எசேக்கியேல் |
|
அதிகாரம்
35
|
ஏதோமுக்குக் கடவுளின் தண்டனை 1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:2 மானிடா! உன் முகத்தைச் சேயிர் மலைக்கு நேராய்த் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்குரை.3 அதற்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: சேயிர் மலையே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன். என் கையை உனக்கெதிராய் நீட்டி உன்னைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன்.4 உன் நகர்களை இடிபாடுகளாய் மாற்றுவேன். நீ பாழிடமாய் இருப்பாய். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.5 ஏனெனில் முற்காலப் பகையை மனத்தில் கொண்டு நீ இஸ்ரயேலரை அவர்களின் துன்பகாலத்தில், அவர்களது தண்டனையின் உச்சக் கட்டத்தில் வாளுக்கு இரையாக்குமாறு கையளித்தாய்.6 எனவே, என்மேல் ஆணை! உன்னை இரத்தப் பழிக்குக் கையளிப்பேன். அப்பழி உன்னைத் தொடரும், நீ இரத்தம் சிந்துதலை வெறுக்காததால் அது உன்னைத் தொடரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.7 சேயிர் மலையைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன். அதன் வழியாய்ச் செல்லும் போக்குவரத்தை நிறுத்துவேன்.8 உன் மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவேன். வாளால் கொல்லப்பட்டோர் உன் குன்றுகளிலும் பள்ளத் தாக்குகளிலும் எல்லா ஓடைகளிலும் வீழ்வர்.9 உன்னை என்றென்றும் பாழிடமாய் ஆக்குவேன். உன் நகரங்கள் குடியற்றுப்போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வாய்.10 ஆண்டவராகிய நான் அங்கே இருந்தபோதும் நீ இவ்விரு இனங்களும் நாடுகளும் என்னுடையவை: நான் அவற்றை உடைமையாக்கிக் கொள்வேன் எனச் சொன்னாய்.11 எனவே, என் மேல் ஆணை! நீ அவர்களுக்கு எதிராகக் காட்டிய பகைமைக்கும் சினத்திற்கும் பொறாமைக்கும் ஏற்ப, நான் உன்னை நடத்துவேன். நான் உன்னைத் தீர்ப்பிடும்போது, அவர்களிடையே என்னை அறியச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.12 அப்போது, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராகச் சொன்ன எல்லா இழிசொற்களையும், ஆண்டவராகிய நான் கேட்டேன் என அறிந்து கொள்வாய். அவை பாழாக்கப்பட்டுவிட்டன: இரையாகத் தரப்பட்டுள்ளன என்று நீ சொன்னாய்.13 நீ எனக்கெதிராய்ப் பெருமை பாராட்டி, உன் வாயினால் எனக்கெதிராய்க் கட்டுப்பாடற்ற சொற்களை உரைத்தாய். அவற்றை நான் கேட்டேன்.14 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உலகு முழுவதும் மகிழ்வடையும்படி நான் உன்னைப் பாழாக்குவேன்.15 இஸ்ரயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழாக்கப்படுகையில் நீ மகிழ்வடைந்ததால் நானும், உனக்கு அவ்வாறே நடக்கச் செய்வேன். சேயிர் மலையும் ஏதோம் முழுவதும் பாழிடமாகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர். |