Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

ரூத்து (ரூத்)

அதிகாரம் 2

அயல்நாட்டுப் பெண்ணுக்குக் கிடைத்த பரிவு
1 நகோமிக்குப் போவாசு என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும் செல்வாக்கும் உடையவர்: எலிமலேக்கின் வழியில் உறவானவர். 2 ரூத்து நகோமியிடம், நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண்டுகொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும் எனறார். அவரும், போய் வா, மகளே என்றார் 3 ரூத்து ஒரு வயலுக்குப் போய் அறுவடையாளர்கள் பின்னால் சென்று, அவர்கள் சிந்திய கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். தற்செயலாக அவர் போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினரான போவாசுக்கு உரியதாய் இருந்தது. 4 சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! என்றார். அவர்களும், ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக! என்றார்கள். 5 அவர் அறுவடையாள்களின் கண்காணியிடம் இவள் யார் வீட்டுப் பெண்? என்று கேட்டார். 6 அதற்கு அறுவடையாள்களுக்கு மேற்பார்வையாளராய் நியமிக்கப்பட்டிருந்த வேலையாள், இவள்தான் மோவாபு நாட்டிலிருந்து திரும்பியுள்ள நகோமியோடு வந்திருக்கும் மோவாபியப் பெண். 7 அறுவடையாள்களின் பின்னே சென்று, சிந்தும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்வதற்கு என்னிடம் அனுமதி கேட்டாள். காலை முதல் இதுவரையில் அவள் சிறிதும் ஓய்வின்றிக் கதிர் பொறுக்கிக் கொண்டிருந்தாள். இப்போதுதான் அவள் பந்தல் நிழலில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள், என்றார். 8 பிறகு போவாசு ரூத்தை நோக்கி, பெண்ணே நான் சொல்வதைக் கேள். இந்த வயலைத் தவிர வேறு எந்த வயலுக்கும் போய் நீ கதிர் பொறுக்க வேண்டாம். என் வயலில் வேலை செய்யும் பெண்களுடன் இங்கேயே இரு. 9 அறுவடையாளர்கள் வேலை செய்யும் இடத்தை நன்றாகக் கவனித்து, அங்கே போய் அவர்கள் பின்னால் கதிர் பொறுக்கும் பெண்களோடு நீயும் இரு. எந்த வேலைக்காரனும் உனக்குத் தொந்தரவு கொடுக்க கூடாதென நான் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால் அவர்கள் நிரப்பி வைத்துள்ள பாண்டங்களிலிருந்து தண்ணீர் அருந்திக்கொள், என்றார்.10 ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி என்னை ஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர். அயல் நாட்டுப்பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்? என்று கேட்டார். 11 போவாசு, உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும். 12 நீ செய்துள்ள அனைத்திற்கும் ஆண்டவர் உனக்குத் தகுந்த பலன் அளிப்பார். இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருடைய இறக்கைகளின் அரவணைப்பை நீ தேடி வந்திருக்கிறாய். அவர் உனக்கு முழு நிறைவான பலனை அருள்வார் என்றார். 13 அதற்கு ரூத்து, ஐயா, கருணைமிகும் கண்கொண்டு நோக்கின்றீர். உம்முடைய பணிப்பெண் அல்லாத என்னைக் கனிமொழி கொண்டே தேற்றுகின்றீர் என்றார். 14 உணவு வேளை வந்ததும் போவாசு ரூத்திடம், இங்கே வந்து இந்த அப்பத்தை எடுத்துப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்துச் சாப்பிடு என்றார். அவரும் அவ்வாறே போய் அறுவடையாள்களுடன் உட்கார்ந்து கொண்டார். அவர் பசிதீர உண்டபின்னும் சிறிதளவு உணவு எஞ்சியது. 15 பிறகு அவர் மீண்டும் கதிர் பொறுக்க எழுந்து சென்றார். போவாசு தம் அறுவடையாள்களிடம், அரிகட்டுகள் கிடக்குமிடத்தில் அவள் கதிர் பொறுக்கட்டும். அவளை யாரும் அதட்ட வேண்டாம். 16 மேலும் கட்டுக்களிலிருந்து சில கதிர்களை உருவிப்போட்டு விடுங்கள். அவள் பொறுக்கி கொள்ளட்டும். யாரும் அவளை தடுக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். 17 அவருடைய வயலில் ரூத்து மாலை வரை கதிர்களை பொறுக்கிச் சேர்த்தார். அவற்றைத் தட்டி புடைத்து நிறுத்த போது வாற்கோதுமை ஏறத்தாழ இருபது படி இருந்தது. 18 அவர் அதை எடுத்துக் கொண்டு ஊருக்குள் சென்று தம் மாமியாரிடம் காட்டினார்: அவர் உண்ட பின் எடுத்து வைத்திருந்த உணவையும் அவரிடம் கொடுத்தார். 19 அவர்தம் மாமியார் அவரிடம், இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்? என்று கேட்டுவிட்டு, உனக்குப் பரிவு காட்டியவருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக! என்றார். ரூத்து தம் மாமியாரிடம் தாம் கதிர் பொறுக்கின வயல் இன்னாருடையது என்பதைத் தெரிவிப்பதற்காக, நான் இன்று கதிர் பொறுக்கின வயலின் உரிமையாளர் போவாசு என்றார்.20 நகோமி அவரிடம், அப்படியா? வாழ்வோருக்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக என்றார். மேலும் அவர், போவாசு நமக்கு நெருங்கிய உறவினர்: நம்மைக் காப்பாற்றும் கடமையுள்ள முறை உறவினருள் ஒருவர் என்றார். 21 மோவாபியரான ரூத்து மீண்டும் அவர் அறுவடை முடியும்வரை தம்முடைய ஆள்களுடன் நான் கதிர் பொறுக்கிக் கொள்ளலாமென்று என்னிடம் சொன்னார் என்றார். 22 நகோமி தம் மருமகள் ரூத்திடம் ஆம் மகளே நீ அவருடைய பணிப் பெண்களோடு இருப்பதுதான் நல்லது. வேறொருவனது வயலுக்கு நீ போனால், அங்குள்ள ஆண்கள் உனக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடும் என்று சொன்னார். 23 அவ்வாறே ரூத்து போவாசின் பணிப்பெண்களை விட்டுப் பிரியாதிருந்து, வாற்கோதுமையும் கோதுமையும் அறுவடையாகும் வரை கதிர் பொறுக்கி வந்தார்: தம் மாமியாருடனேயே தங்கியிருந்தார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!