யோபு |
|
அதிகாரம்
42
|
யோபின் இறுதி உறுதிமொழி 1 அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்:2 நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்: அறிவேன் அதனை: நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது.3 'அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?″ என்று கேட்டீர்: உண்மையில் நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்: அவை எனக்கு விளங்கா அளவுக்கு விந்தையானவை.4 அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்: வினவுவேன் உம்மை: விளங்க வைப்பீர் எனக்கு.5 உம்மைப்பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்: ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன.6 ஆகையால் என்னையே நொந்து கொள்ளுகின்றேன்: புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்.
முடிவுரை 7 ஆண்டவர் இவ்வாறு யோபிடம் பேசினபிறகு, தேமானியனான எலிப்பாசைப் பார்த்துக் கூறியது: உன்மீதும், உன் இரு நண்பர்கள் மீதும் எனக்குச் சினம் பற்றி எரிகிறது. ஏனெனில் என் ஊழியன் யோபு போன்று நீங்கள் என்னைப்பற்றிச் சரியாகப் பேசவில்லை.8 ஆகவே இப்பொழுது, ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்: என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்: உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போ9 அவ்வாறே தேமானியனான எலிப்பாசும், சூகாவியனான பில்தாதும், நாமானியனான சோப்பாரும் சென்று ஆண்டவர் அவர்களுக்குக் கட்டளை இட்டவாறே செய்தார்கள். ஆண்டவரும் யோபின் இறைஞ்சுதலை ஏற்றார்.
செல்வச் சிறப்புகளை ஆண்டவர் யோபுக்கு மீண்டும் அளித்தல் 10 யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார்.11 பின்னர் அவருடைய எல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும், அவரை முன்பு தெரிந்திருந்த அனைவரும் அவரிடம் வந்தனர்: அவரது இல்லத்தில் அவரோடு விருந்துண்டனர்: ஆண்டவர் அவருக்கு வரச்செய்த தீமை அனைத்திற்காகவும் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினர். ஒவ்வொருவரும் அவருக்கு வெள்ளியும் பொன்மோதிரமும் வழங்கினர்12 யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன.13 அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.14 மூத்த மகளுக்கு எமிமா என்றும், இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரென் அப்பூக்கு என்றும் பெயரிட்டார்.15 யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.16 அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்: தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டுகளித்தார்.17 இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார். |