்கள் ஆடைகளைக்கூட எவராலும் தொட இயலவில்லை.15 விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்! தொடாதீர்கள்! என்று அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்: அவர்கள் அகதிகளாய் அலைந்து திரிந்தார்கள். 'இனி நம்மிடம் குடியிரார்,' 'இனி எம்மிடையே தங்கக்கூடாது' என்று வேற்றினத்தார் கூறினர்.16 ஆண்டவரே தம் முன்னிலையினின்று அவர்களைச் சிதறடித்தார்: இனி அவர்களைக் கண்ணோக்கமாட்டார். குருவை மதிப்பார் இல்லை: முதியோர்க்கு இரங்குவார் இல்லை.17 உதவியை வீணில் எதிர்பார்த்து எம் கண்கள் பூத்துப்போயின! எம்மை விடுவிக்க இயலாத நாட்டினர்க்காய்க் கண் விழித்துக் காத்திருந்தோம்! 18 எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது: எம் தெருக்களில் கூட எம்மால் நடக்க முடியவில்லை: எம் முடிவு நெருங்கிவிட்டது: எம் நாள்கள் முடிந்துவிட்டன: எம் முடிவு வந்து விட்டது.19 வானத்துப் பருந்துகளிலும் விரைவாய் எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்: மலைகளில் எங்களைத் துரத்தி வந்தார்கள்: பாலையில் எங்களுக்காய்ப் பதுங்கி இருந்தார்கள்.20 ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர், அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்! அவரது நிழலில் வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம் என்று அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!21 ஊசு நாட்டில் வாழும் மகளே! ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு! கிண்ணம் உன்னையும் வந்தடையும்! நீ குடிவெறி கொண்டு ஆடையின்றிக் கிடப்பாய்!22 மகளே! சீயோன்! உன் குற்றப்பழி நீங்கிவிட்டது: உன் அடிமைத்தனம் இனியும் தொடராது: மகளே! ஏதோம்! உன் குற்றத்திற்காக நீ தண்டிக்கப்படுவாய்! உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!