Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

யோபு

அதிகாரம் 2

சாத்தான் யோபை மீண்டும் சோதித்தல்
1 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்.2 ஆண்டவர் சாத்தானிடம் எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், உலகைச் சுற்றி உலவி வருகிறேன் என்றான்.3 அப்போது ஆண்டவர் சாத்தானிடம், என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப்போல் மாசற்றவனும் நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனுமில்லை. காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும், அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்" என்றார். 4 சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம், தோலுக்குத் தோல்: எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார்.5 உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி என்றான்.6 ஆண்டவர் சாத்தானை நோக்கி, இதோ! அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டுவை என்றார்.7 சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான். அவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான்.8 ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார்.9 அப்போது அவரின் மனைவி அவரிடம், இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே? என்றாள்.10 ஆனால் அவர் அவளிடம், நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது? என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.11 அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர். தேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது, நாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர் தம்மிடமிருந்து கிளம்பி வந்து, அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர்.12 தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் வாய் விட்டு அழுதார்கள்: ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள்.13 அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வாhத்தைகூட அவருடன் பேசவில்லை.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!