Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

இணைச்சட்டம் (உபாகமம்)

அதிகாரம் 4

கீழ்ப்படியுமாறு மோசே இஸ்ரயேலரை ஊக்குவித்தல்
1 இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.2 நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.3 பாகால் பெகோரில் ஆண்டவர் செய்ததை உங்கள் கண்களால் கண்டீர்கள். பெகோரின் தெய்வமாகிய பாகாலைப் பின்பற்றியவர்கள் உங்களிடையே இல்லாதவாறு உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் அழிக்கப்பட்டார்கள்.4 மாறாக, உங்கள் கடவுளாகிய ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொண்ட நீங்கள் இன்றும் வாழ்கின்றீர்கள்.5 நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.6 நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்.7 நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?8 நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறுபேரினம் ஏதாகிலும் உண்டா?9 கவனமாய் இருங்கள்: உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்து போகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.10 ஓரேபில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நின்ற நாளை மறந்து விட வேண்டாம். அன்று ஆண்டவர் என்னிடம், மக்கள் கூட்டமைப்பை என்முன் கூடிவரச் செய். அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கச் செய்வேன். அதனால், அவர்கள் இத்தரையில் வாழும் நாளெல்லாம் எனக்கு அஞ்சி நடக்கக் கற்றுக்கொள்வர்; அவ்வாறே பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பர்' என்றார்.11 நீங்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றீர்கள். மலையினின்று நெருப்பு எழும்பி, வானம் மட்டும் எட்ட, மலைமுகட்டைக் காரிருளும் மேகமும் சூழ்ந்தன.12 நெருப்பிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசினார். பேச்சு ஒலியை நீங்கள் கேட்டீர்கள்: உருவம் எதையும் காணவில்லை: குரல் மட்டும் கேட்டது.13 அப்பொழுது, அவர் தம் உடன்படிக்கையை உங்களுக்கு அறிவித்து, பத்துக்கட்டளைகளைத் தந்து, அதைப் பின்பற்றும்படி ஆணையிட்டார். அதை அவர் இரண்டு கற்பலகைகளில் எழுதினார். 14 நீங்கள் சென்று உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் கடைப்பிடிக்கும்படி உங்களுக்கு நியமங்களையும் முறைமைகளையும் கற்பிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.

சிலைவழிபாடு குறித்து எச்சரித்தல்
15 ஓரேபு மலையில் நெருப்பினின்று ஆண்டவர் உங்களோடு பேசிய அந்நாளில், நீங்கள் எந்த உருவத்தையும் காணவில்லை. எனவே மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.16 நீங்கள் அழிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள்.17 ஆண் அல்லது பெண், நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள்,18 தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.19 மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார்.20 இன்று இருப்பதுபோல், நீங்கள் அவரது உரிமைச் சொத்தான மக்களாகும்படி இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து உங்களைக் கூட்டி வந்தவர் ஆண்டவரே!21 ஆனால், உங்களின் செயல்களுக்காக ஆண்டவர் என்மேல் சினம் கொண்டார். நான் யோர்தானைக் கடந்து போகமாட்டேன் எனவும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கவிருக்கும் அந்த வளமிகு நாட்டுக்குள் நான் நுழையமாட்டேன் எனவும் ஆணையிட்டுக் கூறினார்.22 ஏனெனில், நான் இப்பகுதியிலேயே இறப்பேன். யோர்தானைக் கடந்து செல்ல மாட்டேன். ஆனால், நீங்கள் கடந்து அந்த வளமிகு நாட்டை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.23 எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையை மறந்துவிடாதீர்கள், மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி எந்தவொரு உருவத்திலும் உங்களுக்கெனச் சிலையைச் செய்யாதபடி கவனமாய் இருங்கள்.24 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்: அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.25 நீங்கள் பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும் பெற்று, நாட்டில் நெடுநாள் வாழ்ந்தபின், இழி செயல்புரிந்து ஏதேனும் ஓர் உருவத்தில் சிலையை உருவாக்கி, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தீயதைச் செய்து, அவருக்குச் சினமூட்டுவீர்களாயின்,26 இன்றே விண்ணையும் மண்ணையும் உங்களுக்கு எதிரான சான்றுகளாக ஏற்படுத்துவேன். நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் அந்த நாட்டிலிருந்து விரைவில் முற்றிலும் அழிந்து போவீர்கள். நீங்கள் அங்கு வெகுநாள் வாழமாட்டீர்கள். மாறாக, வேரோடு சாய்க்கப்படுவீர்கள்.27 ஆண்டவர் உங்களை மக்களினத்தாரிடையே சிதறடிப்பார்: அவர் உங்களைக் கொண்டு சேர்க்கும் வேற்றினத்தாரிடையே உங்களுள் எஞ்சியிருப்போர் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.28 அங்கு மரத்தாலும் கல்லாலுமான, மனிதரின் கையால் செய்யப்பட்ட தெய்வங்களை வழிபடுவீர்கள். அவற்றால் காணவோ கேட்கவோ உண்ணவோ நுகரவோ முடியாது.29 மாறாக, அங்கு இருக்கையில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் நாடினால், உங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் தேடினால், அவரைக் கண்டடைவீர்கள்.30 உங்களுக்குப் பெருந்துயர் உண்டாகும் பொழுது, இவ்வார்த்தைகளின் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இறுதி நாள்களில் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி அவரது குரலுக்குச் செவிகொடுப்பீர்கள்.31 ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இரக்கம் மிகு இறைவன். அவர் உங்களைக் கைவிடமாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்கள் மூதாதையரோடு அவர் ஆணையிட்டுச் செய்த உடன்படிக்கையை மறக்கவும் மாட்டார்.32 உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்துண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டதுண்டா?33 நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்ததுபோல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா?34 அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக்கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?35 ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர், என நீங்கள் அறிந்து கொள்ளும் படியாக இவை உங்கள் கண்முன் நிறைவேற்றப்பட்டன. 36 நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார். தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள். 37 உங்கள் மூதாதையர்க்கு அவர் அன்பு காட்டியதால், அவர்களுக்குப்பின் அவர்களுடைய வழிமரபினரைத் தேர்ந்து கொண்டார். எனவே அவரே முன்நின்று தமது பேராற்றலுடன் உங்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.38 உங்களை விட ஆற்றலும் வலிமையும் மிகுந்த வேற்றினத்தாரை உங்கள் முன்னின்று துரத்தவும், உங்களை அவர்களது நாட்டிற்குள் இட்டுச் சென்று இன்றும் உள்ளது போல், அதை உங்களது உரிமைச் சொத்தாகத் தரவுமே கூட்டி வந்தார்.39 மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர் என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்.40 நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

யோர்தானுக்குக் கிழக்கே குறிக்கப்பட்ட அடைக்கல நகர்கள்
41 அப்பொழுது மோசே, யோர்தானுக்குக் கிழக்கே மூன்று நகர்களைக் குறித்துக் கொடுத்தார்.42 முன் பகையின்றி, தவறுதலாகத் தன் தோழனைக் கொன்றுவிட்ட எவனும், இந்த நகர்கள் ஒன்றினுள் ஓடிப்புகுந்து அடைக்கலம் பெற்று உயிர் தப்புமாறு அந்நகர்களைக் குறித்தார்.43 ரூபனியர் எல்லையில் பாலை நிலச் சமவெளியில் உள்ள பெட்சேர், காத்தியர் எல்லையில் உள்ள கிலயாதின் இராமோத்து, மனாசே எல்லையில் உள்ள பாசானின் கோலான் ஆகிய நகர்களே அவை.

கடவுளின் சட்டத்தைத் தருவதற்கான முன்குறிப்பு
44 இஸ்ரயேல் புதல்வரின் முன்னிலையில் மோசே அளித்த சட்டம் இதுவே:45 இஸ்ரயேல் புதல்வர் எகிப்திலிருந்து வெளியேறியபோது, மோசே அவர்களுக்கு அளித்த சான்றுகள், நியமங்கள், முறைமைகள் இவையே.46 யோர்தானுக்குக் கிழக்கே பெத்பகோருக்கு எதிரே உள்ள சமவெளியில் எஸ்போனில் வாழ்ந்த எமோரியின் அரசனாகிய சீகோனின் நாட்டில் இது நிகழ்ந்தது. மோசேயும் இஸ்ரயேல் புதல்வரும் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வரும் வழியில் சீகோனையும் அவன் நாட்டையும் முறியடித்திருந்தனர்.47 அவர்கள் அவனது நாட்டைத் தங்களது உடைமையாக்கியிருந்தனர். மேலும் பாசானின் அரசன் ஓகின் நாட்டையும் யோர்தானுக்குக் கிழக்கே வாழ்ந்த எமோரியரின் இரு அரசர்களையும் முறியடித்திருந்தனர்.48 அர்னோன் ஓடைக்கரையிலுள்ள அரோயேர் முதல் எர்மோன் என்ற சிரியோன் மலைவரையிலும்,49 யோர்தானுக்குக் கிழக்கே அராபா பாலைநிலம் அனைத்தையும், பீஸ்காவிற்குக் கிழக்கே தாழ்வாக இருக்கும் அரபாக் கடல் வரைக்கும் அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!