Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 51

பாவ மன்னிப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு; தாவீதின் புகழ்ப்பா; தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்த பின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது) (2 சாமு 12:1-8)
1 கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.2 என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.உரோ 3:4 5 இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.6 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.7 ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்; என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.8 மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!9 என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!19 அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!