Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 52

எருசலேமின் மீட்பு
1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்: திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்: விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான்.2 சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்: அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.3 ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்: பணமின்றி மீட்கப்படுவீர்கள்.4 ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்: அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத்தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்: அவர்களை ஆளுவோர் நற்பெருமை பேசுகின்றனர்: எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகின்றது, என்கிறார் ஆண்டவர்.6 ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்: இதோ, நான் இங்கே இருக்கின்றேன்.7 நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, உன் கடவுள் அரசாளுகின்றார் என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!8 இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்: அவர்கள் அக்களிப்பு ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்: ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர்.9 எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்: ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்: எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.10 பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்: மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.11 திரும்பிச் செல்லுங்கள், திரும்பிச் செல்லுங்கள்: அங்கிருந்து வெளியேறுங்கள்: தீட்டானதைத் தொடாதீர்கள்: ஆண்டவரின் கலங்களை ஏந்திச்செல்வோரே, அந்நாட்டினின்று வெளியேறுங்கள்: உங்களையும் தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்.12 நீங்கள் அவசரப்பட்டு வெளியேறப் போவதில்லை: தப்பியோடுவது போல் செல்வதுமில்லை: ஏனெனில், ஆண்டவர் உங்கள்முன்னே செல்வார்: இஸ்ரயேலின் கடவுள் உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.

துன்புறும் ஊழியர்
13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்: அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்: அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது: மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்: அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்: ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்: தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!