திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் |
|
முன்னுரை |
சூழலும் நோக்கமும் பவுல் தம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் ஒரு முறை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது அப்போது இரண்டாம் முறையாகத் திமொத்தேயுவுக்குத் திருமுகம் எழுதியதாகவவும் கூறப்பட்டுள்ளது. முதல் முறை போலல்லாமல் இம்முறை அவர் ஒரு சாதாரண குற்றவாளி போல் நடத்தப்பட்டார் (1:16; 2:9; 4:13) என்றும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. இத்திருமுகத்தில் ஆசிரியர், பவுலின் வாழ்வை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல அறிவுரைகளைத் திமொத்தேயுவுக்கு வழங்குவதைக் காண்கின்றோம். உள்ளடக்கம்இத்திருமுகத்தில் பவுலைக் குறித்த செய்திகள் பல உள்ளன. மன உறுதியுடன் இருத்தலே இத்திருமுகத்தின் மையக் கருத்தாக அமைகிறது. திமொத்தேயு தொடர்ந்து இயேசுவுக்குச் சான்று பகரவும், நற்செய்தி மற்றும் பழைய ஏற்பாட்டின் உண்மையான போதனைகளை ஏற்றுக்கொள்ளவும், போதகர், நற்செய்தியாளர் என்னும் முறையில் தம் கடமைகளைச் செவ்வனே செய்யவும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; துன்பங்கள் நடுவிலும் எதிர்ப்புகள் நடுவிலும் முன்மாதிரியாய் வாழ்ந்து காட்டப் பணிக்கிறார். பயனற்ற வீண் விவாதங்களில் திமொத்தேயு ஈடுபடலாகாது என அவர் அறிவுறுத்துகிறார். அமைப்பு- முன்னுரை (வாழ்த்து) 1:1 - 2
- திமொத்தேயுவுக்கு அறிவுரை 1:3 - 2:13
- தவறான போதனை குறித்து அறிவுரை 2:14 - 4:8
- பவுலின் நிலைமை 4:9 - 18
- முடிவுரை 4:19 - 22
|
|
அதிகாரம்
1
|
1. முன்னுரை வாழ்த்து 1 என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: 2 தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக!
2. திமொத்தேயுவுக்கு அறிவுரை நம்பிக்கையில் நிலைத்திருத்தல் 3 என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூறுகின்றேன்.4 உன் கண்ணீரை நினைவிற் கொண்டு உன்னைக் காண ஏங்குகிறேன்: கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்.5 வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டிலோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.6 உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.7 கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.8 எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை: கடவுளின் வல்லமைகேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.9 அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்: நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார்.10 நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.11 அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன்.12 இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்: எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.13 கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள்.14 நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக் கொள்.15 பிகல், எர்மொகேன் உட்பட ஆசியாவிலுள்ள அனைவரும் என்னிடமிருந்து விலகிவிட்டனர் என்பதை நீ அறிந்திருக்கிறாய்.16 ஒனேசிப்போரின் வீட்டாருக்கு ஆண்டவர் இரக்கம் காட்டுவாராக! ஏனெனில் அவர் பன்முறை என் உளம் குளிரப் பண்ணினார். விலங்கிடப்பட்டிருக்கும் என்னைக் குறித்து அவர் வெட்கமடையவில்லை.17 அவர் உரோமைக்கு வந்தபோது ஆர்வமாக என்னைத் தேடிக் கண்டுபிடித்தார்.18 இறுதி நாளில் ஆண்டவரிடம் இரக்கத்தைக் கண்டுகொள்ள அவருக்கு ஆண்டவர் அருள்வாராக! எபேசில் அவர் எவ்வாறு தொண்டாற்றினார் என்பதை நீ நன்கு அறிவாய். |