சாலமோனின் ஞானம் (ஞானாகமம்) |
|
அதிகாரம்
3
|
நல்லார், பொல்லாரின் முடிவு 1 நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.2 அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.3 அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.4 மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.5 சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.6 பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.7 கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்: அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்:8 நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்: மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார்.9 அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும். 'அவர் மீது நம்பிக்கை கொள்வோர் அவரோடு அன்பில் நிலைத்திருப்பர்.' என்றும் மொழி பெயர்க்கலாம்.
வசனமுடிவில் 'தம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார்' என்னும் பாடம் சில சுவடிகளில் சேர்க்கப் பட்டுள்ளது. 10 ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள்: ஏனெனில் அவர்கள் நீதிமான்களைப் புறக்கணித்து, ஆண்டவரை எதிர்த்தார்கள்.11 ஞானத்தையும் நற்பயிற்சியையும் இகழ்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்களது நம்பிக்கை வீணானது: அவர்கள் உழைப்பு வெறுமையானது: அவர்களின் செயல்கள் பயனற்றவை.12 அவர்களுடைய மனைவியர் அறிவற்றவர்கள்: அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்: அவர்களுடைய வழிமரபினர் சபிக்கப்பட்டவர்கள்.13 தூய்மை இழக்காத, தவறான உடலுறவு கொள்ளாத மலடி பேறுபெற்றவர்: மனிதரைக் கடவுள் சந்திக்க வரும்போது அப்பெண் கனி தருவார்.14 நெறிகெட்ட செயல்களைச் செய்யாத, ஆண்டவருக்கு எதிராகத் தீயவற்றைத் திட்டமிடாத அண்ணகர்களும் பேறுபெற்றோர். அவர்களது பற்றுறுதிக்குச் சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்: ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.15 நல்ல உழைப்பின் பயன் புகழ்ச்சிக்குரியது. அறிவுத்திறனின் ஆணிவேர் அசைவுறாதது.16 விபசாரிகளின் மக்கள் முதிர்ச்சி அடையமாட்டார்கள்: தவறான உடலுறவால் பிறப்பவர்கள் வேரோடு அழிவார்கள்.17 அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும், அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்: முதுமையின் இறுதிக் கட்டத்திலும் அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.18 அவர்கள் இளமையில் இறந்தால் அவர்களுக்கு நம்பிக்கை இராது: தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.19 நேர்மையற்ற தலைமுறையின் முடிவு மிகக் கொடியது. |