Home Churches About
 

யாத்திராகமம்

Chapter 1

1. எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா,
2. இசக்கார், செபுலோன், பென்யமீன்,
3. தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே.
4. இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள்.
5. யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
6. யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள்.
7. இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
8. யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
9. அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.
10. அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.
11. அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.
12. ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.
13. எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள்.
14. சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.
15. அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி:
16. நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.
17. மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.
18. அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.
19. அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.
20. இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள்.
21. மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.
22. அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.

Chapter 2

1. லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான்.
2. அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்றுமாதம் ஒளித்துவைத்தாள்.
3. அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்.
4. அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள்.
5. அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள்.
6. அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
7. அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.
8. அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டுவந்தாள்.
9. பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள்.
10. பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.
11. மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
12. அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான்.
13. அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டைபண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயஞ் செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.
14. அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
15. பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
16. மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.
17. அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.
18. அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான்.
19. அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.
20. அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்.
21. மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான்.
22. அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.
23. சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
24. தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25. தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.

Chapter 3

1. மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
2. அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
3. அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான்.
4. அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
5. அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
6. பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
7. அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
8. அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
9. இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.
10. நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
11. அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
12. அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.
13. அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
14. அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
15. மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
16. நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,
17. நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.
18. அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
19. ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.
20. ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
21. அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும்போது வெறுமையாய்ப் போவதில்லை.
22. ஒவ்வொரு ஸ்திரீயும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.

Chapter 4

1. அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.
2. கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
3. அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்.
4. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.
5. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.
6. மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.
7. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.
8. அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள்.
9. இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்.
10. அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான்.
11. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
12. ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.
13. அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்.
14. அப்பொழுது கர்த்தர் மோசேயின்மேல் கோபம்மூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டுவருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.
15. நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.
16. அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.
17. இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.
18. மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.
19. பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார்.
20. அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.
21. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.
22. அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
23. எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
24. வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார்.
25. அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.
26. பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.
27. கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.
28. அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.
29. மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள்.
30. கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.
31. ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.

Chapter 5

1. பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.
2. அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்.
3. அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளைநோயும் பட்டயமும் எங்கள்மேல் வரப்பண்ணுவார் என்றார்கள்.
4. எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளை விட்டுக் கலையப்பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள் என்றான்.
5. பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான்.
6. அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி:
7. செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும்.
8. அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பலாயிருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள்.
9. அந்த மனிதர்மேல் முன்னிலும் அதிகவேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; வீண்வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
10. அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப்போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;
11. நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள்.
12. அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.
13. ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.
14. பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.
15. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?
16. உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும், செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள்.
17. அதற்கு அவன்: நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள், சோம்பலாயிருக்கிறீர்கள்; அதினால்தான் போகவேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள்.
18. போய், வேலைசெய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை ஒப்புவிக்கவேண்டும் என்றான்.
19. நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.
20. அவர்கள் பார்வோனுடைய சமுகத்தை விட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,
21. அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவர் என்றார்கள்.
22. அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்குவரப்பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?
23. நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்ததுமுதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

Chapter 6

1. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.
2. மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,
3. சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
4. அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.
5. எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.
6. ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
7. உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
8. ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
9. இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.
10. பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
11. நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.
12. மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.
13. கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளைகொடுத்து அனுப்பினார்.
14. அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.
15. சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
16. உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
17. அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.
18. கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
19. மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
20. அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
21. இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.
22. ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
23. ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
24. கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
25. ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே.
26. இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்குக் கர்த்தரால் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27. இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
28. கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;
29. கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது,
30. மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.

Chapter 7

1. கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
2. நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.
3. நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
4. பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்.
5. நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
6. மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
7. அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.
8. கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
9. உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.
10. மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
11. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.
12. அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று.
13. கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
14. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.
15. காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,
16. அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.
17. இதோ, என் கையில் இருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,
18. நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
19. மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
20. கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.
21. நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது.
22. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
23. பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
24. நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
25. கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.

Chapter 8

1. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
2. நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.
3. நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின் மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.
4. அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
5. மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
6. அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
7. மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.
8. பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.
9. அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
10. அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.
11. தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலே மாத்திரம் இருக்கும் என்றான்.
12. மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள்நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
13. கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.
14. அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.
15. இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.
16. அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.
17. அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் பேன்களாய் எகிப்துதேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.
18. மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ்செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது.
19. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்.
20. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.
21. என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும், உன் ஊழியக்காரர்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.
22. பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,
23. என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
24. அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.
25. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.
26. அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பைப் பலியிடுகிறதாயிருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?
27. நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான்.
28. அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான்.
29. அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.
30. மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.
31. அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை.
32. பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.

Chapter 9

1. பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு.
2. நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில்,
3. கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும்.
4. கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.
5. மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார்.
6. மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
7. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
8. அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன்.
9. அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார்.
10. அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று.
11. அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்களினிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது.
12. ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
13. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
14. விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன்.
15. நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன்.
16. என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.
17. நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா?
18. எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப்பண்ணுவேன்.
19. இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்.
20. பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான்.
21. எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
22. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
23. அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று; எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்;
24. கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை.
25. எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது.
26. இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.
27. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர்.
28. இது போதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான்.
29. மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
30. ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான்.
31. அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.
32. கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.
33. மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.
34. மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
35. கர்த்தர் மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

Chapter 10

1. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ, அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,
2. நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.
3. அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு.
4. நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன்.
5. தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும்.
6. உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
7. அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.
8. அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.
9. அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான்.
10. அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்;
11. அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள்.
12. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.
13. அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இராமுழுவதும் கீழ்க்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார்; விடியற்காலத்திலே கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
14. வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததும் இல்லை, அதற்குப்பின் இருப்பதும் இல்லை.
15. அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப்போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.
16. அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.
17. இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவைமாத்திரம் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள் என்றான்.
18. அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
19. அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய்ச் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை.
20. கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
21. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.
22. மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள்மட்டும் காரிருள் உண்டாயிற்று.
23. மூன்றுநாள்மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது.
24. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.
25. அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.
26. எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.
27. கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.
28. பார்வோன் அவனை நோக்கி: என்னை விட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.
29. அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.

Chapter 11

1. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.
2. இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்.
3. அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.
4. அப்பொழுது மோசே: கர்த்தர் நடுராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப்போவேன்.
5. அப்பொழுது சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,
6. அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.
7. ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள்வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.
8. அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
9. கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார்.
10. மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.

Chapter 12

1. கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2. இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.
3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள்.
4. ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
5. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.
6. அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
7. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
8. அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
9. பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
10. அதிலே ஒன்றையும் விடியற்காலம்மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
11. அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
12. அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
13. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
14. அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
15. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
16. முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
17. புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
18. முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
19. ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.
20. புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.
21. அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
22. ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்துக் கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம்வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம்.
23. கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
24. இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
25. கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
26. அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
27. இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
28. இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
29. நடுராத்திரியிலே சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
30. அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.
31. இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.
32. நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
33. எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லித், தீவிரமாய் ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.
34. பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
35. மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
36. கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
37. இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
38. அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
39. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை.
40. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்.
41. நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
42. கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.
43. மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.
44. பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
45. அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
46. அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
47. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
48. அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.
49. சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
50. இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
51. அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

Chapter 13

1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.
3. அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.
4. ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.
5. ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.
6. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.
7. அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.
8. அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
9. கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்;
10. ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக.
11. மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,
12. கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.
13. கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக.
14. பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
15. எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.
16. கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.
17. பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,
18. சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.
19. மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டுபோனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.
20. அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
21. அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.
22. பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

Chapter 14

1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.
3. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.
4. ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
5. ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.
6. அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு,
7. பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டுபோனான்.
8. கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப்போனார்கள்.
9. எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள்.
10. பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.
11. அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?
12. நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.
13. அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
14. கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
15. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.
16. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.
17. எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.
18. இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
19. அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
20. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.
21. மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
22. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
23. அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.
24. கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,
25. அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.
26. கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.
27. அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.
28. ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாகச் சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
29. இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
30. இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.
31. கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.

Chapter 15

1. அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
2. கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
3. கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
4. பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள்.
5. ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
6. கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.
7. உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.
8. உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
9. தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.
10. உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
11. கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
12. நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
13. நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.
14. ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.
15. ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.
16. பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.
17. நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.
18. கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்.
19. பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரரோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.
20. ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
21. மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
22. பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்றுநாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.
23. அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது.
24. அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
25. மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
26. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
27. பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.

Chapter 16

1. இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
2. அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
3. நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்.
4. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
5. ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணிவைக்கக்கடவர்கள் என்றார்.
6. அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்;
7. விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள்.
8. பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திர்ப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான்.
9. அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து; நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான்.
10. ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
11. கர்த்தர் மோசேயை நோக்கி:
12. இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13. சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.
14. பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது.
15. இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.
16. கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காகத் தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான்.
17. இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள்.
18. பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
19. மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
20. மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
21. அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம்.
22. ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
23. அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச்சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.
24. மோசே கட்டளையிட்டபடியே, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
25. அப்பொழுது மோசே: அதை இன்றைக்குப் புசியுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
26. ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான்.
27. ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை.
28. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்?
29. பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார்.
30. அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
31. இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.
32. அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும்படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான்.
33. மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.
34. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
35. இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்.
36. ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.

Chapter 17

1. பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
2. அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
3. ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.
4. மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
5. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
6. அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
7. இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
8. அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
9. அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
10. யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.
11. மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
12. மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
13. யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
14. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
15. மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
16. அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

Chapter 18

1. தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது,
2. மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,
3. அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
4. என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.
5. மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து:
6. எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
7. அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்.
8. பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான்.
9. கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு:
10. உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
11. கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;
12. மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம் பண்ணினார்கள்.
13. மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலமட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
14. ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலமட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.
15. அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள்.
16. அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.
17. அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
18. நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது.
19. இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;
20. கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
21. ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
22. அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.
23. இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான்.
24. மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
25. மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்.
26. அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள்.
27. பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

Chapter 19

1. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
2. அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
3. மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
4. நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
5. இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
6. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார்.
7. மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான்.
8. அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.
9. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.
10. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து,
11. மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.
12. ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
13. ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.
14. மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
15. அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
16. மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
17. அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
18. கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19. எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
20. கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
21. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி.
22. கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
23. அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான்.
24. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார்.
25. அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

Chapter 20

1. தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
2. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
7. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
13. கொலை செய்யாதிருப்பாயாக.
14. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
15. களவு செய்யாதிருப்பாயாக.
16. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
17. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
18. ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,
19. மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.
20. மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்.
21. ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.
22. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.
23. நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.
24. மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.
25. எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய்.
26. என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.

Chapter 21

1. மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன:
2. எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன்.
3. ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.
4. அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.
5. அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,
6. அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.
7. ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது.
8. அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.
9. அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.
10. அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.
11. இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப்போகக்கடவள்.
12. ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
13. ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.
14. ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.
15. தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
16. ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
17. தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
18. மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில்கிடையாய்க் கிடந்து,
19. திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்; ஆனாலும், அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்.
20. ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
21. ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை.
22. மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும்.
23. வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
24. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
25. சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.
26. ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
27. அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
28. ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்.
29. தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டி வைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.
30. அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும்பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன்.
31. அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும்.
32. அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
33. ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால்,
34. குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.
35. ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.
36. அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.

Chapter 22

1. ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன்.
2. திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது.
3. சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.
4. அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும்.
5. ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.
6. அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.
7. ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.
8. திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும்.
9. காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லிக் குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.
10. ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
11. அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.
12. அது அவன் வசத்திலிருந்து திருடப்பட்டுப்போயிற்றானால், அவன் அதின் எஜமானுக்கு அதற்காக உத்தரவாதம் பண்ணக்கடவன்.
13. அது பீறுண்டுபோயிற்றானால், அதற்குச் சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை.
14. ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும்.
15. அதற்கு உடையவன் கூட இருந்தானாகில், அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவன் வாடகைக்கு வந்த சேதம்.
16. நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
17. அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
18. சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம்.
19. மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20. கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
22. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
23. அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,
24. கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
25. உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
26. பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக.
27. அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.
28. நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
29. முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.
30. உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
31. நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.

Chapter 23

1. அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.
2. தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.
3. வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக.
4. உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.
5. உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடே கூட அதற்கு உதவிசெய்வாயாக.
6. உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.
7. கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன்.
8. பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்.
9. அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.
10. ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
11. ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக.
12. ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.
13. நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
14. வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக.
15. புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.
16. நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
17. வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.
18. எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.
19. உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
20. வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.
21. அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.
22. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.
23. என் தூதனானவர் உனக்கு முன்சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.
24. நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.
25. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
26. கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன்.
27. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.
28. உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.
29. தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,
30. நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.
31. சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.
32. அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.
33. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்கவேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.

Chapter 24

1. பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.
2. மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார்.
3. மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
4. மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.
5. இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள்.
6. அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து,
7. உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
8. அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான்.
9. பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
10. இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது.
11. அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள்.
12. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார்.
13. அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,
14. அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.
15. மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
16. கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
17. மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
18. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.

Chapter 25

1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.
3. நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
4. இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும்,
5. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
6. விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
7. ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
8. அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.
9. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.
10. சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக.
11. அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
12. அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
13. சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
14. அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய்.
15. அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும்.
16. நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.
17. பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது.
18. பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
19. ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்.
20. அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
21. கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக.
22. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
23. சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.
24. அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி,
25. சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி,
26. அதற்கு நாலு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய்.
27. அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும்.
28. அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.
29. அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.
30. மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய்.
31. பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.
32. ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும்.
33. ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும்.
34. விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக.
35. அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்.
36. அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும்.
37. அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.
38. அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக.
39. அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.
40. மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.

Chapter 26

1. மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பரநூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
2. ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
3. ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
4. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடை ஓரத்திலும் அப்படியே செய்வாயாக.
5. காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக.
6. ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும்.
7. வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக.
8. ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும்.
9. ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக.
10. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி,
11. ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச்செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்து விடுவாயாக.
12. கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
13. கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும்.
14. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக.
15. வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.
16. ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.
17. ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக.
18. வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது.
19. அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
20. வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும்,
21. அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும்.
22. வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
23. வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
24. அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்.
25. அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும்.
26. சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
27. வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.
28. நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
29. பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய்.
30. இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக.
31. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும்.
32. சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும்.
33. கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
34. மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக;
35. திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக.
36. இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
37. அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.

Chapter 27

1. ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக.
2. அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
3. அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக.
4. வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
5. அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக.
6. பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
7. பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.
8. அதை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப் பண்ணக்கடவர்கள்.
9. வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.
10. அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
11. அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
12. பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும்.
13. சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ அகலமாயிருக்கவேண்டும்.
14. அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
15. மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
16. பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாய்ச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்குதிரையும் அதற்கு நாலு தூண்களும், அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும்.
17. சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
18. பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்.
19. வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும்.
20. குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.
21. ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.

Chapter 28

1. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக.
2. உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக.
3. ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக.
4. அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும்.
5. அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக.
6. ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள்.
7. அது ஒன்றாக இணைக்கப்படும்பொருட்டு, இரண்டு தோள்துண்டுகளின்மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும்.
8. அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும்.
9. பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக.
10. அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும்.
11. இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக.
12. ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்துத் தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய்.
13. பொன்னினால் வளையங்களைப் பண்ணி,
14. சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.
15. நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
16. அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாய் இருக்கவேண்டும்.
17. அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
18. இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
19. மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
20. நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
21. இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும்.
22. மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
23. அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து,
24. பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி,
25. அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக.
26. நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து,
27. வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,
28. மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.
29. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.
30. நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.
31. ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய்.
32. தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்துக்கு நெய்யப்பட்ட வேலையான ஒரு நாடா சுற்றிலும் இருக்கவும் வேண்டும்; அது கிழியாதபடிக்கு மார்க்கவசத்தின் துவாரத்துக்கு ஒத்ததாக இருக்கவேண்டும்.
33. அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.
34. அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக.
35. ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும்.
36. பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
37. அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
38. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின்மேல் இருக்கவேண்டும்.
39. மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக.
40. ஆரோனுடைய குமாரருக்கும், மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு, அங்கிகளையும், இடைக்கச்சைகளையும், குல்லாக்களையும் உண்டுபண்ணுவாயாக.
41. உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
42. அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.
43. ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.

Chapter 29

1. அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.
2. புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி,
3. அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
4. ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,
5. அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,
6. அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,
7. அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.
8. பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.
9. ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைபண்ணுவாயாக.
10. காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.
11. பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,
12. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
13. குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு,
14. காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய்; இது பாவநிவாரணபலி.
15. பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
16. அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
17. ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து,
18. ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும்.
19. பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
20. அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
21. பலிபீடத்தின்மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர் மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள் மேலும் தெளிப்பாயாக.
22. அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும்,
23. கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து,
24. அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,
25. பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.
26. ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.
27. மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.
28. அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும்.
29. ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.
30. அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன்.
31. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக.
32. அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள்.
33. அவர்களைப் பிரதிஷ்டைபண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.
34. பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம்மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.
35. இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,
36. பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரணபலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய்.
37. ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
38. பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
39. ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.
40. ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக.
41. மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய்.
42. உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.
43. அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
44. ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,
45. இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.
46. தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

Chapter 30

1. தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.
2. அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்கவேண்டும்.
3. அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,
4. அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக.
5. அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.
6. சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய்.
7. ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.
8. உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே.
9. அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம்.
10. வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறைதோறும் வருஷத்தில் ஒருமுறை அதின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
11. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
12. நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும்பொருளைக் கொடுக்கக்கடவன்.
13. எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
14. எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.
15. உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திபண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.
16. அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.
17. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
18. கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.
19. அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.
20. அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.
21. அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
22. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
23. மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,
24. இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
25. அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.
26. அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,
27. மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும்,
28. தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி,
29. அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்.
30. ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
31. இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.
32. இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவுங்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
33. இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார்.
34. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,
35. தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி,
36. அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.
37. இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
38. இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார்.

Chapter 31

1. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
3. விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,
4. இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,
5. மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.
6. மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
7. ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,
8. மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,
9. தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,
10. ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,
11. அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
12. மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:
13. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
14. ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
15. ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
16. ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
17. அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.
18. சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

Chapter 32

1. மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
2. அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
3. ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
4. அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
5. ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.
6. மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
7. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.
8. அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
9. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள்.
10. ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
11. மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?
12. மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.
13. உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.
14. அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.
15. பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
16. அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது.
17. ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான்.
18. அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான்.
19. அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;
20. அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.
21. பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.
22. அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.
23. இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.
24. அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.
25. ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,
26. பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
27. அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன் தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
28. லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள்.
29. கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான்.
30. மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.
31. அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்.
32. ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.
33. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.
34. இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.
35. ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

Chapter 33

1. கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டுவந்த ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள்.
2. நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.
3. ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார்.
4. துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
5. ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
6. ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
7. மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.
8. மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
9. மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார்.
10. ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள்தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
11. ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
12. மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே;
13. உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.
14. அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
15. அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்.
16. எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.
17. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.
18. அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்.
19. அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,
20. நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார்.
21. பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
22. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்;
23. பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.

Chapter 34

1. கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
2. விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.
3. உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார்.
4. அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான்.
5. கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்.
6. கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.
7. ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.
8. மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:
9. ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான்.
10. அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
11. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.
12. நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.
13. அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.
14. கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
15. அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;
16. அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
17. வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
18. புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே.
19. கர்ப்பந்திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
20. கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.
21. ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக.
22. கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
23. வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.
24. நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை.
25. எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம்.
26. உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார்.
27. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.
28. அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
29. மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய்மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.
30. ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள்.
31. மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான்.
32. பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய்மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
33. மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.
34. மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது,
35. இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

Chapter 35

1. மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
2. நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
3. ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.
4. பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:
5. உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,
6. இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும்,
7. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
8. விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
9. ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
10. உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
11. வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
12. பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
13. மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
14. வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,
15. தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,
16. தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
17. பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,
18. வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
19. பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான்.
20. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
21. பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
22. மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
23. இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
24. வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
25. ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
26. எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.
27. பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
28. பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகதைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
29. செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
30. பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
31. அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்யவும்,
32. இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திர வேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,
33. அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
34. அவன் இருதயத்திலும், தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
35. சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.

Chapter 36

1. அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.
2. பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.
3. அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
4. அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,
5. மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
6. அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
7. செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.
8. வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
9. ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
10. ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.
11. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.
12. காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.
13. ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.
14. வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
15. ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.
16. ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,
17. இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,
18. கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.
19. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.
20. வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.
21. ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.
22. ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.
23. வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,
24. அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;
25. வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
26. ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.
27. வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
28. வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.
29. அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.
30. அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.
31. சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,
32. வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.
33. நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.
34. பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.
35. இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,
36. அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
37. கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,
38. அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.

Chapter 37

1. பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.
2. அதை உள்ளும் புறம்பும் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
3. அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
4. சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
5. அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான்.
6. கிருபாசனத்தையும் பசும்பொன்னினால் பண்ணினான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.
7. தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே,
8. ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான்.
9. அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.
10. மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.
11. அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி,
12. சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி,
13. அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான்.
14. அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது.
15. மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி,
16. மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான்.
17. குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது.
18. குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது.
19. ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது.
20. விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
21. அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறுகிளைகளுக்கும் அப்படியே இருந்தது.
22. அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பசும்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டது.
23. அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான்.
24. அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.
25. தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏக வேலைப்பாடாயிருந்தது.
26. அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டுபண்ணி,
27. அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
28. சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
29. பரிசுத்த அபிஷேகதைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.

Chapter 38

1. தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது.
2. அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி,
3. அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.
4. வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,
5. அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,
6. அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி,
7. பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான்.
8. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.
9. பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான்.
10. அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
11. வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி.
12. மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
13. சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.
14. ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
15. பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று.
16. சுற்றுப்பிராகாரத்துத் தொங்குதிரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது.
17. தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது.
18. பிராகார வாசலின் தொங்குதிரை இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம்.
19. அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
20. வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம்.
21. மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே.
22. யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான்.
23. அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.
24. பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் யாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாய் இருந்தது.
25. சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.
26. எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.
27. அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று.
28. அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான்.
29. காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது.
30. அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும்,
31. சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.

Chapter 39

1. கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.
2. ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
3. அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.
4. இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.
5. அந்த ஏபோத்தின்மேலிருக்கும் விசித்திரமான கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.
6. இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
7. கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபகக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.
8. மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
9. அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,
10. அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
11. இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,
12. மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,
13. நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன் குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.
14. இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றில் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது.
15. மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
16. இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,
17. பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,
18. பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.
19. பின்னும் இரண்டு வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து,
20. வேறே இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,
21. மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, கட்டினார்கள்.
22. ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
23. அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்துக்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.
24. அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,
25. பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள்.
26. கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது.
27. ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,
28. மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,
29. திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.
30. பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,
31. அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
32. இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
33. பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
34. சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,
35. சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,
36. மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
37. சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,
38. பொற்பீடத்தையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும்,
39. வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
40. பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும்,
41. பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்.
42. கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள்.
43. மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.

Chapter 40

1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.
3. அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
4. மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
5. பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய்.
6. பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து,
7. தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,
8. சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,
9. அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.
10. தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும்.
11. தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக.
12. பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,
13. ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக.
14. அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி,
15. அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார்.
16. கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
17. இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது.
18. மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,
19. வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
20. பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
21. பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.
22. பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து,
23. அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கி வைத்தான்.
24. பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக் கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,
25. கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
26. பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து,
27. அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான்.
28. பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து,
29. தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான்.
30. அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.
31. அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
32. கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
33. பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரத்தின் தொங்குதிரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாய் மோசே வேலையை முடித்தான்.
34. அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.
35. மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமல் இருந்தது.
36. வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள்.
37. மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்.
38. இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.


Free counters!   Site Meter(April28th2012)