ஆசிரியர் நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறிஸ்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச் சீடர் (21:24) இவராகத்தான இருக்க வேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் இயேசுவைப்பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனி வடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப்போக்கில் கிறிஸ்தவச் சமூகத்தின் தேவைகளுக் ஏற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்கவேண்டும். இயேசுவின் அன்புச் சீடரான யோவான் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து பின் இயேசுவின் சீடராகிறார் (1: 35-39), இயேசுவோடு மிகுந்த நெருக்கம் கொணடிருந்த மூன்று திருத்தூதருள் இவரும் ஒருவர் (மாற் 5:37; 9:2; 13:3; 14:33). இறுதி இராவுணவின்போது இயேசுவின மார்புப் பக்கமாய் சாய்ந்திருந்த இவர் (13:22-26) மற்றத் திருத்தூதரெல்லாம் ஓடிவிட்ட நேரத்திலும் இயேசுவின் சிலுவையடியில் நின்றார். இவரிடமே இயேசு தம் அன்பு அன்னையை ஒப்படைத்தார் (19:25-27). நூலின் நோக்கம்"இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெறறுள்ளன" (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக் கிறிஸ்தவ வாழ்வை வலுப்படுத்துவது நற்செய்தியின் முக்கிய நோக்கமாய் இருந்தது. மேலும் கிறிஸ்துவுக்கு முந்திய பழையன கழிந்து, கிறிஸ்து வழியாகப் புதியன புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறிஸ்துவை நேரடியாகக் கண்டிராத இரணடாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாணடின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை (திருமுழுக்கு யோவானே மெசியா, தோற்றக் கொள்கை போன்றவை) திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. இந்நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஏறத்தாழ கி.பி. 90 ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறிஸ்தவ மரபு. உள்ளடக்கம்மனிதரான வாக்கே இயேசு எனத் தொடக்கத்திலேயே எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். அவரது இயல்பை ஒளி, வாழ்வு, வழி, உண்மை, உணவு போன்ற உருவகங்களால் விளக்கி, இயேசு யார் என்பதை எல்லாக் கால, இட, சமய, பண்பாட்டு மக்களுக்கும் புரியவைக்கிறார். அழைத்தல், கோவில், வழிபாடு, திருமுழுக்கு, நற்கருணை ஆகிய கிறிஸ்தவக் கருத்துகளின் ஆழ்ந்த பொருளை விரித்துரைக்கிறார். அரும்அடையாளங்களாலும் அவற்றைத் தொடரும் உரைகளாலும் இயேசுவை வெளிப்படுத்தி, அவர் பெற்ற ஏற்பையும் எதிர்ப்பையும் எடுததுக் காட்டுகிறார். மகனுக்கும் தந்தைக்கும், மகனுக்கும் சீடருக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றிச் சிறப்பாகப் பேசுகிறார் இயேசு துன்பங்கள்பட்டபோது அவரை நொறுக்கப்பட்ட துன்புறும் ஊழியனாக அல்ல, மாறாக அனைத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் வெற்றி வீரராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இவ்வாறு இயேசுவின் உரைகள், அவருடைய செயல்கள, அவரைப் பற்றிய செய்திகள், அவருடைய ஆளுமை, அவரது பணித்தளம்ஆகிய அனைத்துமே இந்நற்செய்தியில் ஒத்தமை நற்செய்திகளிலிருந்து வேறுபட்டு இருக்கின்றன. அமைப்புயூதத் திருவிழாக்களை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் உரைகளும் அவரைப் பற்றிய பிற செய்திகளும் தொகுக்கப்பட்டிருப்பவனாகத் தெரிகிறது: - முன்னுரைப் பாடல் 1:1 - 18
- முதல் பாஸ்கா விழா 1:19 - 4:54
- யூதர்களின் திருவிழா 5:1 - 47
- இரண்டாம் பாஸ்கா விழா 6:1 - 71
- கூடார விழா 7:1 - 10:21
- கோவில் அர்ப்பண விழா 10:22 - 11:54
- இறுதிப் பாஸ்கா விழா 11:55 - 20:31
- பிற்சேர்க்கை 21:1 - 25
|