Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசேக்கியேல்

அதிகாரம் 37

உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு
1 ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.2 அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.3 அவர் என்னிடம், மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா? என்று கேட்டார். நான், தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே என்று மறுமொழி அளித்தேன்.4 அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள் என்று சொல்.5 தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.6 நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்: உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.7 எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது.8 நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.9 பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை: மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான்கு காற்றுகளிலிருந்தும் உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.10 எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர்.11 அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம் எனச் சொல்கிறார்கள்.12 எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.13 அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.14 என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ஆண்டவராகிய நான் உரைத்தேன்: நானே இதைச் செய்தேன் என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

யூதாவும் இஸ்ரயேலும் ஒரே அரசாதால்
15 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:16 மானிடா! நீ ஒரு கோலை எடுத்துக்கொள். அதில் யூதாவுக்கும் அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உரியது என்று எழுது. பின்னர் இன்னொரு கோலை எடுத்து அதில் யோசேப்புக்கும் அவனோடு சேர்ந்த இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் உரிய எப்ராயிமின் கோல் என்று எழுது.17 அவை இரண்டும் உன் கையில் ஒரே கோலாயிருக்கும்படி, அவற்றை ஒன்றாகச் சேர்.18 உன் மக்களினத்தார் உன்னிடம், இவற்றால் என்ன கூட்டிக்காட்ட விழைகிறீர்? எனக் கேட்கையில்,19 அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் எப்ராயிமின் கையிலிருக்கும் யோசேப்பு மற்றும் அதனுடன் சேர்ந்த இஸ்ரயேல் குலங்களின் கோலை எடுத்து அதை யூதாவின் கோலுடன் சேர்த்து அவற்றை ஒரே கோலாய் மாற்றுவேன். அவை என் கையில் ஒரே கோலாய் இருக்கும்.20 நீ எழுதிய கோல்களை அவர்கள் கண்முன்னால் உன் கையில் பிடித்து,21 அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து அவர்களை அழைத்து எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து, அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன்.22 இஸ்ரயேலின் மலைகள்மிது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார்.23 அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ இழிந்த அருவருப்பான பொருள்களாலோ தங்கள் வேறெந்தக் குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன். அவர்கள் என24 என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசானய் இருப்பான். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான். என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்: என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர்.25 நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர். அவர்களும் அவர்களின் மக்களும், மக்களின் மக்களும் அங்கு என்றென்றும் வாழ்வர். என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.26 நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன். அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும். நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன். என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன்.27 என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்: நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்.28 என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில், இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே என வேற்றினத்தார் அறிந்து கொள்வர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!