Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

மக்கபேயர் - முதல் நூல்

அதிகாரம் 5

இதுமெயர், அம்மோனியருடன் போர்
1 பலிபீடம் மீண்டும் எழுப்பப்பட்டது என்றும், திருஉறைவிடம் முன்பு இருந்ததுபோல் அர்ப்பணிக்கப்பட்டது என்றும், சுற்றிலும் இருந்த வேற்றினத்தார் கேள்விப்பட்டு மிகவும் சினங்கொண்டனர்:2 எனவே தங்கள் நடுவெ வாழ்ந்த யாக்கோபின் வழிமரபினரை அழித்தொழிக்கத் திட்டமிட்டனர்: அவ்வாறே அவர்களைக் கொன்றொழிக்கத் தொடங்கினர்.3 இதுமேயாவில் இருந்த அக்கிரபத்தேனில் ஏசாவின் மக்கள் இஸ்ரயேலரை முற்றுகையிட்டிருந்ததால், யூதா அவர்களைக் கடுமையாகத் தாக்கி வீழ்ச்சியுறச் செய்து கொள்ளைப் பொருள்களையும் எடுத்துவந்தார்:4 சாலைகளில் பதுங்கியிருந்த தம் மக்களுக்குக் கண்ணிபோலும் சூழ்ச்சிப்பொறிபோலும் இருந்த பேயான் மக்களுடைய கொடுமைகளையும் நினைவுகூர்ந்தார்: அரேபியருடைய குலங்களுள்
ஒன்றாக இருக்கலாம்.
5 ஆகவே அவர்களைக் கோட்டைகளில் அடைத்து அவர்கள் வெளியே வராமல் தடுத்து முற்றிலும் அழித்தார்: கோட்டைகளையும் அவற்றுள் இருந்த அனைவரையும் தீக்கிரையாக்கினார்.6 பிறகு அவர் அம்மோனியரைத் தாக்கச் சென்றபோது, வலிமைமிக்க படையையும் திரளான மக்களையும் அவர்களின் தலைவரான திமொத்தேயுவையும் கண்டார்.7 அவர்களோடு போர்கள் பல புரிந்து, அவர்களை நிலைகுலையச் செய்து அழித்தார்.8 யாசேர் நகரையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் கைப்பற்றியபின் யூதேயா திரும்பினார்.9 தங்கள் நாட்டில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலரை அழிப்பதற்காகக் கிலயாதில் இருந்த பிற இனத்தார் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டனர். எனவே இஸ்ரயேலர் தாதமா கோட்டைக்குத் தப்பியோடினர்.10 அவர்கள் யூதாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் எழுதி அனுப்பிய மடல் வருமாறு: எங்களைச் சுற்றியுள்ள பிற இனத்தார் எங்களை ஒழித்துவிட எங்களுக்கு எதிராகத் திரண்டுவந்துள்ளனர்.11 அவர்கள் வந்து, நாங்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தக் கோட்டையைப் பிடிக்க முன்னேற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். திமொத்தேயு அவர்களின் படைத்தலைவன்.12 எங்களுள் பலர் ஏற்கெனவே மடிந்துவிட்டதால் இப்போது நீர் வந்து அவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்.13 தோபு நாட்டிலுள்ள நம் சகோதரர்கள் அனைவரையும் பகைவர்கள் கொன்றுவிட்டார்கள்: அவர்களின் மனைவி மக்களைச் சிறைப்படுத்தியதோடு உடமைகளையும் கொள்ளையடித்து விட்டார்கள்: ஏறக்குறைய ஆயிரம் பேரை அங்குக் கொலை செய்து விட்டார்கள்.14 யூதாவும் அவருடைய சகோதரர்களும் அம்மடலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, கிழிந்த ஆடைகளோடு சில தூதர்கள் கலிலேயா நாட்டிலிருந்து இதுபொன்ற செய்தி ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.15 தாலமாய், தீர், சீதோன் நகரத்தாரும் பிற இனத்தார் வாழும் கலிலேயா நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்கு எதிராய் எழுந்து தங்களை அழித்தொழிக்கக் கூடியிருப்பதாகத் தெரிவித்தார்கள்.16 யூதாவும் மக்களும் இச்செய்தியைக் கேட்டு, கடுந்துயருக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்த தங்கள் உறவின்முறையினருக்குத் தாங்கள் செய்யவேண்டியதைப் பற்றி முடிவுசெய்யப் பெரும் கூட்டமாகக் கூடினார்கள்.17 யூதா தம் சகோதரரான சீமோனை நோக்கி, நீர் வீரர்களைத் தேர்ந்துகொண்டு கலிலேயா நாட்டிலுள்ள உம் உறவின்முறையினரை விடுவிக்கப் புறப்படும். நானும் என் சகோதரனான யோனத்தானும் கிலயாதுக்குப் போவோம் என்றார்.18 யூதேயாவைக் காப்பதற்காகச் செக்கரியாவின் மகனான யோசேப்பையும் மக்கள் தலைவர்களுள் ஒருவரான அசரியாவையும் எஞ்சிய படையோடு விட்டுச்சென்றார்:19 இம்மக்களுக்குப் பொறுப்பாய் இருங்கள்: நாங்கள் திரும்பிவரும்வரை பிற இனத்தாரோடு போர் செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.20 கலிலேயாவுக்குச் செல்வதற்காகச் சீமோனுக்கு மூவாயிரம் வீரர்களும், கிலயாதுக்குச் செல்வதற்காக யூதாவுக்கு எண்ணாயிரம் வீரர்களும் குறிக்கப்பட்டார்கள்.21 சீமோன் கலிலேயாவுக்குச் சென்று பிற இனத்தாரோடு போர்கள் பல செய்து அவர்களை அழித்தார்.22 அவர் தாலமாய் நகரின் வாயில்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்: அவர்களுள் ஏறக்குறைய மூவாயிரம் பேர் மாண்டனர். அவர் அவர்களுடைய பொருள்களைக் கொள்ளையடித்தார்:23 கலிலேயாவிலும் அர்பத்தாவிலும் இருந்த யூதர்கள் அவர்களுடைய மனைவி மக்களோடும் அவர்களுக்குச் சொந்தமான பொருள்கள் அனைத்தோடும் கூட்டிக்கொண்டு பெரும் மகிழ்ச்சியோடு யூதேயா நாட்டுக்கு வந்தார்.24 யூதா மக்கபேயும் அவருடைய சகோதரனான யோனத்தானும் யோர்த்தான் ஆற்றைக் கடந்து பாலைநிலத்தில் மூன்று நாள் பயணம் செய்தார்கள்:25 அவர்கள் நபத்தேயரைச் சந்தித்தார்கள். நபத்தேயர் அவர்களை இனிதே வரவேற்றுக் கிலயாது நாட்டில் வாழ்ந்துவந்த யூதர்களுக்கு நேர்ந்த யாவற்றையும் தெரிவித்தார்கள்:26 போஸ்ரா, போசோர், அலேமா, காஸ்போ, மாக்கேது, கர்னாயிம் என்னும் வலிமைமிக்க மாநகர்களில் யூதர்கள் பலர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்:27 மற்றும் சிலர் கிலயாதின் பிற நகரங்களில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்: பகைவர்கள் நாளையே அவர்களின் கோட்டைகளைத் தாக்கிக் கைப்பற்றி, மக்கள் எல்லாரையும் ஒரே நாளில் அழித்தொழிக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.28 ஆதலால் யூதாவும் அவருடைய படைவீரர்களும் உடனே திரும்பிப் பாலைநில வழியாய்ப் போஸ்ராவுக்குச் சென்று அதைக் கைப்பற்றினார்கள்: ஆடவர் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கி நகரைக் கொள்ளையடித்துக் கொளுத்திவிட்டார்கள்.29 பிறகு அவர்கள் இரவில் அங்கிருந்து புறப்பட்டுத்தாதமா கோட்டைக்குச் சென்றார்கள்.30 பொழுது விடியம் வேளையில் அவர்கள் தலைநிமிர்ந்து பார்த்தபோது கோட்டையைப் பிடிப்பதற்கும் அதில் இருந்த யூதர்களைத் தாக்குவதற்கும் ஏணிகளோடும் படைப்பொறிகளோடும் வந்த எண்ணிலடங்காத மக்கள் திரளைக் கண்டார்கள்.31 போர் தொடங்கிவிட்டது என்று யூதா கண்டார். நகரிலிருந்து எழுந்த கூக்குரல் எக்காள ஒலியோடும் பேரிரைச்சலோடும் சேர்ந்து வானத்தை எட்டியது.32 ஆதலால் அவர் தம் படைவீரர்களை நோக்கி, இன்று நம் உறவின் முறையினருக்காகப் போரிடுங்கள் என்றார்.33 யூதா தம் படையை மூன்றாகப் பிரிக்கவே, அவர்கள் எக்காளங்களை முழங்கிக்கொண்டும் உரத்த குரலில் வேண்டிக்கொண்டும் பகைவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.34 மக்கபேயுதாம் வருகிறார் என்று திமோத்தேயுவின் படைவீரர்கள் அறிந்தவுடவே அவர் முன்னிருந்து தப்பியோடினார்கள். அவர் அவர்களை அடித்து நொறுக்கவே, அன்று அவர்களுள் ஏறத்தாழ எண்ணாயிரம் பேர் கொலையுண்டனர்.35 பின்னர் அலேமாவை நோக்கி யூதா சென்று அதை எதிர்த்துப் போரிட்டுக் கைப்பற்றினார். அங்கு இருந்த ஆடவர் எல்லாரையும் கொன்றபின் அதைக் கொள்ளையடித்துக் கொளுத்திவிட்டார்.36 அவ்விடமிருந்து புறப்பட்டுக் காஸ்போவையும் மாக்கேதையும் போசோரையும் கிலயாது நாட்டின் மற்ற நகர்களையும் பிடித்தார்.37 இவற்றுக்குப்பின் திமோத்தேயு வேறொரு படையைத் திரட்டி நீரோடையின் அக்கரையில் இராபோன் நகருக்கு எதிரில் பாசறை அமைத்தான்.38 பகைவர்களின் படையை உளவுபார்க்க யூதா ஆள்களை அனுப்ப, அவர்கள் திரும்பிவந்து, நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிற இனத்தார் எல்லாரும் அவனோடு சேர்ந்து கொண்டனர். அது மிகப் பெரும் படை.39 தங்களுக்கு உதவியாக அரேபியரையும் அவர்கள் கூலிக்கு அமர்த்தியுள்ளார்கள்: உம்மோட போர் செய்ய ஆயத்தமாகி நீரோடையின் அக்கரையில் பாசறை அமைத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். எனவே யூதா அவர்களைப் போர்முனையில் சந்திக்கச் சென்றார்.40 யூதாவும் அவரது படையும் நீரோடைக்கு அருகே வந்ததும் திமோத்தேயு தன் படைத்தலைவர்களை நோக்கி, "அவன் முதலில் நீரோடையைக் கடந்து நம்மிடம் வந்தால் நாம் அவனை எதிர்க்க முடியாது; அவன் நம்மைத் தோற்கடிப்பது உறுதி. 41 ஆனால் அவன் அச்சம்கொண்டு அக்கரையிலேயே பாசறை அமைப்பானாகில், நாம் நீரோடையைக் கடந்து சென்று அவனை முறியடிப்போம் என்று கூறினான்.42 யூதா நீரோடையை நெருங்கி வந்தபோது அலுவலர்களை அதன் அருகே நிறுத்தி, ஒருவனையும் பாசறை அமைக்க விடாதீர்கள்: எல்லாரும் போர்புரியச் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.43 தம் எதிரிகளைத் தாக்க யூதாவே முதன்முதல் நீரோடையைக் கடந்தார். மக்கள் எல்லாரும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அவரால் முறியடிக்கப்பட்ட பிற இனத்தார் அனைவரும் தங்கள் படைக்கலங்களை எறிந்து விட்டு கர்னாயிமில் இருந்த கோவிலுக்குத் தப்பியோடினார்கள்.44 ஆனால் யூதாவும் அவருடைய ஆள்களும் அந்த நகரைப் பிடித்துக் கோவிலையும் அதில் இருந்த அனைவரையும் தீக்கிரையாக்கினார்கள். இவ்வாறு கர்னாயிம் நகர் முறியடிக்கப்பட்டது: யூதாவை எதிர்க்கப் பிற இனத்தாரால் முடியாமல் போயிற்று.45 கிலயாதில் இருந்த சிறுவர் முதல் பெரியோர்வரை எல்லா இஸ்ரயேலரும் அவர்களின் மனைவி மக்களும், பொருள்களும் மிகப் பெரும் படையாக யூதேயா நாடு செல்வதற்கு அவர்களை யூதா ஒன்றுதிரட்டினார்.46 அவர்கள் எபிரோனை அடைந்தார்கள். வழியில் இருந்த அந்நகர் பெரியதும் காவலரண் செய்து வலுப்படுத்தப்பட்டதுமாய் இருந்தது. அதைச் சுற்றி வலப்பக்கமோ இடப்பக்கமோ போக இயலவில்லை: நகரில் வழியாகத்தான் அவர்கள் போக வேண்டியிருந்தது.47 ஆனால் அவர்கள் உள்ளே நுழையாதவாறு நகரில் இருந்தவர்கள் தடுத்து வாயில்களைக் கற்களால் அடைத்தார்கள்.48 யூதா அவர்களிடம், நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக எங்களுடைய நாடு போய்ச்சேர வழிவிடுங்கள். நாங்கள் யாரும் உங்களுக்குத் தீங்கு செய்யமாட்டோம்: நாங்கள் நடந்தே செல்வோம் என்று அமைதியை நாடும் முறையில் சொல்லி அனுப்பினார். இருப்பினும் நகர வாயில்களை அவருக்கு திறந்துவிட அவர்கள் விரும்பவில்லை.49 ஆதலால் படைவீரர்களுள் ஒவ்வொருவரும் தாம் இருந்த இடத்திலேயே பாசறை அமைக்கவேண்டும் என்று அறிக்கையிடும்படி யூதா கட்டளையிட்டார்.50 அவ்வாறே வீரர்களும் பாசறை அமைத்தார்கள். யூதா அன்று பகலும் இரவுமாக அந்த நகரத்தோடு போர் புரிந்து அதைக் கைப்பற்றினார்:51 ஆடவர் எல்லாரையும் வாளால் கொன்றொழித்தார்: நகரைக் கொள்ளையடித்தபின் தரைமாட்டமாக்கினார்: கொலையுண்டவர்களைத் தாண்டி நகரைக் கடந்து சென்றார்.52 பின்னர் அவர்கள் யோர்தானைக் கடந்து பெத்சான் நகருக்கு எதிரில் இருந்த பெரிய சமவெளியில் சென்று கொண்டிருந்தார்கள்.53 தம் மக்களுள் சோர்ந்து பின்னடைந்தவர்களை யூதா ஒன்றுசேர்ந்து வழி முழுவதும் யூதேயா நாடு சேருமட்டும் அவர்களுக்கு ஊக்கமூட்டிக்கொண்டு சென்றார்.54 அவர்கள் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சீயோன் மலைக்கு ஏறிச்சென்று தங்களுள் யாரும் அழிவுறாமல் எரிபலிகளை ஒப்புக்கொடுத்தார்கள்.55 யூதாவும் யோனத்தானும் கிலயாது நாட்டில் இருந்த காலத்தில், அவர்களுடைய சகோதரனான சீமோன் கலிலேயாவில் தாலமாயை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த காலத்தில்,56 அவர்கள் புரிந்த போர்களைப்பற்றியும் தீரச்செயல்களைப்பற்றியும் படைத்தலைவர்களான செக்கரியா மகன் யோசேப்பும் அசரியாவும் கேள்விப்பட்டார்கள்:57 நாமும் நமக்கு நல்ல பெயரைத் தேடிக்கொள்வோம்: நாம் சென்று நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிற இனத்தாரை எதிர்த்துப் போர்செய்வோம் என்று சொல்லி,58 தங்களோடு இருந்த படைவீரர்களுக்கு ஆணையிட, அவர்கள் யாம்னியாவை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள்.59 ஆனால் அவர்களைப் போர் முனையில் சந்திக்குமாறு கோர்கியாவும் அவனுடைய படைவீரர்களும் நகருக்கு வெளியே வந்தார்கள்.60 யோசேப்பும் அசரியாவும் முறியடிக்கப்பட்டு யூதாவின் எல்லைவரை துரத்தியடிக்கப்பட்டார்கள். அன்று இஸ்ரயேல் மக்களுள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் மாண்டனர்.61 தீரச்செயல்புரிய எண்ணிய மக்கள், யூதாவும் அவருடைய சகோதரரும் சொன்னதைக் கேளாததால் இவ்வாறு பெரும் தோல்வி அடைந்தார்கள்.62 ஆனால் யார் வழியாக இஸ்ரயேலுக்கு மீட்பு வழங்கப்பட்டதோ அவர்களது வழிமரபைச் சேர்ந்தவர்கள் அல்லர் இம்மனிதர்கள்.63 ஆண்மை படைத்த யூதாவும் அவருடைய அனைவர்முன்னும் பிற இனத்தார் அனைவர்முன்னும் அவர்களின் பெயர் தெரியவந்த இடமெல்லாம் மிகவும் பெருமைப்படுத்தப்பட்டார்கள்.64 மக்கள் திரண்டு வந்து அவர்களைப் பாராட்டினார்கள்.65 பின்னர் யூதா தம் சகோதரர்களோடு புறப்பட்டுத் தென்னாட்டில் இருந்த ஏசாவின் வழிமரபினரை எதிர்த்துப் போர் செய்தார்: எபிரோன் நகரையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் அழித்தார். அதன் கோட்டைகளைத் தரைமட்டமாக்கி அதைச் சுற்றி இருந்த காவல்மாடங்களைத் தீக்கரையாக்கினார்:66 அங்கிருந்து பெலிஸ்தியரின் நாட்டுக்குப் புறப்பட்டு மாரிசா வழியாகச் சென்றார். 67 தீரச்செயல் புரிய விரும்பிய குருக்கள் சிலர் முன்மதியின்றிப் போருக்குச் சென்றிருந்ததால் அன்று போரில் மாண்டனர். 68 பெலிஸ்தியரின் நாட்டில் அசோத்து நகரை யூதா அடைந்து அதன் பலிபீடங்களைத் தரைமட்டமாக்கி அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளைத் தீயிலிட்டு எரித்தார்: நகரங்களைக் கொள்ளையடித்த பின் யூதேயா நாடு திரும்பினார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!