Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருவெளிப்பாடு

அதிகாரம் 15

ஏழு வாதைகள்
1 பின்பு பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்: ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.2 நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின்மீது அதன் சிலைமீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள்மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக்கடல் அருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன்.3 அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்: கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை.4 ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதார் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.5 இதன் பின் விண்ணகத்தில் உள்ள கோவில், அதாவது சந்திப்புக் கூடாரம் திறக்கக் கண்டேன்.6 அப்பொழுது ஏழு வாதைகளைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் கோவிலிலிருந்து வெளியே வந்தார்கள்: அவர்கள் தூய்மையான, பளபளப்பான மெல்லிய ஆடையும் மார்பில் பொன்பட்டையும் அணிந்திருந்தார்கள்.7 அந்த நான்கு உயிர்களுள் ஒன்று என்றென்றும் வாழும் கடவுளின் சீற்றத்தால் நிறைந்த ஏழு பொன் கிண்ணங்களை அந்த ஏழு வான தூதர்களுக்கும் அளித்தது.8 கடவுளின் மாட்சியும் வல்லமையும் கோவிலைப் புகையால் நிரப்பின. அதனால் அந்த ஏழு தூதர்களும் கொண்டிருந்த ஏழு வாதைகளும் முடிவுறும்வரை ஒருவரும் கோவிலுள் நுழைய முடியவில்லை.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!