Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சபை உரையாளர் (சங்தகத் திருவுரை ஆகமம்)

அதிகாரம் 3

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு
1 ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.2 பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்: நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்:3 கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்:4 இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்: அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்: துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்:5 கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்: அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்:6 தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்: காக்க ஒரு காலம், தூக்கியெறிய ஒரு காலம்:7 கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்: பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்:8 அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்: போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.9 வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன?10 மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன்.11 கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்: காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்தியிருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.12 எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன்.13 உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை.14 கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.15 இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார்.

உலகில் காணப்படும் அநீதி
16 வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது.17 கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.18 மனிதர் விலங்கைப் போன்றவர் என்பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.19 மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது: மனிதரும் மடிகிறார்: விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை: எல்லாம் வீணே.20 எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின: எல்லாம் மண்ணுக்கே மீளும்.21 மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்?22 ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!