Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 55

ஆண்டவரின் பேரிரக்கம்
1 தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்: தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.2 உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்: நல்லுணவை உண்ணுங்கள்: கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.3 எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்: கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்: தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.4 நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.5 இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்: உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.6 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்: அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.7 கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக: அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்: அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்: அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்: ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.8 என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.10 மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை.11 அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.12 மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள்: அமைதியுடன் நடத்திச் செல்லப் படுவீர்கள்: மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்: காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.13 முட்செடிக்குப் பதிலாக தேவதாரு மரம் முளைத்து வளரும்: காஞ்சொறிக்குப் பதிலாக நறுமணச் செடி துளிர்த்து வளரும்: இது, ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும்: அழிவில்லா, என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!