Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் | பாட்டு)

அதிகாரம் 2

பாடல் 6: தலைவன் - தலைவி உரையாடல்
1 சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்: பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர்.2 முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல், மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள்.3 காட்டு மரங்களிடை நிற்கும் கிச்சிலிபோல், காளையருள் இலங்குகின்றார் என் காதலர்தாம். அவரது நிழலிலே அமர்வதில் இன்புறுவேன்: அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.

பாடல் 7: தலைவி கூற்று
4 திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள்ளே என்னை அவர் அழைத்துச் சென்றார்: அவர் என் மேல் செலுத்திய நோக்கில் காதல் இருந்தது!5 திராட்சை அடைகள் கொடுத்து என்னை வலிமைப்படுத்துங்கள்: கிச்சிலிப்பழங்களால் எனக்கு ஊக்கமூட்டுங்கள். காதல் நோயால் தான் மிகவும் நலிந்து போனேன்.6 இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.7 எருசலேம் மங்கையரே! கலைமான்கள்மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்: காதலைத் தட்டி எழுப்பாதீர்: தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்.

பாடல் 8: தலைவி கூற்று
8 என் காதலர் குரல் கேட்கின்றது: இதோ, அவர் வந்துவிட்டார்: மலைகள்மேல் தாவி வருகின்றார்: குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.9 என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்: பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்: பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார்.10 என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.11 இதோ, கார்காலம் கடந்துவிட்டது: மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.12 நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன: பாடிமகிழும் பருவம் வந்துற்றது: காட்டுப் புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது:13 அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன: திராட்சை மலர்கள் மணம் தருகின்றன: விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.

பாடல் 9: தலைவன் கூற்று
14 பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை: எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!

பாடல் 10: தலைவி கூற்று
15 பிடியுங்கள் எமக்காக நரிகளை: குள்ளநரிகளைப் பிடியுங்கள்: அவை திராட்சைத் தோட்டங்களை அழிக்கின்றன: எம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.

பாடல் 11: தலைவி கூற்று
16 என் காதலர் எனக்குரியர்: நானும் அவருக்குரியள்: லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.17 பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக, என் காதலரே! மலைமுகட்டுக் கலைமான்போன்று அல்லது மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!