Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்

அதிகாரம் 24

யூதா அரசன் யோயாக்கிம் ..............தொடர்ச்சி
1 அவனது ஆட்சிக் காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின்மேல் படையெடுத்து வந்தான். எனவே யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடி பணிந்திருந்தான்: பின்பு மனத்தை மாற்றிக்கொண்டு அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.2 ஆண்டவர் கல்தேயா, சிரியா, மோவாபு, அம்மோன் ஆகிய மகக்ளினங்களைச் சார்ந்தக் கொள்ளைக் கூட்டத்தாரை அவன்மீது ஏவிவிட்டார். அவர்தம் அடியாரான இறைவாக்கினர்மூலம் உரைத்திருந்த வாக்கின்படி யூதாவுக்கு எதிராக அதனை அழிப்பதற்காகவே அவர்களை அங்கே அனுப்பினார்.3 உண்மையாகவே ஆண்டவரின் கட்டளைப்படி மனாசேயின் பாவங்களை முன்னிட்டும், அவன் செய்த எல்லாக் காரியங்களை முன்னிட்டும் அவர் அவர்களைத் தம் திருமுன்னின்று தள்ளவிடுமாறு, இவையெல்லாம் யூதாவுக்கு நிகழ்ந்தன.4 மேலும் அவன் குற்றமற்றவர்களின் குருதியைச் சிந்தியதாலும், எருசலேமை மாசற்றவர்களின் குருதியால் நிரப்பியதாலும், ஆண்டவர் அவனை மன்னிக்க மறுத்துவிட்டார்.5 யோயாக்கிமின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?6 யோயாக்கிம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.7 எகிப்திய மன்னன் மீண்டும் தன் நாட்டை விட்டுப் போருக்கென வெளிவரவில்லை. ஏனெனில், எகிப்திய நதிமுதல் யூப்பரத்தீசு ஆறுவரை எகிப்திய மன்னன் கைவசம் இருந்த அனைத்தையும் பாபிலோனிய மன்னன் கைப்பற்றிக்கொண்டான்.

யூதா அரசன் யோயாக்கின் (2 குறி 36:9-10)
8 யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய்.9 யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.10 அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர்.11 அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான்.12 எனவே யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான்.13 பின்பு அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துக் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டுதுண்டாக்கினான்.14 மேலும் அவன் எருசலேம் முழுவதையும, தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை.15 மேலும் அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.16 மேலும் வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும் போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.17 யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் செதேக்கியா என்று மாற்றினான்.

யூதாவின் அரசன் செதேக்கியா (2 குறி 36:11-12; எரே 52:1-3)
18 செதேக்கியா அரசனான போது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமூற்றால் என்பவளே அவன் தாய்.19 யோயாக்கிம் செய்ததுபோல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான்.20 ஆண்டவர், எருசலேமையும் யூதாவையும் தம்முன்னின்று தள்ளிவிடும் அளவுக்கு, அவற்றின் மீது சினம் கொண்டார். மேலும் செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!