Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

யோபு

அதிகாரம் 21

நிகழ்வன எதிர்மாயாய் இருத்தல்
1 அதற்கு யோபு கூறிய மறுமொழி:2 நான் கூறுவதைக் கவனமாய்க் கேளுங்கள்: இதுவே நீங்கள் எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.3 பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்: நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.4 என்னைப் பொறுத்த மட்டில், நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா? இல்லையேல் நான் ஏன் பொறுமை இழக்கக்கூடாது?5 என்னை உற்றுப்பாருங்கள்: பதறுங்கள்: கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.6 இதை நான் நினைக்கும்பொழுது திகிலடைகின்றேன்: நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.7 தீயோர் வாழ்வதேன்? நீண்ட ஆயுள் பெறுவதேன்? வலியோராய் வளர்வதேன்?8 அவர்களின் வழிமரபினர் அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்: அவர்களின் வழித்தோன்றல்கள் அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.9 அவர்களின் இல்லங்களில் அச்சமற்ற அமைதி நிலவுகின்றது. கடவுளின் தண்டனை அவர்கள்மேல் விழவில்லை.10 அவர்களின் காளைகள் பொலிகின்றன. ஆனால் பிசகுவதில்லை: அவர்களின் பசுக்கள் கருவுறும்: ஆனால் கரு கலைவதில்லை.11 மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை வெளியனுப்புகின்றனர்: அவர்களின் குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.12 அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப் பாடுகின்றனர்: குழல் ஊதி மகிழ்ந்திருக்கின்றனர்.13 அவர்கள் மகிழ்வில் தம் நாள்களைக் கழிக்கின்றனர்: அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.14 அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்: 'எம்மை விட்டு அகலும்: ஏனெனில், உமது வழிகளை அறிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை:'15 எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய? அவரை நோக்கி நாங்கள் மன்றாடுவதால் என்ன பயன்?16 இதோ! அவர்களின் வளமை அவர்களின் கையில் இல்லை. எனவே தீயோரின் ஆலோசனை எனக்குத் தொலையிலிருப்பதாக!17 எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது? அழிவு அவர்கள்மேல் வருகின்றது? கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.18 அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்: சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.19 அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின் பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்? அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்: அவர்களும் அதை உணர்வர்.20 அவர்களின் அழிவை அவர்களின் கண்களே காணட்டும்: எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை அவர்கள் குடிக்கட்டும்.21 அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின், அவர்களது இல்லத்தில் அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?22 இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்? ஏனெனில், அவரே உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.23 சிலர் வளமையோடும் வலிமையோடும் நிறைவோடும் முழு அமைதியோடும் சாகின்றனர்.24 அவர்களின் தொடைகள் கொழுப்பேறி உள்ளன: அவர்களின் எலும்புகளின் சோறு உலரவில்லை.25 வேறு சிலர், கசந்த உள்ளத்துடன் இனிமையையச் சுவைக்காதவராயச் சாகின்றனர்:26 புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்: புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.27 இதோ! உம் எண்ணங்களையும் எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும் நான் அறிவேன்.28 ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்: 'கொடுங்கோலனின் இல்லம் எங்கே? கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?'29 வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா? அவர்கள் அறிவித்ததை நீங்கள் கேட்கவில்லையா?30 தீயோர் அழிவின் நாளுக்கென விடப்பட்டுள்ளனர்: வெஞ்சின நாளில் அவர்கள் விடுவிக்கப்படுவாரா?31 யார் அவர்களின் முகத்துக்கு எதிரே அவர்களின் போக்கை உரைப்பார்? யார் அவர்களின் செயலுக்கேற்பக் கொடுப்பார்?32 இருப்பினும், கல்லறைக்கு அவர்கள் கொண்டுவரப்படுவர்: அவர்களின் சமாதிக்குக் காவல் வைக்கப்படும்.33 பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு இனிமையாய் இருக்கும்: மாந்தர் அனைவரும் அவர்களைப் பின்தொடர்வர்: அவர்களின் முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.34 அப்படியிருக்க, வெற்றுமொழியால் நீர் என்னைத் தேற்றுவதெப்படி? ஊமது மறுமொழி முற்றிலும் பொய்யே!


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!