Home Churches About
 

2 நாளாகமம்

Chapter 1

1. தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
2. சாலொமோன் ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களுமான இஸ்ரவேல் அனைவரோடும் பேசி,
3. அவனும் அவனோடேகூடச் சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.
4. தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் அங்கே இருந்தது.
5. ஊரின் புத்திரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.
6. அங்கே சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திப் பலியிட்டான்.
7. அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.
8. சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர்.
9. இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.
10. இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.
11. அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்,
12. ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
13. இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக் கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை அரசாண்டான்.
14. சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
15. ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
16. சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டது; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள்.
17. அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.

Chapter 2

1. சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,
2. சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.
3. தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்.
4. இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன்.
5. எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும்.
6. வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக்கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே ஒழிய, வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?
7. இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் இரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
8. லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.
9. நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.
10. அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.
11. அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.
12. கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும், தமது ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியுமுடைய ஞானமுள்ள குமாரனை, தாவீதுராஜாவுக்குக் கட்டளையிட்டவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
13. இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன்.
14. அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீருதேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.
15. என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.
16. நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டிக் கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
17. தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
18. இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின் வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.

Chapter 3

1. பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.
2. அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.
3. தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
4. முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமும், நூற்றிருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
5. ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,
6. அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.
7. அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.
8. மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.
9. ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.
10. அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
11. அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
12. மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
13. இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தன; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.
14. இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.
15. ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
16. சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோத்தான்.
17. அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.

Chapter 4

1. அன்றியும் இருபதுமுழ நீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.
2. வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்புதொடங்கி மறுவிளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது.
3. அதின் கீழ்ப்புறமாய் ரிஷபங்களின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தன; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் இருந்தன.
4. அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தன; கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது.
5. அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.
6. கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான்; சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் அலைசுவார்கள்; கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளுகிறதற்கு இருந்தது.
7. பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து, அவைகளைத் தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
8. பத்து மேஜைகளையும் செய்து, அவைகளைத் தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் பண்ணினான்.
9. மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.
10. கடல்தொட்டியைக் கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான்.
11. ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பலெடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடித்தான்.
12. அவைகள் என்னவெனில், இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும்,
13. தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னலிலுமிருக்கிற நானூறு மாதளம்பழங்களுமே.
14. ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும்,
15. ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு ரிஷபங்களையும்,
16. செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காகச் சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான்.
17. யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.
18. இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது.
19. தேவனுடைய ஆலயத்துக்கு வேண்டிய சகல பணிமுட்டுகளையும்; பொற்பீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் மேஜைகளையும்,
20. முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும்,
21. சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,
22. பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.

Chapter 5

1. கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
2. பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர் எல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
3. அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
4. இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து,
5. பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியரே.
6. ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.
7. அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
8. கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.
9. பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
10. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
11. வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.
12. ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
13. அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.
14. அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

Chapter 6

1. அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
2. தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
3. ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.
4. அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
5. அவர்: நான் என் ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத் தெரிந்துகொள்ளாமலும்,
6. என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
7. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.
8. ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.
9. ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.
10. இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,
11. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,
12. கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக நின்று தன் கைகளை விரித்தான்.
13. சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப் பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையார் எல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:
14. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
15. தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.
16. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.
17. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய் என்று விளங்குவதாக.
18. தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?
19. என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.
20. உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.
21. உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக.
22. ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,
23. அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனுக்கு நீதியைச் சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவுந்தக்கதாய், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.
24. உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
25. பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக.
26. அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தேவரீர் தங்களைக் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால்,
27. பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.
28. தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும்,
29. எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,
30. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,
31. தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்குத் தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.
32. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம்பண்ணினால்,
33. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்குப் பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக.
34. நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால்,
35. பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.
36. பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில்,
37. அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,
38. தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,
39. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.
40. இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.
41. தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்குத் தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.
42. தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.

Chapter 7

1. சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.
2. கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.
3. அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
4. அப்பொழுது ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.
5. ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
6. ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச்செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடும்படியாகச் செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்துச் சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
7. சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜனபலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
8. அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,
9. எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.
10. ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடைகொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.
11. இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று.
12. கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.
13. நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது,
14. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
15. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
16. என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.
17. உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,
18. அப்பொழுது இஸ்ரவேலை அரசாளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன்.
19. நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில்,
20. நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்.
21. அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: கர்த்தர் இந்தத் தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான்.
22. அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

Chapter 8

1. சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு,
2. ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான்.
3. பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
4. அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.
5. சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,
6. பாலாத்தையும், தனக்கு இருக்கிற இரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரைவீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான்.
7. இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும்,
8. அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்கள் பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பகுதி கட்டச்செய்தான்.
9. இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுடைய சேர்வைக்காரரின் தலைவரும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரருக்கும் தலைவருமாயிருந்தார்கள்.
10. ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள்.
11. சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.
12. அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,
13. ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான்.
14. அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்துச் சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்.
15. சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள்.
16. இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோனின் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது.
17. பின்பு சாலொமோன் ஏதோம் தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான்.
18. அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

Chapter 9

1. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
2. அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
3. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தையும் அவன் அரமனையையும்,
4. அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவர்கள் வஸ்திரங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,
5. ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.
6. நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.
7. உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
8. உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப்பண்ண, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்.
9. அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை.
10. ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள்.
11. அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.
12. சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக்கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
13. வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.
14. அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.
15. ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.
16. அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல்நிறை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
17. ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
18. அந்தச் சிங்காசனத்துக்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதபடியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கைச்சாய்மானங்களும் இருந்தன; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது.
19. அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.
20. ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
21. ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
22. பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
23. சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்குப் பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.
24. வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
25. சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான்.
26. நதிதுவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் அவன் ஆண்டான்.
27. எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
28. எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது.
29. சாலொமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.
30. சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.
31. பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.

Chapter 10

1. ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.
2. ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.
3. ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
4. உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
5. அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
6. அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
7. அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.
8. முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனைபண்ணி,
9. அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
10. அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
11. இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.
12. மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.
13. ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.
14. வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி, என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான்.
15. ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.
16. ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
17. ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.
18. பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் புத்திரர் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.
19. அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டுக் கலகம்பண்ணிப் பிரிந்துபோயிருக்கிறார்கள்.

Chapter 11

1. ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான்.
2. தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:
3. நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி:
4. நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள்.
5. ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
6. அவன் பெத்லெகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,
7. பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,
8. காத்தும், மரேஷாவும், சீப்பும்,
9. அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,
10. சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி,
11. அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,
12. யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
13. இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.
14. லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும் விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்.
15. அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.
16. அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள்.
17. இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள்.
18. ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான்.
19. இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.
20. அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள்.
21. ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.
22. ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான்.
23. அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.

Chapter 12

1. ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
2. அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்.
3. அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.
4. அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்மட்டும் வந்தான்.
5. அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
6. அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்திக் கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.
7. அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
8. ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.
9. அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
10. அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
11. ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
12. அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது.
13. அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அரசாண்டான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.
14. அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.
15. ரெகொபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
16. ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Chapter 13

1. ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி,
2. மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.
3. அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம் பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான்.
4. அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள்.
5. இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க் கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?
6. ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
7. பேலியாளின் மக்களாகிய வீணர் அவனோடேகூடி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கக்கூடாமல் வாலவயதும் திடனற்ற மனதுமாயிருக்கையில், அவனுக்கு விரோதமாய்த் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.
8. இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன்கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்குத் தேவர்களாக உண்டாக்கின பொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே.
9. நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே.
10. எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே.
11. அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.
12. இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான்.
13. யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப்பண்ணினான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது.
14. யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.
15. யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது, தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.
16. இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர்களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
17. அபியாவும் அவனுடைய ஜனங்களும் அவர்களில் மகா சங்காரம்பண்ணினார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.
18. அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டார்கள்.
19. அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
20. அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ளமாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான்.
21. அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான்.
22. அபியாவின் மற்றக் கிரியைகளும், அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.

Chapter 14

1. அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது.
2. ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.
3. அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,
4. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து,
5. யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது.
6. கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
7. அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
8. யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள்.
9. அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.
10. அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.
11. ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
12. அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.
13. அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,
14. கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது.
15. மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

Chapter 15

1. அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,
2. அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
3. இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.
4. தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
5. அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,
6. ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார்.
7. நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.
8. ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,
9. அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.
10. ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,
11. தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,
12. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;
13. சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,
14. மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள்.
15. இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.
16. தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.
17. மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.
18. தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
19. ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.

Chapter 16

1. ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
2. அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:
3. எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.
4. பென்னாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.
5. இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.
6. அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
7. அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.
8. மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.
9. தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
10. அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.
11. ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
12. ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்.
13. ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்.
14. தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.

Chapter 17

1. அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான்.
2. அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான்.
3. கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,
4. தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.
5. ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது.
6. கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான்.
7. அவன் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும், நெதனெயேலையும், மிகாயாவையும்,
8. இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான்.
9. இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.
10. யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள்.
11. பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.
12. இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
13. யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.
14. தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்றுலட்சம்பேர் இருந்தார்கள்.
15. அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
16. அவனுக்கு உதவியாகக் கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
17. பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
18. அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
19. ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தவர்கள்.

Chapter 18

1. யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,
2. சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்.
3. எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா என்று கேட்டதற்கு, அவன்: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.
4. பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
5. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
6. பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
7. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
8. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
9. இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.
10. கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
11. சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப்போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
12. மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்.
13. அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
14. அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான்.
15. ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.
16. அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
17. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.
18. அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.
19. அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.
20. அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டுவந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார்.
21. அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார்.
22. ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.
23. அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.
24. அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
25. அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,
26. அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.
27. அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.
28. பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
29. இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.
30. சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
31. ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.
32. இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.
33. ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.
34. அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்.

Chapter 19

1. யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.
2. அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.
3. ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.
4. யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயெர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான்.
5. அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து,
6. அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.
7. ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்.
8. அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக்குறித்தும் விவாதவிஷயங்களைக் குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,
9. அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால்,
10. நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள்.
11. இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.

Chapter 20

1. இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்.
2. சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள்.
3. அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.
4. அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரைத் தேடவந்தார்கள்.
5. அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று:
6. எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது.
7. எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்தத் தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?
8. ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.
9. எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.
10. இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டு விலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.
11. இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.
12. எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
13. யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூடக் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.
14. அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:
15. சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது.
16. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள்.
17. இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான்.
18. அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள்.
19. கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள்.
20. அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.
21. பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்.
22. அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.
23. எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக் குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.
24. யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.
25. யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது; மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.
26. நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள்.
27. பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும், அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
28. அவர்கள் தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள்.
29. கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்தத் தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.
30. இவ்விதமாய்த் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.
31. யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.
32. அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
33. ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள்.
34. யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது.
35. அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான்.
36. தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.
37. மரேசா ஊரானாகிய தொதாவாவின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக்கூடாமற்போயிற்று.

Chapter 21

1. யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.
2. அவனுக்கு யோசபாத்தின் குமாரராகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர் இருந்தார்கள்; இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் குமாரர்.
3. அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியினால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.
4. யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.
5. யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
6. அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
7. கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
8. அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
9. அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான்.
10. ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லீப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.
11. அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்.
12. அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,
13. இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால்,
14. இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.
15. நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்குநாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.
16. அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.
17. அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.
18. இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.
19. அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.
20. அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

Chapter 22

1. எருசலேமின் குடிகள், அவன் இளையகுமாரனாகிய அகசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடே கூடவந்து பாளயமிறங்கின தண்டிலிருந்தவர்கள் மூத்தகுமாரரையெல்லாம் கொன்றுபோட்டார்கள்; இவ்விதமாய் அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அரசாண்டான்.
2. அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.
3. அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.
4. அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள்.
5. அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடேகூட, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
6. அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
7. அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்குத் தேவனால் உண்டான கேடாக லபித்தது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க அபிஷேகம்பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான்.
8. யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான்.
9. பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போயிற்று.
10. அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள்.
11. ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.
12. இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

Chapter 23

1. ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான்.
2. அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.
3. அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக்குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும்.
4. நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இவ்வாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியரும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு ஒலிமுகவாசல்களையும்,
5. மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.
6. ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக.
7. லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.
8. ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவுகொடுக்கவில்லை.
9. தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து,
10. அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலதுபக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான்.
11. பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.
12. ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,
13. இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.
14. ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
15. அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.
16. அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.
17. அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.
18. தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,
19. யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.
20. நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்துச் சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.
21. தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.

Chapter 24

1. யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
2. ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
3. அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
4. அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.
5. அவன் ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
6. அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கிவருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?
7. அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப் போட்டார்களே என்றான்.
8. அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,
9. கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.
10. அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.
11. வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
12. அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
13. அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.
14. அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அதினாலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்.
15. யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
16. அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
17. யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.
18. அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
19. அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.
20. அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
21. அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
22. அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
23. மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.
24. சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.
25. அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
26. அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.
27. அவன் குமாரரைப்பற்றியும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Chapter 25

1. அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.
2. அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.
3. ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.
4. ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம், அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.
5. அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.
6. இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.
7. தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.
8. போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.
9. அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்குத் தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
10. அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
11. அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்.
12. யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.
13. தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.
14. அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்குத் தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.
15. அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.
16. தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
17. பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான்.
18. அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
19. நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
20. ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்குத் தேவனாலே இப்படி நடந்தது.
21. அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.
22. யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
23. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,
24. தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட சகல பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும், பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
25. யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.
26. அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
27. அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
28. குதிரைகள்மேல் அவனை எடுத்துவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

Chapter 26

1. அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
2. ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
3. உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.
4. அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
5. தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார்.
6. அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
7. பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.
8. அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.
9. உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.
10. அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.
11. உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையும் இருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.
12. பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
13. இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
14. இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
15. கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.
16. அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
17. ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,
18. ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.
19. அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.
20. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான்.
21. ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
22. உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.
23. உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Chapter 27

1. யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள்.
2. அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
3. அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.
4. யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
5. அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள்.
6. யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.
7. யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
8. அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
9. யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Chapter 28

1. ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
2. இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.
3. அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு,
4. மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.
5. ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.
6. எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.
7. அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.
8. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.
9. அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு எதிராகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.
10. இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?
11. ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.
12. அப்பொழுது எப்பிராயீம் புத்திரரின் தலைவரில் சிலபேராகிய யோகனானின் குமாரன் அசரியாவும், மெஷிலெமோத்தின் குமாரன் பெரகியாவும், சல்லூமின் குமாரன் எகிஸ்கியாவும், அத்லாயின் குமாரன் அமாசாவும் யுத்தத்திலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி,
13. அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.
14. அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.
15. அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்து விட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.
16. அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான்.
17. ஏதோமியரும் கூடவந்து, யூதாவை முறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துப் போயிருந்தார்கள்.
18. பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களின்மேல் விழுந்து, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.
19. யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.
20. அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.
21. ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.
22. தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.
23. எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.
24. ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி,
25. அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.
26. அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய ஆதியோடந்தமான சகல நடபடிகளும் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
27. ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Chapter 29

1. எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
2. அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
3. அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
4. ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
5. அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
6. நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள்.
7. அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
8. ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார்.
9. இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.
10. இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண என் மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.
11. என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.
12. அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும்,
13. எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,
14. ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் ஆகிய இந்த லேவியர் எழும்பி,
15. தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்.
16. ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்.
17. முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள்.
18. அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து,
19. ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தம்பண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.
20. அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.
21. அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.
22. அப்படியே ஆசாரியர் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்துப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்.
23. பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.
24. இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள்.
25. அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது.
26. அப்படியே லேவியர் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள்.
27. அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத் தொடங்கினது.
28. கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
29. பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
30. பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள்.
31. அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும், இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்.
32. சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.
33. அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டையாக்கப்பட்டது.
34. ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள்.
35. சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது.
36. தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து எசேக்கியாவும் ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தைச் செய்யும்படியான யோசனை சடுதியாய் உண்டாயிற்று.

Chapter 30

1. அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி, எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.
2. பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.
3. ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக்கூடாமற்போயிற்று.
4. இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.
5. எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும் பறைசாற்றுவிக்கத் தீர்மானம்பண்ணினார்கள்.
6. அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.
7. தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.
8. இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்தஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்.
9. நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்தத் தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.
10. அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.
11. ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.
12. யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.
13. அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள்.
14. அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலே போட்டார்கள்.
15. பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,
16. தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்.
17. சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.
18. அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.
19. எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.
20. கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.
21. அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.
22. கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழுநாளளவும் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.
23. பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்.
24. யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியரில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.
25. யூதாவின் சபையனைத்தும், ஆசாரியரும், லேவியரும், இஸ்ரவேலிலிருந்து வந்தவர்களுடைய சபையனைத்துமாகிய இஸ்ரவேல் தேசத்திலிருந்துவந்த அந்நியரும், யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள்.
26. அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.
27. லேவியரான ஆசாரியர்கள் எழுந்து நின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.

Chapter 31

1. இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீனெங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.
2. எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும், அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.
3. ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான்.
4. ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.
5. இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.
6. யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.
7. மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.
8. எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.
9. அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,
10. சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.
11. அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.
12. அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.
13. ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
14. கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.
15. அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.
16. வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.
17. தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,
18. அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.
19. ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க, ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்.
20. இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.
21. அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்திபெற்றான்.

Chapter 32

1. இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.
2. சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது,
3. நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள்.
4. அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள்.
5. அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,
6. ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
7. நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.
8. அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
9. இதின்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைபோட்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்துக்கும், எருசலேமிலுள்ள யூதா ஜனங்கள் யாவரிடத்துக்கும் தன் ஊழியக்காரரை அனுப்பி:
10. அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?
11. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?
12. அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியருக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா?
13. நானும் என் பிதாக்களும் தேசத்துச் சகல ஜனங்களுக்கும் செய்ததை அறியீர்களோ? அந்தத் தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ?
14. உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?
15. இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக்கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,
16. அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.
17. தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.
18. அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி, கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப் பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,
19. மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.
20. இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள்.
21. அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.
22. இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
23. அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்.
24. அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
25. எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
26. எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.
27. எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,
28. தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகல வகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
29. அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகா திரளான ஆஸ்தியைக் கொடுத்தார்.
30. இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.
31. ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.
32. எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.
33. எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Chapter 33

1. மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
2. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
3. அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,
4. எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,
5. கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.
6. அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.
7. இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்றும்,
8. நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.
9. அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.
10. கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.
11. ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
12. இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.
13. அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
14. பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்குதொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,
15. கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப் புறம்பாகப் போடுவித்து,
16. கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.
17. ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.
18. மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப் பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
19. அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.
20. மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
21. ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
22. அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோலக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.
23. தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.
24. அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
25. அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

Chapter 34

1. யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
2. அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.
3. அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான்.
4. அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,
5. பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான்.
6. அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிமட்டும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான்.
7. அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான்.
8. அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான்.
9. அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பித் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து,
10. வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலைசெய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள்.
11. அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.
12. இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள்.
13. அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியக்காரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.
14. கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான்.
15. அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான்.
16. சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்குக் கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.
17. கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல்,
18. ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான்.
19. நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
20. இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:
21. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்குக் கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
22. அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள்.
23. அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது,
24. இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.
25. அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார்.
26. கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
27. இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாகத் தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
28. இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.
29. அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,
30. ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.
31. ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி,
32. எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்தத் தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள்.
33. யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.

Chapter 35

1. அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.
2. அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனைசெய்யத் திட்டப்படுத்தி,
3. இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,
4. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,
5. ஜனங்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த ஸ்தலத்திலே பிதாக்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று,
6. பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்பண்ணி, மோசேயைக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான்.
7. வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.
8. அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்கா பலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
9. கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.
10. இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,
11. பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர் தோலுரித்தார்கள்.
12. மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.
13. அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள்.
14. பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும் செலுத்துகிறதில், இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
15. தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக்கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.
16. அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது.
17. அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழுநாளளவும் ஆசரித்தார்கள்.
18. தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.
19. யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
20. யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான்.
21. அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான்.
22. ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான்.
23. வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.
24. அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.
25. எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
26. யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்,
27. அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

Chapter 36

1. அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
2. யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்றுமாதம் எருசலேமில் அரசாண்டான்.
3. அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,
4. அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
5. யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
6. அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
7. கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவைகளைப் பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான்.
8. யோயாக்கீமுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோயாக்கீன் ராஜாவானான்.
9. யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
10. மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்குக் கொண்டுவரப்பண்ணி, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
11. சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு,
12. தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்குமுன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.
13. தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
14. ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
15. அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.
16. ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.
17. ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
18. அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகள் அனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
19. அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.
20. பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.
21. கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.
22. எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
23. அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்.


Free counters!   Site Meter(April28th2012)