Home Churches About
 

லேவியராகமம்

Chapter 1

1. கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்த வேண்டும்.
3. அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து,
4. அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
5. கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
6. பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.
7. அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,
8. அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.
9. அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
10. அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகன பலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,
11. கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
12. பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
13. குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
14. அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன்.
15. அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக்கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு,
16. அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,
17. பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

Chapter 2

1. ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
2. அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
3. அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
4. நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.
5. நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக.
6. அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி.
7. நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
8. இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து,
9. அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
10. இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
11. நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
12. முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.
13. நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.
14. முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.
15. அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.
16. பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.

Chapter 3

1. ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.
2. அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
3. பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும்,
4. இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக.
5. அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
6. அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.
7. அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
8. தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
9. பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
10. இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
11. அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம்.
12. அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
13. அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
14. அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும்,
15. இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.
16. ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.
17. கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.

Chapter 4

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
3. அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
4. அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
5. அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,
6. தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன்.
7. பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
8. பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,
9. இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,
10. சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
11. காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,
12. காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன்.
13. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,
14. அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.
15. சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்.
16. அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து,
17. தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து,
18. ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
19. அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
20. பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
21. பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.
22. ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
23. தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,
24. அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி.
25. அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
26. அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
27. சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
28. தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,
29. பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன்.
30. அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
31. சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
32. அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து,
33. அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.
34. அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகன பலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,
35. சமாதான பலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

Chapter 5

1. சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
2. அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான்.
3. அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.
4. மனிதர் பதறி ஆணையிடும் எந்தக் காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
5. இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,
6. தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
7. ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
8. அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,
9. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.
10. மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
11. இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து,
12. அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.
13. இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜனபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.
14. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
15. ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்ற நிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
16. பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
17. ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
18. அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
19. இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.

Chapter 6

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,
3. அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,
4. அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,
5. பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,
6. தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.
7. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக் காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.
8. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
9. நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
10. ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,
11. பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.
12. பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.
13. பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.
14. போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.
15. அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
16. அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.
17. அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.
18. ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.
19. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
20. ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்.
21. அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணப்படக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.
22. அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை.
23. ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப் போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார்.
24. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
25. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.
26. பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.
27. அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.
28. அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
29. ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது மகா பரிசுத்தமானது.
30. எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.

Chapter 7

1. குற்றநிவாரண பலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
2. சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
3. அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,
4. இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.
5. இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரண பலி.
6. ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
7. பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.
8. ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
9. அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.
10. எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
11. கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,
12. அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
13. அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூட படைக்கவேண்டும்.
14. அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
15. சமாதானபலியாகிய ஸ்தோத்திர பலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.
16. அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.
17. பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
18. சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
19. தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
20. ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
21. மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
22. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
23. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது.
24. தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது.
25. கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
26. உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது.
27. எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
28. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
29. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.
30. கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடுகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.
31. அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.
32. உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப் படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.
33. ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
34. இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.
35. கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
36. இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.
37. சர்வாங்க தகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரண பலிக்கும் குற்றநிவாரண பலிக்கும் பிரதிஷ்டை பலிகளுக்கும் சமாதான பலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே.
38. கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார்.

Chapter 8

1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேகதைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து,
3. சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார்.
4. கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடின போது,
5. மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி,
6. கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
7. அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி,
8. அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து,
9. அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.
10. பின்பு மோசே, அபிஷேகதைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி,
11. அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படிக்கு அபிஷேகம்பண்ணி,
12. அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.
13. பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களைத் தரித்து,
14. பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்;
15. அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.
16. பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து,
17. காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
18. பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
19. அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
20. ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.
21. குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான்.
22. பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
23. பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.
24. பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
25. கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
26. கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
27. அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,
28. பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்த வாசனையான பிரதிஷ்டைப் பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.
29. பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று.
30. மோசே அபிஷேகதைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.
31. பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,
32. மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,
33. பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.
34. இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.
35. நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.
36. கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.

Chapter 9

1. எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,
2. ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.
3. மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
4. சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.
5. மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.
6. அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
7. மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
8. அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
9. ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
10. பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து,
11. மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
12. பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
13. சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
14. குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.
15. பின்பு அவன் ஜனங்களின் பலியைக் கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,
16. சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி அதைப் பலியிட்டு,
17. போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்க தகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
18. பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
19. காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,
20. கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
21. மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
22. பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்க தகனபலியையும், சமாதான பலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
23. பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
24. அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.

Chapter 10

1. பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
2. அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
3. அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
4. பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
5. மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.
6. மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.
7. நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.
8. கர்த்தர் ஆரோனை நோக்கி:
9. நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
10. பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,
11. கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
12. மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
13. அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன்.
14. அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
15. கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
16. பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:
17. பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.
18. அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
19. அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
20. மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.

Chapter 11

1. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2. நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவஜந்துக்கள் யாதெனில்:
3. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
4. ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
5. குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
6. முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
7. பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
8. இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
9. ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
10. ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
11. அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
12. தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
13. பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
14. பருந்தும், சகலவித வல்லூறும்,
15. சகலவித காகங்களும்,
16. தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,
17. ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
18. நாரையும், கூழக்கடாவும், குருகும்,
19. கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.
20. பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
21. ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
22. வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.
23. பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
24. அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
25. அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
26. விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
27. நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
28. அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
29. தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
30. உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
31. சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
32. அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலமட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.
33. அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
34. புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப் பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.
35. அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
36. ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.
37. மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.
38. அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
39. உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
40. அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப்போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
41. தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.
42. தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.
43. ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
44. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.
45. நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
46. சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,
47. மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

Chapter 12

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.
3. எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.
4. பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது.
5. பெண்பிள்ளையைப் பெற்றாளாகில், அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள்.
6. அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.
7. அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
8. ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.

Chapter 13

1. பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2. ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.
3. அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப் பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
4. அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
5. ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
6. இரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக.
7. தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்த பின்பு, அசறு தோலில் அதிகமாய் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
8. அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
9. குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
10. அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்றென்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால்,
11. அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
12. ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால்மட்டும் அது தேகமுழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,
13. அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன்.
14. ஆனாலும், இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
15. ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம்.
16. அல்லது, இரணமாம்சம் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும்.
17. ஆசாரியன் அவனைப்பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
18. சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
19. அவ்விடத்திலே ஒரு வெள்ளைத் தடிப்பாவது சிவப்புக்கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
20. ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.
21. ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
22. அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருக்கக்கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டந்தான்.
23. அந்த வெள்ளைப்படர் அதிகப்படாமல், அவ்வளவில் நின்றிருக்குமாகில், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
24. ஒருவனுடைய சரீரத்தின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த வேக்காடு ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,
25. ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால், அது வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகந்தான்.
26. ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
27. ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
28. படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.
29. புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
30. ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.
31. ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்த மயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
32. ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும், அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,
33. அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
34. ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.
35. அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,
36. ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
37. அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
38. ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,
39. ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
40. ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாயிருக்கிறான்.
41. அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.
42. மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற குஷ்டம்.
43. ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,
44. அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
45. அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்.
46. அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
47. ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
48. பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
49. வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
50. ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
51. ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
52. அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
53. வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
54. அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைத்து,
55. அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன்; அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும், அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும்; அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும்; அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.
56. கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.
57. அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம்; ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
58. வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருக்கும்.
59. ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

Chapter 14

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
3. ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,
4. சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடக்கடவன்.
5. பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,
6. உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,
7. குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
8. சுத்திகரிக்கப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் மயிர் முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாகும்படி ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கி,
9. ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
10. எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு வயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
11. சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
12. பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
13. பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
14. அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.
15. பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
16. தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலைத்தோய்த்து, தன் விரலினால் ஏழுதரம் அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து,
17. தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், முந்திப் பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
18. தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
19. ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக் கொன்று,
20. சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
21. அவன் இம்மாத்திரம் செய்யத் திராணியற்ற தரித்திரனாயிருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், போஜனபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
22. தன் திராணிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
23. தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக.
24. அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,
25. குற்றநிவாரண பலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
26. அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,
27. தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து,
28. தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
29. தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
30. பின்பு, அவன் தன் திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாய்க் காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
31. அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
32. தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக்கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்.
33. பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
34. நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால்,
35. அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
36. அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,
37. அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால்,
38. ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து,
39. ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப் பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
40. தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
41. வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
42. வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
43. கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால்,
44. ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
45. ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
46. வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
47. அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்.
48. ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.
49. அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,
50. ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
51. கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,
52. குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து,
53. உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.
54. இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,
55. வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும்,
56. தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம்.
57. குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

Chapter 15

1. பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2. நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.
3. அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
4. பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
5. அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலமட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
6. பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
7. பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
8. பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
9. பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.
10. அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
11. பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
12. பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
13. பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
14. எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
15. ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
16. ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலமட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
17. கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலமட்டும் தீட்டாயிருப்பதாக.
18. இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
19. சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
20. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
21. அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
22. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
23. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
24. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
25. ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
26. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
27. அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
28. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.
29. எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
30. ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
31. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.
32. பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும்,
33. சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்ற பிரமாணம் இதுவே என்றார்.

Chapter 16

1. ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
2. கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
3. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.
4. அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப் போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
5. இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்க தகனபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன்.
6. பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி,
7. அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி,
8. அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
9. கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
10. போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;
11. பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று,
12. கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
13. தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
14. பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
15. பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
16. இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
17. பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
18. பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
19. தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்.
20. அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
21. அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
22. அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.
23. ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,
24. பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்க தகனபலியையும் ஜனங்களின் சர்வாங்க தகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
25. பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
26. போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
27. பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.
28. அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக.
29. ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது.
30. கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.
31. உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.
32. அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு,
33. பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
34. இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

Chapter 17

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
3. இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
4. பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.
5. ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
6. அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
7. தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
8. மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,
9. அதை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.
10. இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
11. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
12. அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
13. இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.
14. சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
15. தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.
16. அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.

Chapter 18

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
3. நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,
4. என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5. ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
6. ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.
7. உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
8. உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
9. உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
10. உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.
11. உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
12. உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.
13. உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.
14. உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
15. உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.
16. உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
17. ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
18. உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.
19. ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
20. பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.
21. நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
22. பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
23. யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
24. இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
25. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
26. இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
27. இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,
28. நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
29. இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.
30. ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Chapter 19

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
3. உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
4. விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5. நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
6. நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்கவேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
7. மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
8. அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
9. நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
10. உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
11. நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
12. என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
13. பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
14. செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
15. நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
16. உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
17. உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்துகொள்ளவேண்டும்.
18. பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
19. என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.
20. ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.
21. அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
22. அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23. நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
24. பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.
25. ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
26. யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
27. உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
28. செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துகளை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
29. தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.
30. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
31. அஞ்சனம்பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
32. நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
33. யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
34. உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
35. நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
36. சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
37. ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Chapter 20

1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.
3. அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன்.
4. அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால்,
5. நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்துநின்று, அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
6. அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன்.
7. ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
8. என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
9. தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.
10. ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.
11. தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
12. ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
13. ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
14. ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
15. ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.
16. ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.
17. ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
18. ஒருவன் சூதகஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
19. உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.
20. ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள்.
21. ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள்.
22. ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள்.
23. நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்.
24. நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
25. ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.
26. கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்.
27. அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

Chapter 21

1. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தலாகாதென்று அவர்களோடே சொல்.
2. தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும்,
3. புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
4. தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது.
5. அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக.
6. தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.
7. அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.
8. அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.
9. ஆசாரியனுடைய குமாரத்தி வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள்.
10. தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,
11. பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,
12. பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே; நான் கர்த்தர்.
13. கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும்.
14. விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன்.
15. அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
16. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
17. நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது.
18. அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,
19. காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,
20. கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.
21. ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.
22. அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.
23. ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
24. மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னான்.

Chapter 22

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.
3. அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.
4. ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,
5. தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,
6. சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.
7. சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.
8. தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.
9. ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
10. அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.
11. ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம்.
12. ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.
13. விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.
14. ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.
15. அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,
16. அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.
17. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
18. நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,
19. அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.
20. பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.
21. ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.
22. குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
23. நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.
24. விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.
25. அந்நிய புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார்.
26. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
27. ஒரு கன்றாவது செம்மறியாட்டுக் குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
28. பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம்.
29. கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.
30. அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.
31. நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
32. என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
33. நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

Chapter 23

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
3. ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக.
4. சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
5. முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,
6. அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும்.
7. முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
8. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
9. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
10. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
11. உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
12. நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,
13. கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
14. உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள்மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
15. நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
16. ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
17. நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,
18. அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,
19. வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதான பலியாகவும் இடக்கடவீர்கள்.
20. அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.
21. அந்த நாள் உங்களுக்குச் சபை கூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
22. உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
23. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
24. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக.
25. அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.
26. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
27. அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.
28. அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
29. அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
30. அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.
31. அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
32. அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலமட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
33. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
34. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.
35. முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்த நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
36. ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
37. நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
38. நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
39. நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.
40. முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
41. வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.
42. நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,
43. ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
44. அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.

Chapter 24

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.
3. ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
4. அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.
5. அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
6. அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,
7. ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும்.
8. அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.
9. அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாகக் கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.
10. அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்.
11. அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.
12. கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள்.
13. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
14. தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.
15. மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
16. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
17. ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
18. மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
19. ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
20. நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
21. மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
22. உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
23. அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

Chapter 25

1. கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.
3. ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக.
4. ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,
5. தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது.
6. தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,
7. உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக.
8. அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும்.
9. அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்.
10. ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.
11. அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.
12. அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.
13. அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
14. ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.
15. யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக.
16. பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.
17. உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
18. என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
19. பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
20. ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
21. நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.
22. நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.
23. தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.
24. உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.
25. உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.
26. அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,
27. அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
28. அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.
29. ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.
30. ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.
31. மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.
32. லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.
33. இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.
34. அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.
35. உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.
36. நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.
37. அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.
38. உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
39. உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.
40. அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.
41. பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.
42. அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
43. நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.
44. உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.
45. உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.
46. அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.
47. உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,
48. அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.
49. அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
50. அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.
51. இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.
52. யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப்பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.
53. இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது.
54. இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடேகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள்.
55. இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Chapter 26

1. நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
2. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.
3. நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,
4. நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.
5. திராட்சப்பழம் பறிக்குங் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.
6. தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.
7. உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
8. உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
9. நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.
10. போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.
11. உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.
12. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
13. நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
14. நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,
15. என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:
16. நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள்.
17. நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.
18. இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து,
19. உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.
20. உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது.
21. நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி,
22. உங்களுக்குள்ளே வெளியின் துஷ்டமிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும்.
23. நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
24. நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து,
25. என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.
26. உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.
27. இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,
28. நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.
29. உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.
30. நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.
31. நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.
32. நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்.
33. ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.
34. நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்.
35. நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும்.
36. உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
37. துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது.
38. புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
39. உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள்.
40. அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,
41. அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,
42. நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.
43. தேசம் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.
44. அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்.
45. அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நிமித்தம் நினைவுகூருவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
46. கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

Chapter 27

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
3. இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச் சேக்கலாகவும்,
4. பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
5. ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும்,
6. ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச் சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச் சேக்கலாகவும்,
7. அறுபது வயது தொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.
8. உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனை பண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.
9. ஒருவன் பொருத்தனைபண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருகஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.
10. அதை மாற்றாமலும், வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.
11. அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.
12. ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.
13. அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
14. ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.
15. தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.
16. ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
17. யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.
18. யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்ற வருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.
19. வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.
20. அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,
21. யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.
22. ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
23. அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
24. யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச்சேரும்.
25. உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
26. தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.
27. சுத்தமல்லாத மிருகத்தினுடைய தலையீற்றானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
28. ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.
29. நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.
30. தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
31. ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.
32. கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
33. அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
34. இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.


Free counters!   Site Meter(April28th2012)